யாரும் தோற்க விரும்புவதில்லை: தோனி மனைவி சாக்ஷி உருக்கம்
By DIN | Published On : 26th October 2020 05:28 PM | Last Updated : 26th October 2020 05:28 PM | அ+அ அ- |

ஐபிஎல்-லில் பிளேஆஃப் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி.
துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றாலும் ராஜஸ்தானின் வெற்றியால் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி. அதில் அவர் கூறியதாவது:
இது ஓர் விளையாட்டு தான். ஒரு நாள் நீங்கள் வெல்வீர்கள், இன்னொரு நாள் தோற்பீர்கள். பல வருடங்களாக மகத்தான வெற்றிகளும் சில வேதனையான தோல்விகளும் சாட்சிகளாக உள்ளன. ஒன்றைக் கொண்டாடுகிறோம், இன்னொன்றால் மனம் உடைந்து போகிறோம்.
சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோற்கிறார்கள், மற்றவர்கள் தவறவிடுகிறார்கள், இது ஒரு விளையாட்டு. விளையாட்டுத்தன்மையின் மகத்துவத்தை இழக்காமல் உணர்ச்சிவசப்படுங்கள். இது ஒரு விளையாட்டு தான்.
யாரும் தோற்க விரும்புவதில்லை. அனைவராலும் வெற்றியாளர்களாக முடியாது. உண்மையான போராளிகள் போராடப் பிறக்கிறார்கள். நம் மனத்தில் அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள் என்றார்.