தோல்வியால் பாதிப்பில்லை
By DIN | Published On : 29th September 2020 05:04 AM | Last Updated : 29th September 2020 05:04 AM | அ+அ அ- |

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால்
ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கண்ட தோல்வி அணியின் போக்கில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால் கூறினார்.
ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் 50 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய மயங்க் அகர்வால் அணிக்கு மிகப்பெரிய பலமாகத் திகழ்ந்தார். இந்நிலையில், ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கண்ட தோல்வி அணியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த ஆட்டத்தின் முடிவில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தத் தேவையில்லை.
இன்னும் 11 ஆட்டங்களில் நாங்கள் விளையாட வேண்டியுள்ளது. ஆட்டத்துக்கு தேவையான விஷயங்களை மிகச் சரியாகச் செய்து வருகிறோம். எங்களது ஆட்டம், அதற்கான திட்டமிடல் மற்றும் அமலாக்கம் ஆகியவை எங்களுக்கு திருப்தி அளிப்பதாகவே உள்ளது. தொடக்க வீரர்களில் கிறிஸ் கெயிலுக்குப் பதிலாக என்னை களமிறங்க வைக்கும் முடிவில் அணி நிர்வாகத்துக்கு சற்று சந்தேகம் இருந்தது.
லோகேஷ் ராகுலுடன் இணைந்து முடிந்த வரை எனது பணியை சிறப்பாகச் செய்து வருகிறேன் என்று மயங்க் அகர்வால் கூறினார்.