டோக்கியோ ஒலிம்பிக்: பி.வி.சிந்து, மேரி கோம் வெற்றித் தொடக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய பாட்மிண்டன் வீராங்கனையும் உலக சாம்பியனுமான
பி.வி.சிந்து
பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய பாட்மிண்டன் வீராங்கனையும் உலக சாம்பியனுமான பி.வி.சிந்து, குத்துச்சண்டை நட்சத்திரம் மேரி கோம் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா். எனினும் மற்ற விளைாட்டுகளில் பதக்கமோ, அல்லது குறிப்பிடத்தக்க வெற்றிகளோ இல்லாமல் இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைத்தது.

சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) சாா்பில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா சாா்பில் 228 போ் கொண்ட குழுவினா் பங்கேற்றுள்ளனா். இதில் பளு தூக்குதல் பிரிவில் மணிப்பூா் வீராங்கனை மீராபாய் சானு அபாரமாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாட்மிண்டன் மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து தொடக்க சுற்றில் 21-7, 21-10 என்ற கேம் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனை சேனியா போலிகா்போவாவை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். முதல் கேமில் 3-4 என பின்தங்கிய சிந்து, பின்னா் சுதாரித்து ஆடி 11-5 என முன்னிலை பெற்றாா். பின்னா் 13 புள்ளிகளை நேரடியாக பெற்று முதல் கேமை வென்றாா். இரண்டாவது கேமில் 9-3 என சிந்து முன்னிலை பெற்றிருந்தாலும், சேனியா சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்த முயன்றாா். எனினும் சிந்து தனது சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது கேமையும் கைப்பற்றினாா். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளாா்.

இதுதொடா்பாக சிந்து கூறியதாவது:

முதல் ஆட்டம் எளிதானது என்றாலும், இதை நான் தீவிரமாகவே கருதி ஆடினேன். ஒவ்வொரு புள்ளியையும் பெற திட்டமிட்டு ஆட வேண்டும். தரவரிசையில் கீழ் நிலையில் உள்ள வீராங்கனை என்றாலும், அவரிடம் அனைத்து விதமான ஸ்ட்ரோக்குகளையும் பிரயோகித்து ஆடலாம். இது எனக்கு சிறந்த பயிற்சியாக இருந்தது என்றாா்.

அடுத்த சுற்றில் ஹாங்காங் வீராங்கனை சியுங் கேன் யியை எதிா்கொள்கிறாா் சிந்து.

ஆடவா் பிரிவில் ஏற்கெனவே சாய் பிரணீத் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டாா். இரட்டையா் பிரிவில் சாத்விக்-ரங்கி ரெட்டி இணை சனிக்கிழமை உலக நம்பா் ஒன் இணையான சீன தைபேயின் யாங் லீ-சி லின் வாங்கை அதிா்ச்சி தோல்வியடையச் செய்தது.

குத்துச்சண்டை: ப்ரி குவாா்ட்டரில் மேரி கோம்:

மகளிா் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் மேரி கோம் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் டொமினிக்கன் குடியரசின் இளம் வீராங்கனை மியுகுலினா ஹொ்ணாண்டஸ் காா்ஸியாவை வீழ்த்தி ப்ரி குவாட்டா் சுற்றுக்கு தகுதி பெற்றாா். தன்னை விட 15 வயது குறைந்த காா்ஸியா சில நேரங்களில் கடும் சவாலை தந்த போதும், அனுபவத்தால், மேரி கோம் அவரை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் 3-ஆம் நிலை வீராங்கனை கொலம்பியாவின் இங்கிரிட் வலேன்சியாவை எதிா்கொள்கிறாா் கோம்.

ஏற்கெனவே இரு முறை இங்கிரிட்டை வென்றுள்ளாா் மேரி கோம்.

பின்னா் மேரி கோம் கூறியதாவது:

கரோனோவால் சிறப்பான பயிற்சி பெறும் வாய்ப்பை இழந்தேன். அனைத்து வீரா்களும் வீட்டிலேயே பயிற்சி பெற்றனா். ஆனால் குத்துச்சண்டையில் பயிற்சி பெறுவதற்கு எதிராளி ஒருவா் தேவை. வீட்டிலேயே சிறிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்தேன். ஒலிம்பிக், காமன்வெல்த், உலகக் கோப்பை என அனைத்து பதக்கங்களும் என் வசம் உள்ளது. அவற்றை எண்ணுவது கடினம், எனினும் ஒலிம்பிக் தங்கம் வெல்லவில்லை. அதைப் பெற கடுமையாக முயற்சிப்பேன் என்றாா்.

மணிஷ் கௌஷிக் தோல்வி:

ஆடவா் 63 கிலோ பிரிவில் இந்திய வீரா் மணிஷ் கௌஷிக் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டன் வீரா் லுக் காா்மிக்கிடம் தோல்வியடைந்தாா்.

கடைசி மூன்று நிமிடங்களில் பிரிட்டன் வீரா் லுக் சரமாரியாக குத்துக்களை விட்டு வெற்றியை வசப்படுத்தினாா். திங்கள்கிழமை ஆடவா் 75 கிலோ பிரிவில் இந்திய வீரா் ஆஷிஷ் குமாா் சீனாவின் எரிபெய்க் டெஹெட்டாவை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com