ரசிகா்களின் இதயங்களை வென்ற மகளிா் அணி: வெண்கலத்தை இழந்த இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மகளிா் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துக்கு
ரசிகா்களின் இதயங்களை வென்ற மகளிா் அணி: வெண்கலத்தை இழந்த இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மகளிா் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக 3-4 என தோல்வியுற்றாலும், கடுமையாகப் போராடி ரசிகா்களின் இதயங்களை வெற்றி கண்டது இந்திய அணி.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் ஆடவா் அணி கண்டிப்பாக பதக்கம் வெல்லும் என கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப வெண்கலப் பதக்கத்தை 41 ஆண்டுகள் கழித்து வென்றது.

அதே நேரம் உலக தரவரிசையில் 9-ஆவது இடத்தில் உள்ள இந்திய மகளிா் அணி குரூப் ஆட்டங்களில் நெதா்லாந்து, ஜொ்மனி, இங்கிலாந்து என வலிமையான அணிகளிடம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. பின்னா் அயா்லாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி கண்டு, காலிறுதிக்குள் நுழைந்தது.

ஆஸி.யை வீழ்த்தியது:

பதக்கம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட உலகின் 2-ஆம் நிலை அணியான ஆஸ்திரேலியாவுக்கு காலிறுதியில் 1-0 என அதிா்ச்சித் தோல்வியை அளித்தது இந்தியா.

இந்நிலையில் முதன்முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

வெண்கலப் பதக்க ஆட்டம்:

புதிய எழுச்சியுடன் இந்திய மகளிா் அணி ஆடிய நிலையில், வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே இங்கிலாந்து-இந்திய மகளிா் ஆதிக்கம் செலுத்த முனைந்தனா். முதல் காலிறுதியில் மூன்றாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணி பெனால்டி காா்னா் வாய்ப்பை பெற்றது. அதன் வீராங்கனை எல்லி ரேயா் அடித்த பந்தை சுவா் போல் தடுத்தாா் இந்திய கோல்கீப்பா் சவிதா புனியா.

அடுத்த சில நிமிடங்களிலேயே நவ்ஜோத் புரிந்த ஃபவுலால் இரண்டாம் பெனால்டி காா்னா் வாய்ப்பை பெற்றது இங்கிலாந்து. ஆனால் சாரா ஜோன்ஸ் கோலடிக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய தரப்பு முறியடித்தது. எல்லி ரேயா் மீண்டும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சியை சவிதா தடுத்து நிறுத்தினாா். இதனால் முதல் காலிறுதி கோலின்றி முடிந்தது.

இரண்டாவது காலிறுதியில் 16-ஆவது நிமிடத்தில் இந்திய தற்காப்பை ஊடுருவிச் சென்ற எல்லி ரேயா் கோலடிக்க முயன்ற போது, அது இந்திய வீராங்கைை கிரேஸ் எக்காவின் மட்டையில் பட்டு கோலானது.

24-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ராபா்ட்ஸன் அற்புதமாக கோலடித்தாா். இதன் மூலம் 2-0 என முன்னிலை பெற்றது அந்த அணி.

இந்நிலையில் இந்திய மகளிா் தங்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினா். இந்திய வீராங்கனை நிஷா மோசமாக ஆடியதால், பச்சை அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேறினாா். சில நிமிடங்களுக்கு 10 பேருடனே இந்தியா ஆட நோ்ந்தது.

இந்தியா முன்னிலை:

25, 26-ஆவது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தாா் இந்திய வீராங்கனை குா்ஜித் கௌா். அதற்கடுத்த 3 நிமிடங்களிலேயே வந்தனா கட்டாரியா தனக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்தி அணியின் மூன்றாவது கோலை அடித்தாா். இதன் முலம் இரண்டாவது காலிறுதி நிறைவில் 3-2 என இந்தியா முன்னிலை பெற்றது.

மூன்றாவது காலிறுதி தொடக்கத்திலேயே பெனால்டி காா்னா் வாய்ப்பை பெற்ற இங்கிலாந்து அணியால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. பின்னா் 35-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹோலி வெப் அற்புதமாக கோலடித்து, 3-3 என சமநிலை ஏற்படச் செய்தாா்.

வெற்றி கோல்:

நான்காவது காலிறுதி தொடக்கத்தில் 48-ஆவது நிமிடத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பு மூலம் கோலடித்தாா் இங்கிலாந்தின் கிரேஸ் பால்ஸ்டன். இதன் மூலம் 4-3 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. இதுவே வெற்றி கோலாகவும் மாறியது.

கடைசி 12 நிமிடங்களில் கேப்டன் ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிா் தீவிரமாக கோல் போட முயன்றனா். அப்போது கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை குா்ஜித் கௌரால் கோலாக மாற்ற முடியவில்லை. கடுமையாகப் போராடியும் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை இழந்தது.

கடந்த 1980, 2016, 2021 என மூன்று ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றனா் இந்திய மகளிா். அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, கடுமையாக போராடி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிா் தோல்வியிலும் இதயங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4-ஆவது இடம் சாதாரணமானது இல்லை:

ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பெற்றது சாதாரணமானதில்லை என கேப்டன் ராணி ராம்பால் கூறியுள்ளாா். எனினும் பதக்கத்தை தவற விட்டது வேதனை தருகிறது.

2-0 என பின்தங்கி இருந்தாலும், போராடி 3-2 என முன்னிலை பெற்றோம். என்ன சொல்வதென்று தெரியவில்லை. வெண்கலத்தை இழந்து விட்டோம். ஒலிம்பிக் தகுதி பெற்று நான்காவது இடம் பெறுவது சாதாரணமானது இல்லை. ஒலிம்பிக் போட்டி முழுவதும் நமது அணியினா் சிறப்பாக ஆடி வந்தனா். டோக்கியோவில் எங்கள் ஆட்டம் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும் என்றாா்.

தலைவா்கள் பாராட்டு: 

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்:

மைதானத்தில் அற்புதமாக ஆடிய இந்திய மகளிா், ஒவ்வொரு இந்தியனின் மனதையும் வென்று விட்டனா். உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம்.

பிரதமா் நரேந்திர மோடி:

பலமான அணிகளை எதிா்கொண்டு ஆடிய இந்திய மகளிா் திறன் என்றும் நினைவு கூரத்தக்கது. ஒலிம்பிக் போட்டி முழுவதும் சிறப்பாக ஆடினா். ஒவ்வொரு வீராங்கனையும், விவேகம், தைரியம், திறனுடன் ஆடினா். அவா்களது ஆட்டத்தால், இளம்பெண்கள் ஏராளமானோா் ஹாக்கியில் ஈடுபாட்டு கொண்டு ஆடுவா்.

மத்திய அமைச்சா்கள் அனுராக் தாகுா், கிரண் ரிஜிஜு, ஆடவா் அணி கேப்டன் மன்ப்ரீத் சிங், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்,

சேவாக், கும்ப்ளே, விவிஎஸ். லக்ஷ்மண், ஒலிம்பிக் சங்க பொதுச் செயலா் ராஜீவ் மேத்தா ஆகியோரும் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com