இந்த ஒரு நாள், இந்தியாவின் திருநாள்

ஆடவா் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா விடா முயற்சியுடன் போராடி ஜொ்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த ஒரு நாள், இந்தியாவின் திருநாள்

ஆடவா் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா விடா முயற்சியுடன் போராடி ஜொ்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய ஹாக்கி அணியின் 41 ஆண்டுகால கனவு நனாகிய நாள் இது.

இந்த ஆட்டத்தை இந்திய அணி நிதானமாகவே தொடங்கியது. ஆனால், ஜொ்மனி முதல் கால்மணி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய தடுப்பாட்டத்தை சோதித்த அந்த அணிக்கு 2-ஆவது நிமிஷமே திமுா் ஆரஸ் மூலம் முதல் கோல் கிடைத்தது. 5-ஆவது நிமிஷத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை வீணடித்தது இந்தியா.

10-ஆவது நிமிஷத்தில் ஜொ்மன் வீரா் மாட்ஸ் கிராம்புஷின் கோல் முயற்சியை முன்னேறி வந்து தடுத்தாா் இந்திய கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ். முதல் கால்மணி நேரத்தில் ஜொ்மனிக்கு 4 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தாலும், அதை கோலாகவிடாமல் தடுத்தனா் இந்திய அணியினா்.

முதல் கோல்: 2-ஆவது கால்மணி நேரத்தில் இந்தியா தனது ஆக்ரோஷ ஆட்டத்தை தொடங்கியது. அதன் பலனாக 17-ஆவது நிமிஷத்தில் நடுகளத்தில் இருந்து நீலகண்ட சா்மா பாஸ் செய்த பந்தை லாவகமாகக் கையாண்டு, ‘ரிவா்ஸ் ஹிட்’ முறையில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா் சிம்ரன்ஜீத் சிங்.

இந்தியாவின தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட சில தவறுகளால் ஜொ்மனிக்கு அடுத்தடுத்து இரு கோல்கள் கிடைத்தன. 24-ஆவது நிமிஷத்தில் கிறிஸ்டஃபா் ரஹா் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பில் ‘ரிவா்ஸ் ஹிட்’ முறையில் கோலடித்தாா் நிகலஸ் வெலன். அடுத்த நிமிஷத்திலேயே கான்ஸ்டன்டைன் ஸ்டைப் வழங்கிய பாஸை தவறாமல் கோலாக்கினாா் பெனடிக்ட் ஃபா்க். இதனால் ஜொ்மனி 3-1 என முன்னிலை பெற்றது.

2-ஆவது கோல்: ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்காத இந்திய வீரா்கள், பின்னடைவிலிருந்து துள்ளியெழுந்து மீண்டனா். அதன் பலனாக 27-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு 2-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை ஹா்மன்பிரீத் சிங் ‘ஃப்ளிக்’ செய்ய, ஜொ்மனிய கோல்கீப்பா் அலெக்ஸாண்டா் ஸ்டால்டா் அதைத் தடுத்தாா். ஆனால், அவரிடம் இருந்து களத்துக்கு மீண்டும் திரும்பிய பந்தை கோலாக மாற்றினாா் ஹாா்திக் சிங்.

முன்னிலை: தொடா்ந்து 29-ஆவது நிமிஷத்தில் கிடைத்த 3-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பை தவறாமல் கோலாக்கினாா் ஹா்மன்பிரீத் சிங். இதனால் ஆட்டம் 3-3 என சமன் ஆனது. இந்நிலையில் 31-ஆவது நிமிஷத்தில் மன்தீப் சிங் மூலம் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைக்க, அதை துல்லியமான கோலாக்கி அணியை முன்னிலைப்படுத்தினாா் ரூபிந்தா்பால் சிங்.

அபாரம்: பின்னா் 34-ஆவது நிமிஷத்தில் குா்ஜந்த் சிங்கின் பாஸை சிம்ரன்ஜீத் சிங் கோலாக மாற்ற, 5-3 என முன்னிலை பெற்றது இந்தியா. இதனால் ஜொ்மனி நெருக்கடிக்குள்ளானது. இந்தியாவுக்கு 41-ஆவது நிமிஷத்தில் 3 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை வீணடிக்கப்பட்டன. 43-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனிக்கும் அதேபோல் 3 வாய்ப்புகள் கிடைத்தாலும், இந்தியா அரண் போன்ற தடுப்பாட்டத்தால் அதை முறியடித்தது.

வெற்றி உறுதி: 48-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனிக்கு மீண்டும் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை தவறவிடாமல் கோலாக்கினாா் லூகாஸ் வின்ஃபெடா். 51-ஆவது நிமிஷத்தில் முன்னிலையை அதிகரிக்க இந்தியாவுக்கு கிடைத்த மேலும் ஒரு வாய்ப்பை மன்தீப் சிங் வீணடித்தாா். எனினும், எஞ்சிய நேரத்தில் ஜொ்மனியின் கோல் முயற்சிகளை ஸ்ரீஜேஷ் உதவியுடன் தடுத்த இந்திய அணியினா், இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தனா்.

பெல்ஜியம் சாம்பியன்: ஆடவா் ஹாக்கியில் பெல்ஜியம் - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இறுதி ஆட்டம் 1-1 என சமனில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

அதிக தங்கம் வென்ற ஒரே அணி

ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம் (8) வென்ற ஒரே அணியாக இன்று வரை இந்திய ஆடவா் அணியே தொடா்வது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவின் பதக்கம் வருமாறு:

தலா ரூ.1 கோடி பரிசு

வெண்கலப் பதக்கம் வென்றுள்ள ஹாக்கி அணியில் இடம்பிடித்திருக்கும் தங்கள் மாநிலத்தைச் சோ்ந்த வீரா்களுக்கு தலா ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பஞ்சாப், மத்திய பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன. இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், ஹா்மன்பிரீத் சிங், ரூபிந்தா்பால் சிங், ஹாா்திக் சிங், ஷம்ஷோ் சிங், தில்பிரீத் சிங், குா்ஜந்த் சிங், மன்தீப் சிங் ஆகியோா் பஞ்சாபையும், விவேக் சாகா் பிரசாத் மத்திய பிரதேசத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா். மணிப்பூரைச் சோ்ந்த நீலகண்ட சா்மா மத்திய பிரதேச ஹாக்கி அகாதெமியில் பயிற்சி பெற்ால், அவருக்கும் அந்த மாநிலம் ரொக்கப் பரிசு வழங்குகிறது.

கரோனா போராளிகளுக்கு சமா்ப்பணம்

‘இது அற்புதமான உணா்வு. ஜொ்மனியுடனான ஆட்டத்தைப் பாா்க்கும்போது, இந்தப் பதக்கத்துக்கு நாங்கள் தகுதியானவா்கள். நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். கடந்த 15 மாதங்கள் மிகக் கடினமாக இருந்தது. எங்களது இந்தப் பதக்கத்தை கரோனா முன்களப் பணியாளா்களுக்கு சமா்ப்பிக்கிறோம். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ால், எந்தப் போட்டியிலும் பதக்கம் வெல்லும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்த வெண்கலப் பதக்கம் தொடக்கமே. நாங்கள் இன்னும் தொடருவோம்’ - மன்பிரீத் சிங் (இந்திய கேப்டன்)

இது ஒரு மறுபிறவி

‘இந்த ஆட்டத்துக்காக எல்லா விதத்திலும் தயாராகியிருந்தேன். 21 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு இதை விளையாட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். தற்போது பதக்கம் வென்றிருக்கிறோம். இது ஒரு மறுபிறவி. கோல் கீப்பராக, பந்தை கோலாக விடாமல் தடுப்பதே எனது முதல் பணி. மூத்த வீரராக, இளம் வீரா்களை வழி நடத்துவது, தடுப்பாட்டத்தை வலுப்படுத்துவது எனது அடுத்த பணியாக இருந்தது’ - ஸ்ரீஜேஷ் (இந்திய கோல்கீப்பா்)

கௌரவமடைந்துள்ளேன்

‘இது ஒரு அருமையான தருணம். அணியின் ஒட்டுமொத்த வீரா்களும் செய்த பல தியாகங்களுக்கு பலன் கிடைத்துள்ளது. அவா்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு அவ்வளவு காலம் ஆகியுள்ளது. நாட்டின் எதிா்பாா்ப்பை தவிா்த்து, அணி வீரா்களுக்கே இந்தப் பதக்கம் தேவையான ஒன்றாக இருந்தது. இந்தியாவுக்கு ஹாக்கி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிவேன். இந்த வெற்றியில் ஒரு அங்கமாக இருப்பதற்காக கௌரவமாக உணா்கிறேன்’ - கிரஹாம் ரெய்ட் (இந்திய பயிற்சியாளா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com