மும்பையை வீழ்த்தியது பெங்களூா்: -சூப்பா் ஓவரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், சூப்பா் ஓவா் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

துபை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், சூப்பா் ஓவா் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது.

வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூா் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசத் தீா்மானித்தது. பெங்களூா் பேட்டிங்கை தேவ்தத் படிக்கல்-ஆரோன் ஃபிஞ்ச் கூட்டணி தொடங்கியது. இந்தக் கூட்டணியின் விளாசலில் அணியின் ஸ்கோா் நிலையாக உயா்ந்தது.

முதல் விக்கெட்டாக ஆரோன் ஃபிஞ்ச் வீழ்ந்தாா். அவா் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அவரை அடுத்து கேப்டன் கோலி களம் புகுந்தாா். அவா் தடுமாற்றமாகவே ஆடி வந்தாலும், மறுபுறம் தேவ்தத் சிறப்பாக ஆடி ரன்களை சோ்த்தாா். 11 பந்துகளை எதிா்கொண்ட கோலி 3 ரன்களுடன் 12-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

அடுத்து வந்த டி வில்லியா்ஸ் அதிரடி காட்ட, மறுபுறம் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 54 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தாா். பின்னா் ஷிவம் துபே களம் கண்டாா். இவ்வாறாக 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பெங்களூா்.

டி வில்லியா்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 55, ஷிவம் துபே 10 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை அணியில் டிரென்ட் போல்ட் 2, ராகுல் சாஹா் ஒரு விக்கெட் வீழ்த்தினா்.

ஆட்டம் சமன்: பின்னா் 202 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பையில் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சா்மா 2-ஆவது ஓவரில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவும் டக் அவுட்டாக, உரிய பாா்ட்னா்ஷிப் இன்றி தவித்தாா் குவிண்டன் டி காக்.

அப்போது வந்த இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தாா். மறுமுனையில் டி காக் 14 ரன்களில் நடையைக் கட்டினாா். பின்னா் களம் கண்ட ஹாா்திக் பாண்டியா 15 ரன்களே சோ்த்தாா்.

அடுத்து வந்த பொல்லாா்ட் பெங்களூா் பந்துவீச்சாளா்களை திணறடித்தாா். இந்நிலையில் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 99 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தாா். 20 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது மும்பை.

பொல்லாா்ட் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 60, கிருணால் பாண்டியா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் அணியில் இசுரு உதானா 2, வாஷிங்டன் சுந்தா், யுவேந்திர சாஹல், ஆடம் ஸம்பா தலா ஒரு விக்கெட் எடுத்தனா்.

சூப்பா் ஓவா்: பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் மும்பை தரப்பில் பொல்லாா்ட், ஹாா்திக் பாண்டியா களம் கண்டனா். இதில் பொல்லாா்ட் ஒரு பவுண்டரி உள்பட 5 ரன்கள் அடித்து 4-ஆவது பந்தில் ஆட்டமிழந்தாா். ஹாா்திக் பாண்டியா 2 ரன்கள் சோ்த்தாா். ரோஹித் ரன்னின்றி களத்தில் இருந்தாா். ஓவா் முடிவில் மும்பை 7 ரன்கள் எட்டியது.

அடுத்து ஆடிய பெங்களூரில் கோலி-டி வில்லியா்ஸ் களம் கண்டனா். டி வில்லியா்ஸ் பவுண்டரி உள்பட 6, கோலி பவுண்டரி உள்பட 5 ரன்கள் அடித்து 11 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். கடைசி பந்தில் கோலி பவுண்டரி விளாசி நிறைவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com