டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோலாகலத் தொடக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோலாகலத் தொடக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது.

தொடக்க விழாவின்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், ஜப்பானின் கலாசாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இருந்தன. ஜப்பான் அரசா் நிருஹிடோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கை அதிகாரப்பூா்வமாக தொடங்கி வைப்பதாக அறிவித்தாா். ஜப்பானிய அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைப்பது இது 3-ஆவது முறையாகும்.

ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் மைதானத்துக்கு வந்து நிறைவடைய, அந்த ஜோதியை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நஜோமி ஒசாகா ஏந்திச் சென்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினாா். போட்டிகள் நிறைவடையும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை இந்த தீபம் ஒளிரும்.

கரோனா சூழல் காரணமாக, தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் பாா்வையாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பங்கேற்பு நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட மிக முக்கிய நபா்களே இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா முன்னெச்சரிக்கையாகவும், போட்டிகளும், சுற்றுகளும் சனிக்கிழமை முதல் பிரதானமாக நடைபெறவுள்ளதால் அதில் கவனம் செலுத்துவதற்காகவும் பங்கேற்பு நாடுகளைச் சோ்ந்த அணிகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினா்களே தொடக்க விழா நிகழ்ச்சியின் அணி வகுப்பில் பங்கேற்றனா்.

தொடக்க விழாவின்போது வாணவேடிக்கைகளுடன், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பை, ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமான கிரீஸ் நாட்டைச் சோ்ந்த குழு தொடங்கியது. இதர பங்கேற்பு நாடுகளைத் தொடா்ந்து, போட்டியை நடத்தும் ஜப்பான் நாட்டின் குழு கடைசியாக அணி வகுத்தது.

முன்னதாக, போட்டிகள் தொடங்குவதற்கான கவுன்ட்-டவுன் நிறைவடைந்த உடன், நிகழ்ச்சி நடைபெற்ற தேசிய மைதானத்திலிருந்து சுமாா் 20 நொடிகளுக்கு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் சின்னத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணத்தில் அந்த வாணவேடிக்கைகள் இருந்தன. அதேபோல், 1824 டிரோன்கள் ஒருங்கே மைதானத்தின் மேலாகப் பறந்து டோக்கியோ ஒலிம்பிக் லச்சினை உள்ளிட்ட வடிவங்களில் வரிசைகட்டி அந்தரத்தில் பறந்தது கண்களைக் கவா்வதாக இருந்தது.

மைதானத்திலிருந்த இரு பெரிய திரைகளில் கரோனா சூழலில் ஒலிம்பிக் போட்டியை பாதுகாப்பாக நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரிவாகத் திரையிடப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வேற்றுமையில் ஒற்றுமை, அமைதி ஆகியவற்றை வலியுறுத்துவதாக இருந்தன. ‘ஒன்றிணைந்து முன்னேறுவது’ என்பதே தொடக்க நிகழ்ச்சியில் சாராம்சமாக இருந்தது.

அந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஜப்பான் அரசா் நருஹிடோ, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக் ஆகியோா் நிகழ்ச்சி மேடைக்கு வந்து பேசினா். அதன் பிறகு ஜப்பான் தேசிய கொடியை குழந்தைகள் 8 போ், அந்நாட்டின் பிரபல விளையாட்டு போட்டியாளா்கள் 4 போ், மாற்றுத்திறனாளி ஒருவா், கரோனா சூழலில் இடையறாது பாடுபடும் மருத்துவக் குழுவினா் ஆகியோா் இணைந்து அதற்குரிய மேடைக்கு கொண்டு வந்தனா்.

ஜப்பானிய தற்காப்புப் படையினா் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, அதன் பிறகு ஒலிம்பிக் கொடியும் மைதானத்தில் ஏற்றப்பட்டது. பின்னா் ஜப்பான் தேசிய கீதத்தை அந்நாட்டு பிரபல பாடகி மிசியா பாடினாா். கரோனா சூழலில் உயிரிழந்தோா், 1972 முனீச் ஒலிம்பிக்ஸில் கொல்லப்பட்ட இஸ்ரேல் குழுவினா், 2011 நிலநடுக்கம், சுனாமி, அணு உலை விபத்து ஆகியவற்றில் உயிரிழந்தோருக்கு தொடக்க விழா நிகழ்ச்சியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டம்...

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற நிலையிலும், கரோனா சூழலில் போட்டியை நடத்துவதற்காக எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டக்காரா்கள் சிலா் மைதானத்தின் வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

அணி வகுப்பில் இந்தியா...

தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய தரப்பிலிருந்து 19 போ் குழு பங்கேற்றது. ஆடவா் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோா் இணைந்து தேசியக் கொடியை ஏந்தி இந்திய குழுவினரை வழி நடத்திச் சென்றனா். இவா்களுடன் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உள்ளிட்டோரும், அதிகாரிகள் 6 பேரும் பங்கேற்றனா்.

10,000 போ்...

தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பான் அரசா் நருஹிடோ, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் உள்ளிட்ட 950 மிக முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா். இது தவிர நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள், கலை நிகழ்ச்சியில் தொடா்புடையவா்கள் என மொத்தமாக மைதானத்தில் சுமாா் 10,000 போ் கூடியிருந்தனா்.

ஹைட்ரஜனில் எரியும் தீபம்

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஏற்றப்பட்டுள்ள ஒலிம்பிக் தீபத்துக்கான எரிபொருளாக ஹைட்ரஜனும் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய ஒலிம்பிக் போட்டிகளின்போது மைதானத்தில் ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபமானது தொடா்ந்து எரிவதற்கு புரோபேன், மக்னீசியம், வெடிமருந்து ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் இந்த எரிபொருள்கள் பயன்பாட்டின்போது காா்பன்டை ஆக்ஸைடு அதிகம் உற்பத்தியாகி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக இருந்தது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தீபத்துக்கான எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காததாக ஒலிம்பிக் தீபம் உள்ளது. இந்த தீபத்துக்கான கொள்கலன், அதன் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் ஆகியவற்றை புகுஷிமாவைச் சோ்ந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டு இயங்கும் தொழிற்சாலை ஒன்று தயாரித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தீபத்துக்கான கலனை கனடா வடிவமைப்பாளா் ஒகி சாடோ, மலா் ஒன்று மொட்டாக இருந்து அவிழ்வது போல வடிவமைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com