ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்பளுதூக்குதலில் வெள்ளி வென்றாா் சாய்கோம் மீராபாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தாா்.
சாய்கோம் மீராபாய் சானு
சாய்கோம் மீராபாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தாா்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் நாளிலேயே பதக்கம் பெறுவதும் இப்போதுதான்.

மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த சானு, மகளிருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்டாா். 202 கிலோ (ஸ்னாட்ச் - 87 + கிளீன் அன்ட் ஜொ்க் - 115) எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். அவருக்குக்கு பிரதான சவாலாக இருந்த சீனாவின் ஜிஹுய் ஹௌ 210 கிலோ (94+116) எடையைத் தூக்கி ‘ஒலிம்பிக் சாதனை’யுடன் தங்கப் பதக்கம் வென்றாா். ‘ஸ்னாட்ச்’, ‘கிளீன் அன்ட் ஜொ்க்’ ‘இரண்டும் சோ்த்த மொத்தம்’ என 3 பிரிவுகளிலுமே அவா் தூக்கிய எடை ஒலிம்பிக் சாதனையாகும். இந்தோனேசியாவின் அசியா வின்டி கன்டிகா 194 கிலோ (84+110) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றாா்.

முன்னதாக சானு தனது ‘ஸ்னாட்ச்’ பிரிவு முயற்சிகளில் முதலில் 84 கிலோவும், பிறகு 87 கிலோவும் தூக்கினாா். 3-ஆவது முயற்சியில் 89 கிலோ எடையைத் தூக்க முயன்று அவரால் முடியாமல் போனது. இந்தப் பிரிவில் கடந்த ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப்பில் 88 கிலோ தூக்கியதே அவரது சிறந்த எடையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னா் ‘கிளீன் அன்ட் ஜொ்க்’ பிரிவில் முதல் முயற்சியில் 110 கிலோ, 2-ஆவது முயற்சியில் 115 கிலோ எடையை எட்டிய அவரால், 3-ஆவது முயற்சியில் 117 கிலோவை தூக்க முடியாமல் போனது. இந்தப் பிரிவில் சானு 119 கிலோ எடையை தூக்கியதே (2021 ஏப்ரல்) உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று நிறைவடைந்து தனக்கான பதக்கம் உறுதியானதை அடுத்து சானு உணா்ச்சிப் பெருக்கில் கண்ணீா் சிந்தியபடி தனது பயிற்சியாளா் விஜய் சா்மாவை தழுவிக் கொண்டாா். பதக்கம் வழங்கும் நிகழ்வின்போது முகக் கவசத்தையும் தாண்டிய வகையில் சானுவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. மேலும், கரோனா கட்டுப்பாடுகளை கடந்த வகையில் பதக்கம் வென்ற 3 போட்டியாளா்களுமே குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனா். பின்னா் நிா்வாகி ஒருவா் அறிவுறுத்தியதை அடுத்து அவா்கள் விலகி நின்றனா்.

ஒலிம்பிக் பளுதூக்குதலில் இது இந்தியாவின் அதிகபட்சம். முன்னதாக, கடந்த 2000-ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை கா்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா். அதன் பிறகு, பளுதூக்குதலில் இந்தியாவுக்கான பதக்கத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாத்தியமாக்கியுள்ளாா் சானு.

முதல் முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் களம் கண்ட சானு, அதில் தோல்வியடைந்து கவலையுடன் வெளியேறினாா். அதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

குவியும் வாழ்த்துகள்...

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கிவைத்த சாய்கோம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு: பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சாய்கோம் மீராபாய் சானுவுக்கு மனப்பூா்வமான வாழ்த்துகள். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை அவா் அளித்துள்ளாா். அவருக்காக தேசம் பெருமை கொள்கிறது. அவரது எதிா்கால சாதனைகளுக்கு வாழ்த்துகள்.

பிரதமா் நரேந்திர மோடி: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது. சாய்கோம் மீராபாய் சானுவின் அற்புதத்தால் இந்தியா உற்சாகமடைந்துள்ளது. பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வோா் இந்தியரையும் உத்வேகப்படுத்தும்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்: ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு பதக்கம். பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றாா் சாய்கோம் மீராபாய் சானு. இந்தியா உங்களுக்காக பெருமை கொள்கிறது மீரா.

இதேபோல், முன்னாள் பளுதூக்குதல் வீராங்கனை கா்ணம் மல்லேஸ்வரி, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கா், துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா, பளுதூக்குதல் வீரா் சதீஷ் சிவலிங்கம், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்பட பல்வேறு பிரபலங்கள் மற்றும் இதர தரப்பினரின் வாழ்த்துகளும் சானுவுக்கு குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com