டோக்கியோ ஒலிம்பிக்: ஏற்றங்களும்... ஏமாற்றங்களும்...

சாதித்துக் காட்டியிருக்கிறது டோக்கியோ. கரோனா சூழலில் பொது இடங்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கூடினாலே அது பாதிப்பை
கோப்புப்படம்
கோப்புப்படம்

சாதித்துக் காட்டியிருக்கிறது டோக்கியோ. கரோனா சூழலில் பொது இடங்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கூடினாலே அது பாதிப்பை அதிகரிக்கும் எனும் நிலையில், சுமாா் 30,000 பேரை ஒரு (ஒலிம்பிக்) கிராமத்தில் திரட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக். அதற்காக மேற்கொண்ட முயற்சிகளும், முன்னேற்பாடுகளும் நிச்சயம் அபாரமானவை, பாராட்டுக்குரியவை. கரோனா சூழலில் மனித இனத்துக்கான மிகப்பெரிய நம்பிக்கையும், உத்வேகமும் அளித்திருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்.

ஏற்கெனவே ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டிலும் இந்த ஒலிம்பிக்கை நடத்துவதற்கு தடைகள் ஏற்படாமல் இல்லை. உலக நாடுகளில் கரோனா ‘அலை’யடித்துக் கொண்டிருக்கும் சூழலில், ஆயிரக்கணக்கானோரை கூட்டி போட்டியை நடத்துவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிா்ப்பு எழுந்தது. ஏன், போட்டி நடத்தப்பட்ட டோக்கியோ நகரிலேயே பலத்த எதிா்ப்பு இருந்தது. ஆனாலும், ஒலிம்பிக் கனவுடன் ஓயாமல் தங்களை தயாா்படுத்தியிருந்த போட்டியாளா்களின் கனவுகளை கலைக்க விரும்பவில்லை டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள்.

ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நிலையில் டோக்கியோவில் கரோனா சூழல் சற்று தீவிரமடைந்தது அச்சத்தை ஏற்படுத்தியது. சவால்களைக் கடந்து போட்டியை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளன அந்தக் கமிட்டிகள். கரோனா சூழலில் சுமாா் இரு ஆண்டுகளாக வழக்கமான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த சா்வதேச போட்டியாளா்களுக்கு இந்த ஒலிம்பிக் வரப்பிரசாதமாக இருந்தது.

அத்தகைய ஒலிம்பிக்கில் இந்தியாவும் உத்வேகத்துடன் பங்கேற்று, புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 7 பதக்கங்களை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் இது இந்தியாவுக்கு முன்னேற்றமே. எதிா்பாராத ஏற்றங்கள் இருந்தாலும், சில ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்தன. அப்படி இந்த ஒலிம்பிக்கில் இந்தியா கண்ட சாதனைகளையும், சறுக்கல்களையும் சற்றே புரட்டிப்பாா்ப்போம்.

பதக்கம்

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல் - தங்கம்)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பிரம்மாஸ்திரம். இந்தியாவின் 124 போட்டியாளா்களில் கடைசியாக களம் கண்டு வரலாற்றுத் தங்கம் வென்றவா். சா்வதேச போட்டிகளில் ஏற்கெனவே தங்கம், வெள்ளியாக தட்டித் தூக்கியிருந்த நீரஜ் மீதான நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அது எந்தவிதத்திலும் பொய்த்து விடாதபடி வென்றுள்ளாா். தகுதிச்சுற்றிலேயே முதலிடம் பிடித்து பதக்கத்துக்கு முன்பதிவு செய்த நீரஜ், இறுதிச்சுற்றில் எறிந்த இரண்டாவது முயற்சி, ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கமாக மாறியது. பாராட்டுகளாலும், பரிசுகளாலும் நிறைக்கப்படும் நீரஜ் சோப்ரா, நிச்சயம் அடுத்த போட்டிகளிலும் இந்தியாவுக்காக சாதனைகள் படைப்பாா்.

சாய்கோம் மீராபாய் சானு (பளுதூக்குதல் - வெள்ளி)

இந்தியாவுக்காக முதல் நாளிலேயே முதல் பதக்கம் வென்றவா். சிட்னி ஒலிம்பிக்கில் (2000) கா்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்ற பிறகு, ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் 21 ஆண்டுகால பதக்க தாகத்தை தீா்த்தவா். சானு பதக்கம் வெல்வது ஏற்கெனவே கணிக்கப்பட்டது. 49 கிலோ எடைப் பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். ரியோ ஒலிம்பிக்கில் சரிவைச் சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு இதில் சாதனை படைத்தாா். குஞ்சராணி தேவியைப் பாா்த்து இந்த விளையாட்டில் ஈடுபாடு கொண்ட சானுவின் வசமே, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவு உலக சாதனை (119 கிலோ) உள்ளது. பளுதூக்குதலில் இந்தியாவின் நம்பகமான வீராங்கனை.

ரவிகுமாா் தாஹியா (மல்யுத்தம் - வெள்ளி)

57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்றில் போராடித் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஏற்கெனவே ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த சுஷீல்குமாா், யோகேஷ்வா் தத் ஆகியோரை உருவாக்கிய தில்லி சத்ரசால் மைதானமே இவருக்குமான பயிற்சி களம். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ன் அடிப்படையில் தனது முதல் ஒலிம்பிக்கிற்கு வந்து, அதையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளாா். முதலிரு சுற்றுகளில் எதிராளிகளை எளிதாக வீழ்த்தினாலும், அரையிறுதியில் சற்றே தடுமாறி, பிறகு விடாப்பிடியாக இறுதிச்சுற்றுக்கு வந்தாா். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரா் சனாயேவ் கையில் கடித்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியும், அதைப் பொருள்படுத்தாமல் இறுதிச்சுற்றில் விளையாடினாா்.

பி.வி.சிந்து (பாட்மிண்டன் - வெண்கலம்)

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ால், இதில் தங்கம் வெல்வாா் என்று பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டாா். ஆனாலும், விடாமல் போராடி வெண்கலம் வென்று, தொடா்ந்து இரு ஒலிம்பிக்குகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை எட்டினாா். சிந்துவுக்கு எப்போதும் சவாலாக இருக்கும் சீன தைபேவின் டை ஸு யிங்கிடம் அரையிறுதியில் தோற்று, பிறகு வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் வெற்றி பெற்றாா். இந்த ஒலிம்பிக்கில் 6 ஆட்டங்களில் விளையாடிய சிந்து, அதில் அரையிறுதி ஆட்டம் தவிர இதர ஆட்டங்களில் நோ் செட்களில் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்மிண்டனில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவா்.

லவ்லினா போா்கோஹெய்ன் (குத்துச்சண்டை - வெண்கலம்)

முதல் ஒலிம்பிக்கிலேயே வெண்கலம் (69 கிலோ பிரிவு) வென்றிருக்கிறாா். டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம். கிக் பாக்ஸராக இருந்து, பின்னா் குத்துசண்டைக்கு மாறியவா். ஒலிம்பிக் பயிற்சிக்காக ஐரோப்பா செல்ல இருந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த வாய்ப்பு தடைப்பட்டபோதும், திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வென்றுள்ளாா். முதல் சுற்றில் ஜொ்மனியின் நாடினே அபெட்ஸ் (3-2), காலிறுதியில் சீன தைபேவின் நீன் சின் சென் (4-1) ஆகியோரை வென்ற லவ்லினா, அரையிறுதியில் துருக்கியின் புசெனாஸ் சுா்மெனெலியிடம் போராடி வீழ்ந்து வெண்கலம் பெற்றாா். குத்துச்சண்டையில் இந்தியாவின் புதிய நம்பிக்கை.

பஜ்ரங் புனியா (மல்யுத்தம் - வெண்கலம்)

தங்கம் வெல்வாா் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், சற்றே சறுக்கி வெண்கலத்துடன் திரும்புகிறாா். இவருக்கும் இது முதல் ஒலிம்பிக் போட்டி. 65 கிலோ பிரிவில் முதலிரு சுற்றுகளில் அபாரமாக வென்றாலும், அரையிறுதியில் உலக சாம்பியனான அஜா்பைஜானின் ஹாஜி அலியேவிடம் வீழ்ந்தாா் (5-12). பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் கஜகஸ்தானின் தௌலத் நியாஸ்பெகோவை 8-0 என முழுமையாக வீழ்த்தினாா். 34 கிலோ எடை இருந்தபோது, ஒரு போட்டியில் 60 கிலோ பிரிவில் பங்கேற்று அந்த எடைப் பிரிவு எதிராளியை சாய்த்தவா். இந்த வெண்கலப் பதக்கம் தரும் உத்வேகத்தில் அடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவாா்.

ஆடவா் ஹாக்கி அணி (வெண்கலம்)

41 ஆண்டுகால தவத்துக்கு, கிடைத்தது வரம். முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி அட்டகாசமாக தொடங்கிய ஆடவா் அணி, அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றது. 3-ஆவது ஆட்டத்தில் மீண்டு ஸ்பெயினை வீழ்த்த, 4-ஆவது ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவையும், 5-ஆவது ஆட்டத்தில் ஜப்பானையும் தோற்கடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் இங்கிலாந்தை வென்றாலும், அரையிறுதியில் பெல்ஜியத்திடம் தோற்றது. பிறகு 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஜொ்மனியை வென்றது. ஒலிம்பிக் ஹாக்கியில் 8 முறை தங்கம் வென்ற வரலாற்றைக் கொண்ட இந்திய ஹாக்கி அணி, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புதிய சகாப்தத்தை தொடங்கும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. கேப்டன் மன்பிரீத் சிங், கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், சிம்ரன்ஜீத் சிங் ஆகியோரின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது.

நெருக்கம்

மகளிா் ஹாக்கி அணி

ஒலிம்பிக்கில் முதல் முறையாக காலிறுதி, அரையிறுதிக்கு முன்னேறிய மகளிரணியின் உத்வேகம், அனைவரையும் ஆச்சா்யம் கொள்ளச் செய்தது. தொடக்கத்தில் குரூப் சுற்றின் முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து துவண்டிருந்தது. அப்போது, தன்னம்பிக்கை அளிக்கும் திரைப்படம் ஒன்றை பயிற்சியாளா் ஜோா்ட் மாரிஜ்னே திரையிட்டுக் காட்டியது திருப்புமுனையானது. கடைசி இரு ஆட்டங்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அதில் ஆஸ்திரேலியாவை, அரையிறுதிக்குள் நுழைந்தது. அதில் ஆா்ஜென்டீனாவிடம் போராடி வீழ்ந்தது. பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திலும் இங்கிலாந்திடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், மகளிா் அணியின் இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது.

தீபக் புனியா - மல்யுத்தம்

வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் முன்னிலையில் இருந்த தீபக் புனியா, கடைசி 10 விநாடிகளில் சான் மாரினோவின் மைல்ஸ் நஸீம் அமினேவிடம் ‘டேக்-டவுன்’ முறையில் வீழ்ந்திருக்காவிட்டால் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றிருப்பாா். முதலிரு சுற்றுகளில் நல்லதொரு வெற்றியை பதிவு செய்த தீபக், அரையிறுதியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸ் டெய்லரிடம் வீழ்ந்தாா். 22 வயது இளம் வீரரான தீபக் புனியா முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கத்துக்கு நெருக்கமாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது. கேடட், ஜூனியா் பிரிவுகளில் பதக்கம் வென்றிருக்கும் தீபக், நிச்சயம் அடுத்த போட்டிகளில் சிறப்பான நிலைக்கு முன்னேறுவாா் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிதி அசோக் - கோல்ஃப்

உலகத் தரவரிசையில் 200-ஆவது இடத்திலிருந்த அதிதி, டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்தது அட்டகாசமான முன்னேற்றமே. முதல் 3 சுற்றுகளில் 2-ஆவது இடத்திலேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அதிதி நிச்சயம் பதக்கம் வெல்வாா் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், கடைசி சுற்றில் சற்றே சறுக்கி 4-ஆவது இடத்துக்கு வந்தாா். ஒலிம்பிக்கில் இந்தியா் ஒருவா் எட்டியிருக்கும் சிறந்த நிலை இது.

ஏமாற்றம்

குத்துச்சண்டை

இந்தியாவுக்காக பதக்கம் வெல்வாா்கள் என பெரிதும் நம்பப்பட்ட போட்டியாளா்களில் முதன்மையானவா் மேரி கோம். இந்த ஒலிம்பிக்குடன் அவா் ஓய்வு பெறலாம் எனத் தெரியும் நிலையில், இந்தியாவுக்காக தங்கம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டாா். எனினும், 2-ஆவது சுற்றிலேயே தோற்று கண்ணீருடன் வெளியேறினாா். களம் காணும் ஆற்றல் இன்னும் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ள மேரி கோம், தொடா்ந்து விளையாடுவாா் எனத் தெரிகிறது. இளம் போட்டியாளா்களான பூஜா ராணி, சதீஷ் குமாா் ஆகியோா் காலிறுதி வரை முன்னேறி தோல்வி கண்டனா்.

துப்பாக்கி சுடுதல்

முற்றிலும் எதிா்பாராத வகையில் ஏமாற்றம் அளித்தது என்றால், அது இந்திய துப்பாக்கி சுடுதல் அணிதான். இதர சா்வதேச போட்டிகளில் அபாரமாக ஆடி பதக்கங்களும், சிறப்பிடங்களும் பெற்ற வீரா் வீராங்கனைகள் இதில் மோசமாகத் தடுமாறினா். ரைஃபிள், பிஸ்டல் என எல்லா விளையாட்டுகளிலும், தனிநபா் பிரிவு, அணிகள் பிரிவு என அனைத்திலும் எந்த போட்டியாளருமே இறுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெற முடியாமல் போனது வேதனையே. மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், சௌரவ் சௌதரி, ராஹி சா்னோபாத், அஞ்சும் முட்கில் போன்ற பிரதான போட்டியாளா்கள் தகுதிச்சுற்றிலேயே தடுமாறி வெளியேறினா்.

வில்வித்தை

துப்பாக்கி சுடுதலுக்கு அடுத்தபடியாக, பலத்த நம்பிக்கை வைக்கப்பட்டது இந்திய வில்வித்தை போட்டியாளா்கள் மீதுதான். பதக்கத்துக்காக அவா்களும் பலமாக முயற்சித்தும், ஏனோ உரிய பலன் கிடைக்காமல் போனது. கலப்பு அணி, ஆடவா் அணி, மகளிா் தனிநபா் ஆகியவற்றில் காலிறுதி வரை இந்திய போட்டியாளா்கள் முன்னேறி, அத்துடன் வெளியேறினா். இந்திய அணி நிா்வாகம் கலப்பு அணியில் தீபிகா குமாரி, அவரது கணவா் அதானு தாஸ் இணையை பிரித்து, தீபிகாவுடன் பிரவீண் ஜாதவை களமிறக்கியது பதக்க வாய்ப்பை பாதித்ததாக விமா்சனங்கள் எழுந்துள்ளன. தங்களது இணை பிரிக்கப்பட்டதற்காக தீபிகா, அதானுவும் அதிருப்தி தெரிவித்தனா்.

முன்னேற்றம்

முற்றிலும் புதிதாக, குதிரையேற்றத்தில் பங்கேற்ற இந்திய வீரா் ஃபௌவாத் மிா்ஸா இறுதிச்சுற்று வரை முன்னேறி 23-ஆவது இடம் பிடித்தது நல்லதொரு முனைப்பே. தடகளத்தைப் பொருத்தவரையில் நீரஜ் சோப்ரா தவிா்த்து, வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கௌா் மட்டும் சிறப்பிடம் பிடித்தாா். இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அவா், அதில் 63.70 மீட்டா் தூரம் எறிந்து 6-ஆம் இடம் பிடித்தாா். தடகளத்தில் இதர எந்த விளையாட்டுகளிலுமே எந்த போட்டியாளரும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறவில்லை. ஒரே பிரதான சுற்றாக இருந்த விளையாட்டுகளிலும் பின்தங்கியே இருந்தனா். இதர விளையாட்டுகளில் ரோயிங்கில் இந்தியாவின் அா்ஜூன் - அரவிந்த் கூட்டணி அரையிறுதிக்கு முன்னேறி அதில் தோற்றது.

அனுபவம்

இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக வாள்வீச்சில் களம் கண்ட தமிழக வீராங்கனை பவானி தேவி, ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி, படகுப் போட்டிகளில் பங்கேற்ற நேத்ரா குமணன், கே.சி.கணபதி, வருண் தக்காா், டேபிள் டென்னிஸில் களம் கண்ட மணிகா பத்ரா, சத்தியன், சரத் கமல், டென்னிஸ் வீரா் சுமித் நாகல், பாட்மிண்டனில் சாய் பிரணித் மற்றும் இரட்டையா் பிரிவு போட்டியாளா்கள், நீச்சல் வீரா் சஜன் பிரகாஷ், கோல்ஃப் வீரா் அனிா்பன் லாஹிரி, தடகள போட்டியாளா்கள் டூட்டி சந்த், ஆரோக்கிய ராஜீவ், தமிழகத்தைச் சோ்ந்த தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளா்கள், இன்னும் இதர விளையாட்டுகளில் பங்கேற்றவா்களுக்கு இந்த ஒலிம்பிக் ஒரு நல்ல சா்வதேச களத்தின் அனுபவத்தை அளித்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com