இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் மும்பைக்குக் கிடைக்கவுள்ள பரிசு!

சிஎஸ்கேவுடன் கொல்கத்தா தோற்றால் அதிகபட்சமாக மூன்று அணிகளால் மட்டுமே 16 புள்ளிகள் பெற முடியும்.
இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் மும்பைக்குக் கிடைக்கவுள்ள பரிசு!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பரிசு ஒன்று காத்திருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

மும்பை அணி, 16 புள்ளிகளுடன் +1.186 நெட் ரன்ரேட் வைத்துள்ளது. இந்த ஒரு காரணத்தால் மும்பை அணி பிளேஆஃப்புக்குக் கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது என்று கூறலாம். நேற்றைய வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை அணி. எனினும் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் தலா 14 ஆட்டங்களில் விளையாடும்போது குறைந்தது 9 வெற்றிகளைப் பெற்ற அணியே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும். 

கடந்த ஞாயிறன்று ராஜஸ்தானுக்கு எதிரான மும்பை அணி தோல்வியடைந்தது. இதனால் சிஎஸ்கே அணி பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுவிட்டால் மும்பை இந்தியன்ஸ் அணி 9 வெற்றிகளைப் பெறுவதற்கு முன்பே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். சிஎஸ்கேவுடன் கொல்கத்தா அணி தோல்வியடைந்தால் அந்த அணியால் 16 புள்ளிகளைப் பெற முடியாது. இந்நிலையில் தற்போது 16 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிட முடியும்.

மும்பைக்குப் பின்னால் 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர் - தில்லி ஆகிய இரு அணிகளில் ஓர் அணியால் மட்டுமே 16 புள்ளிகளைப் பெற முடியும். நவம்பர் 2 அன்று இரு அணிகளும் மோதுகின்றன. இதனால் இந்த இரு அணிகளில் ஓர் அணியால் மட்டுமே அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும்.

பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் மும்பைக்குப் பாதிப்பு நேராது. சிஎஸ்கேவுடன் கொல்கத்தா தோற்றால் அதிகபட்சமாக மூன்று அணிகளால் மட்டுமே 16 புள்ளிகள் பெற முடியும். இதனால் மும்பை அணி பிளேஆஃப்புக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

மும்பை அணி 9-வது வெற்றியைப் பெறும் முன்பே இன்று சிஎஸ்கே அணி வெற்றி பெற்று பிளேஆஃப்புக்குத் தகுதி என்கிற பரிசை மும்பைக்கு வழங்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com