32 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத்: பெங்களூரு வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதரபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சன்ரைசர்ஸ் ஹைதரபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற வார்னர் முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி, முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். வார்னர் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கினார். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவ் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். ஆனால், அடுத்த பந்தை நேராக அடிக்க, பந்து உமேஷ் யாதவ் கையில் பட்டு ஸ்டம்புகளைத் தகர்த்தது. அந்த நேரம் வார்னர் கிரீஸைவிட்டு வெளியே இருந்ததால், ரன் அவுட் ஆனார். 

இதையடுத்து, மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோவ் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். பேர்ஸ்டோவ் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க பாண்டே ஒத்துழைப்பு தந்து விளையாடினார். 2-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹல் பந்தில் பாண்டே 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, இளம் பிரியம் கர்க் நிதானம் காட்ட இன்னிங்ஸ் பொறுப்பை பேர்ஸ்டோவ் எடுத்துக்கொண்டார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உமேஷ் யாதவ் பந்தில் பவுண்டரி அடித்த அவர் அரைசதத்தை எட்டினார்.

2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஹைதராபாத் அணியே ஆதிக்கத்தில் இருந்தது.

இந்த நிலையில், 16-வது ஓவரை வீசிய சாஹல் 2-வது பந்தில் பேர்ஸ்டோவை போல்டாக்கினார். அவர் 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்திலேயே விஜய் சங்கரையும் போல்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் சாஹல். 

அடுத்த ஓவரில் இளம் பிரியம் கர்க் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அபிஷேக் சர்மாவும் 7 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதையடுத்து, 18-வது ஓவரை வீசிய சைனி, புவனேஷ்வர் குமார் மற்றும் ரஷித் கானை போல்டாக்கி அசத்தினார். இதனால், ஆட்டம் பெங்களூரு கட்டுப்பாட்டுக்கு வந்தது.

பந்துவீசும்போது காயம் ஏற்பட்டதால், மார்ஷால் களமிறங்கவில்லை. இதையடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், வேறு வழியில்லாமல் அவர் களமிறங்கினார். ஆனால், முதல் பந்திலேயே காயத்துடன் ஆட்டமிழந்தார் மார்ஷ்.

இதையடுத்து, 1 விக்கெட் மட்டுமே மீதமுள்ள நிலையில் கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஸ்டெயின் வீசிய அந்த ஓவரின் 4-வது பந்தில் கடைசி விக்கெட்டாக சந்தீப் சர்மா ஆட்டமிழந்தார். 121 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஹைதராபாத் அடுத்த 32 ரன்களுக்குள் கடைசி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com