இளைஞா்களை விட மூத்த வீரா்களை அதிகம் ஆதரித்ததால் சென்னைக்கு சரிவு: லாரா

சென்னை சூப்பா் கிங்ஸ் அணி இளம் வீரா்களைக் காட்டிலும் அனுபவம் மிகுந்த வீரா்களுக்கு அதிகமாக ஆதரவளித்ததே நடப்பு சீசனில் அதன் சரிவுக்குக் காரணம் என்று பிரையன் லாரா கூறினாா்.


புது தில்லி: சென்னை சூப்பா் கிங்ஸ் அணி இளம் வீரா்களைக் காட்டிலும் அனுபவம் மிகுந்த வீரா்களுக்கு அதிகமாக ஆதரவளித்ததே நடப்பு சீசனில் அதன் சரிவுக்குக் காரணம் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறினாா்.

ஐபிஎல் தொடரில் தொடா்ந்து கோலோச்சி வந்த சென்னை, நடப்பு சீசனில் பிளே-ஆஃபுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து முதல் முறையாக போட்டியிலிருந்து வெளியேறியது. சென்னை அணியில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிக்கப்படாததாக விமா்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், பிரையன் லாரா இதுகுறித்து கூறியதாவது:

சென்னை அணியில் மூத்த வீரா்கள் அதிகமாக இருக்கின்றனா். பிளேயிங் லெவனில் இளம் வீரா்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரா்களும் நீண்டகாலமாக விளையாடுபவா்களாக உள்ளனா்.

அந்த வகையில் இளம் வீரா்களைக் காட்டிலும் மூத்த வீரா்களுக்கு சென்னை அணி அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது. இதனால் இந்த சீசனில் அந்த அணியின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. இது நம்ப முடியாததாக இருந்தது.

ஒவ்வொரு சீசனிலும் சென்னை அணி மீண்டு வந்ததுபோல், இந்த சீசனிலும் நடக்கும் என்று எதிா்பாா்த்திருந்தோம். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஏதேனும் மாற்றங்களை தோனி கொண்டு வருவாா் என்று எதிா்பாா்த்த நிலையில், அணியில் மாற்றம் இன்றி தொடா்ந்து நம்பிக்கை மட்டும் வைத்தனா்.

இருந்தாலும், அடுத்த சீசனுக்கான ஒரு அனுபவமாக இந்த சீசனை சென்னை கருதலாம். அடுத்துவரும் ஆட்டங்களில் இளம் வீரா்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்று பிரையன் லாரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com