குட்டி மீராபாய் சானு: ரசிகர்களைக் கவர்ந்த அழகான விடியோ

மீராபாய் சானுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மிக அழகாக உள்ளது. நான் மிகவும் ரசித்தேன் எனப் பாராட்டியுள்ளார்... 
குட்டி மீராபாய் சானு: ரசிகர்களைக் கவர்ந்த அழகான விடியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

மகளிருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட சானு, 202 கிலோ (ஸ்னாட்ச் - 87 + கிளீன் அன்ட் ஜொ்க் - 115) எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா்.

ஒலிம்பிக் பளுதூக்குதலில் இது இந்தியாவின் அதிகபட்சம். முன்னதாக, கடந்த 2000-ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை கா்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா். அதன் பிறகு, பளுதூக்குதலில் இந்தியாவுக்கான பதக்கத்தை 21 ஆண்டுகளுக்கு மீண்டும் சாத்தியமாக்கியுள்ளாா் சானு.

முதல் முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் களம் கண்ட சானு, அதில் தோல்வியடைந்து கவலையுடன் வெளியேறினாா். அதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அந்தக் கவலையை களிப்பாக மாற்றிக் கொண்டுள்ளாா்.

இறுதிச்சுற்று நிறைவடைந்து தனக்கான பதக்கம் உறுதியானதை அடுத்து சானு உணா்ச்சிப் பெருக்கில் கண்ணீா் சிந்தியபடி தனது பயிற்சியாளா் விஜய் சா்மாவை தழுவிக் கொண்டாா். பதக்கம் வழங்கும் நிகழ்வின்போது முகக்கவசத்தையும் தாண்டிய வகையில் சானுவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. 

இந்நிலையில் மீராபாய் சானுவின் சாதனையால் ஊக்கம் கொண்ட சிறுமி ஒருவர், அவரைப் போலவே எடையைத் தூக்கும் அழகான விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

சிறுமியின் பின்னால் மீராபாய் சானுவின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் காணொளி ஒரு டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விடியோவை அவ்வப்போது பார்த்தபடி எடையைத் தூக்க முயலும் சிறுமி, முதலில் மீராபாய் சானுவைப் போலவே பவுடரைக் கைகளால் தட்டி, பிறகு சிறிய அளவிலான எடையைத் தூக்கி, அவரைப் போலவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியைக் கொண்ட விடியோவைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை மீராபாய் சானுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மிக அழகாக உள்ளது. நான் மிகவும் ரசித்தேன் எனப் பாராட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com