ஹைதராபாத் 162 ரன்கள்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா தில்லி?

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாத் 162 ரன்கள்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா தில்லி?


13-வது ஐபிஎல் சீசனின் 11-வது ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்ஸனும், தில்லி அணியில் இஷாந்த் சர்மாவும் சேர்க்கப்பட்டனர்.

ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடக்கத்தில் பவுண்டரிகள் கிடைக்காமல் இருவரும் திணறினர். ஓடியே ரன்களை எடுத்துக்கொண்டிருந்தனர். முதல் 5 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

பவர்பிளேவின் கடைசி ஓவரை நோர்க்கியா வீசினார். அந்த ஓவரில் வார்னர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க 14 ரன்கள் கிடைத்தன. இதையடுத்து, சற்று துரிதமாக ரன் உயரத் தொடங்கியது. ரன் ரேட்டும் ஓவருக்கு 7 ரன்களைத் தாண்டியது. வார்னர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிஸ்ரா ஓவரில் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அவர் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

3-வது பேட்ஸ்மேனாக ஏற்கெனவே களமிறங்கி வந்த மணீஷ் பாண்டே களமிறங்குவாரா வில்லியம்ஸன் களமிறங்குவாரா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில், பாண்டேவே களமிறங்கினார். ஆனால், 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவரும் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பேர்ஸ்டோவுடன் வில்லியம்ஸன் இணைந்தார். வில்லியம்ஸன் தொடக்கம் முதலே ரன் ரேட் குறையாதவாறு துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். அவர் நோர்க்கியா ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஸ்டாய்னிஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடிக்க ஆட்டம் விறுவிறுப்படையத் தொடங்கியது.

ரபாடா வீசிய 18-வது ஓவரில் அரைசதத்தை எட்டிய பேர்ஸ்டோவ் அதே ஓவரில் ஆட்டமும் இழந்தார். அவர் 48 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, வில்லியம்ஸனுடன் அறிமுக இளம் வீரர் அப்துல் சமத் களமிறங்கினார். சமத்துக்கு பவுன்சர் பந்தில் கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி கிடைத்தாலும், அடுத்த பந்தையே அட்டகாசமாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதனால், 19- ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன.

கடைசி ஓவரை வீசிய ரபாடா வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்ஸன் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

தில்லி அணித் தரப்பில் மிஸ்ரா மற்றும் ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com