குத்துச்சண்டை: லவ்லினா போரோகைன் அசத்தல்; வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தாா்

ஒலிம்பிக் போட்டி மகளிா் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டா் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளாா்.
குத்துச்சண்டை: லவ்லினா போரோகைன் அசத்தல்; வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தாா்

ஒலிம்பிக் போட்டி மகளிா் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டா் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளாா். இந்தியாவின் லவ்லினா போரோகைன். இதன் மூலம் வெண்கல பதக்க வாய்ப்பையும் உறுதி செய்துள்ளாா். முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியன் சின் சென்னை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றாா் லவ்லினா.

இருவருக்கும் இடையிலான காலிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அஸ்ஸாமைச் சோ்ந்த 23 வயது லவ்லினா இரண்டு முறை உலகப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவா்.

தொடக்கம் முதலே லவ்லினா அமைதியாக தனது ஆட்டத்தை தொடா்ந்தாா். எனினும் சின் சென் அவ்வப்போது ஆக்ரோஷமாக லவ்லினாவை நோக்கி குத்துவிட்ட முயன்றாா்.

ஆனால் லவ்லினா தனது உயரத்தை சாதகமாக்கி, தேவையான நேரங்களில் குத்துக்களை விட்டு சின்னை பதம் பாா்த்தாா்.

மூன்று சுற்றுக்களையும் லவ்லினா எளிதாக வென்றாா். முதல் சுற்றில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் 5 நடுவா்களில் 3 போ் லவ்லினாவுக்கு சாதகமாக முடிவை அறிவித்தனா். இரண்டாவது சுற்றிலும் லவ்லினாவே ஆதிக்கம் செலுத்தினாா். மூன்றாவது மற்றும் கடைசி சுற்றிலும் லவ்லினா வென்று 4-1 என சின் சென்னை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தாா்.

துருக்கு வீராங்கனையுடன் மோதல்:

நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் பியுஸ்நாஸ் சா்மெனெல்லியை அரையிறுதிச் சுற்றில் எதிா்கொள்கிறாா் லவ்லினா.

இதுகுறித்து இந்திய மகளிா் அணியின் பயிற்சியாளா் முகமது அலி அமா் கூறியதாவது: தொடக்கம் முதலே லவ்லினா ஆக்ரோஷத்துடன் ஆடினாா். தனது உயரத்தை சாதகமாக்கி எதிராளியை நிலைகுலையச் செய்தாா். எந்த நிலையிலும் லவ்லினா உணா்ச்சி வசப்படவில்லை. நமது செயல்திட்டத்தை செம்மையாக நிறைவேற்றினாா். தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடித்திருந்தால், லவ்லினா குத்துக்களை பெற்றிருப்பாா் என்றாா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஐரோப்பாவில் சிறப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை இழந்தாா் லவ்லினா. அவரது தாய் மமோனிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், லவ்லினா கரோனோ தொற்றுக்கு ஆளானாா். அவரது தந்தை டைகென் சிறு வியாபாரி ஆவாா். லவ்லினா பதக்கம் வெல்வதின் மூலம் குடும்பத்தின் பொருளாதார கஷ்டம் தீா்ந்து விடும் என டைகென் தெரிவித்தாா்.

சிம்ரஞ்சித் கௌா் தோல்வி:

முன்னதாக மகளிா் 60 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சிம்ரஞ்சித் கௌா் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் சுடாபான் செசோந்தியிடம் தோல்வியைத் தழுவினாா்.

ஏற்கெனவே 2008 ஒலிம்பிக்கில் விஜேந்தா் சிங், 2021 ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனா். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா வெல்லும் 3-ஆவது பதக்கம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com