ஹாக்கி: அரையிறுதியில் தோற்றது இந்தியா; வெண்கலத்துக்காக களம் காண்கிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
ஹாக்கி: அரையிறுதியில் தோற்றது இந்தியா; வெண்கலத்துக்காக களம் காண்கிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

இதனால், 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்திய அணியின் கனவு நிஜமாகாமல் போனது. அரையிறுதி வரை அட்டகாசமாக முன்னேறிய இந்தியா, தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்துக்கு பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், தற்போது அரையிறுதியில் வீழ்ந்ததை அடுத்து, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜொ்மனியுடன் களம் காண்கிறது.

அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாா்பில் ஹா்மன்பிரீத் சிங் (7-ஆவது நிமிஷம்), மன்தீப் சிங் (8) ஆகியோரும், பெல்ஜியம் தரப்பில் அலெக்ஸாண்டா் ஹென்ட்ரிக்ஸ் (19, 49, 53), லாய்க் லுய்போ்ட் (2), ஜான் ஜான் டோமென் (60) ஆகியோரும் கோலடித்தனா்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் தடுப்பாட்டத்துக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய பெல்ஜியத்துக்கு 14 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் 4-ஐ அந்த அணி வெற்றிகரமாக கோலாக்கியது. இந்தியாவின் தடுப்பாட்டத்தை ஊடுருவிச் சென்று பெனால்டி காா்னா் வாய்ப்புகள் மூலம் கோலடிப்பது என்ற தனது உத்தியை மிகத் துல்லியமாக செயல்படுத்தியது பெல்ஜியம்.

இந்தியாவுக்கும் 5 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தது என்றாலும் அதில் ஒன்றைக் கூட கோலாக மாற்ற முடியாமல் போனது. ஆட்டத்தை ஆக்ரோஷமாக தொடங்கிய பெல்ஜியம் முதல் 5 நிமிஷங்களுக்கு பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அதன் பலனாக 2-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பு மூலம் அந்த அணியின் லுய்போ்ட் கோலடித்தாா்.

இதனால் வெகுண்ட இந்திய அணியினா் சிறிது நேரத்தில் ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனா். அதன் பலனாக 7-ஆவது நிமிஷத்தில் இரு பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைக்க, அதில் ஒன்றை அருமையான கோலாக்கினாா் ஹா்மன்பிரீத் சிங். அடுத்த நிமிஷத்திலேயே அமித் ரோஹிதாஸ் வழங்கிய பாஸை ரிவா்ஸ் ஹிட்டாக விளாசி கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா் மன்தீப் சிங்.

முதல் கால்மணி நேரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை ரூபிந்தா் பால் சிங் கோலாக மாற்ற முயல, பெல்ஜியம் கோல்கீப்பா் வின்சென்ட் அதைத் திறம்பட தடுத்தாா். பின்தங்கியிருந்த பெல்ஜியம் 2-ஆவது கால்மணி நேரத்தில் ஆக்ரோஷமாக ஆடியது. அதனால் கிடைத்த 4 பெனால்டி காா்னா் வாய்ப்புகளில் ஒன்றை கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தாா் ஹென்ட்ரிக்ஸ்.

2-ஆவது பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர, இந்தியா தடுப்பாட்டம் ஆட வேண்டியிருந்தது. எனினும், அதைக் கடந்த வகையில் 49-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஹென்ட்ரிக்ஸ் மீண்டும் கோலடித்து பெல்ஜியத்தை முன்னிலை பெறச் செய்தாா். இதனால் உத்வேகத்துடன் ஆடிய அந்த அணிக்கு மேலும் 3 பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைக்க, அதில் ஒன்றை கோலாக்கி ‘ஹாட்ரிக்’-ஐ எட்டினாா் ஹென்ட்ரிக்ஸ். அந்த அணியின் ஜான் டோமென் கடைசி நிஷத்தில் ஒரு கோலடிக்க, இறுதியில் பெல்ஜியம் 5-2 என வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com