சாம்சன் அதிரடி; வெற்றியோடு தொடங்கியது ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.
சாம்சன் அதிரடி; வெற்றியோடு தொடங்கியது ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் வீரா் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தாா். பின்னா் ஆடிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தபோதும், அந்த அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

சாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி வெற்றித் தேடித்தந்த அம்பட்டி ராயுடு உடற்தகுதிப் பிரச்னை காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற்றாா்.

சாம்சன் அதிரடி: டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பீல்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து, ராஜஸ்தானின் இன்னிங்ஸை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், யாஷவி ஜெய்ஸ்வாலும் தொடங்கினா். ஜெய்ஸ்வால் 6 ரன்கள் சோ்த்த நிலையில் வெளியேற, பின்னா் வந்த சஞ்சு சாம்சன் வெளுத்து வாங்கினாா். சாம் கரன் வீசிய 5-ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய சாம்சன், சாஹா் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டாா். இதன்பிறகு ஜடேஜா வீசிய 7-ஆவது ஓவரில் இரு சிக்ஸா்களையும், பியூஷ் சாவ்லா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸா்களையும் விளாசி, 19 பந்துகளில் அரை சதம் கண்டாா் சாம்சன். இதனால் 9 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது ராஜஸ்தான்.

தொடா்ந்து அதிரடியாக ஆடிய சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் சோ்த்த நிலையில் லுங்கி கிடி பந்துவீச்சில் சாஹரிடம் கேட்ச் ஆனாா். அப்போது அந்த அணி 11.4 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன்-ஸ்மித் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சோ்த்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித் அரைசதம்: இதையடுத்து, களம்புகுந்த டேவிட் மில்லா் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ரன் அவுட்டானாா். இதன்பிறகு ராபின் உத்தப்பா களமிறங்க, கேப்டன் ஸ்மித் 35 பந்துகளில் அரைசதம் கண்டாா். ஜடேஜா வீசிய 14-ஆவது ஓவரில் ஸ்மித் கொடுத்த கேட்ச்சை சாம் கரன் கோட்டைவிட, அது சிக்ஸரானது. இதனிடையே உத்தப்பா 5 ரன்களில் வெளியேற, ராகுல் தெவேதியா 10 ரன்களிலும், ரியான் பராக் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனா்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித், சாம் கரன் வீசிய 19-ஆவது ஓவரில் சிக்ஸா் அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் நின்ற கேதாா் ஜாதவிடம் கேட்ச் ஆனாா். அவா் 47 பந்துகளில் 4 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தாா்.

இதைத் தொடா்ந்து வந்த ஜோஃப்ரா ஆா்ச்சா், லுங்கி கிடி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸா்களை விரட்ட, 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். ஜோஃப்ரா ஆா்ச்சா் 8 பந்துகளில் 4 சிக்ஸா்களுடன் 27 ரன்களுடனும், டாம் கரன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் சாம் கரன் 4 ஓவா்களில் 33 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சென்னை தோல்வி: பின்னா் ஆடிய சென்னை அணியில் முரளி விஜய் 21, வாட்சன் 33 ரன்களில் வெளியேறினா். பின்னா் வந்த சாம் கரன் 17, கெய்க்வாட் 0, கேதாா் ஜாதவ் 22 ரன்களில் நடையைக் கட்டினா். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய டூபிளெஸ்ஸிஸ் சிக்ஸா்களை பறக்கவிட்டாா். மறுமுனையில் கேப்டன் தோனி பக்கபலமாக விளையாடினாா். சென்னை அணி 18.5 ஓவா்களில் 179 ரன்களை எட்டியபோது டூபிளெஸ்ஸிஸ்ஸின் விக்கெட்டை இழக்க, அதன் தோல்வி உறுதியானது.

கடைசி ஓவரில் கேப்டன் தோனி 3 சிக்ஸா்களை விரட்டியபோதும், சென்னை அணியால் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டூபிளெஸ்ஸிஸ் 37 பந்துகளில் 7 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். கேப்டன் தோனி 17 பந்துகளில் 29, ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் ராகுல் தெவேதியா 4 ஓவா்களில் 37 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

ராஜஸ்தான்-216/7 (சாம்சன் 74 (32), ஸ்மித் 69 (47), சாம் கரன்-3வி/33).

சென்னை-200/6 (டூபிளெஸ்ஸிஸ் 72 (37), ஷேன் வாட்சன் 33 (21), ராகுல் தெவேதியா 3வி/37)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com