சர்வதேச விளையாட்டு அரங்கில் எதிர்நீச்சல்!

ஒலிம்பிக்கில் முத்திரை பதித்துவிட்டுத் திரும்பியிருக்கும் மூவருமே பெண்கள் என்பது ஒரு சிறப்பு.

ஒலிம்பிக்கில் முத்திரை பதித்துவிட்டுத் திரும்பியிருக்கும் மூவருமே பெண்கள் என்பது ஒரு சிறப்பு.

ரியோவிலிருந்து வெறுங்கையுடன் திரும்பி வந்துவிடுமோ என்று நாட்டின் நூறு கோடி இதயங்கள் கனத்துப்போய் காத்திருந்தபோது, மல்யுத்த போட்டியில் சாக்ஷி மாலிக், 2016 ஒலிம்பிக்கின் முதல் பதக்கத்தை இந்தியாவுக்காக பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து, இறுதியாட்டம் வரை போராடி, பாட்மிண்டனில் சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நம்மில் பலர் கனவிலும் எதிர்பாராத வகையில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் 4-ஆம் இடத்தில் வந்தார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் நம் நாட்டுக்கு வெற்றிகளைக் குவித்ததில் பெண்களுக்கு எப்போதுமே பெரும் பங்கு இருந்து வந்துள்ளது.

பி.டி.உஷா காலந்தொட்டு, மேரி கோம், சாய்னா நேவால், சானியா மிர்ஸô, அஞ்சு ஜார்ஜ், கர்ணம் மல்லேஸ்வரி என வரிசையாக வெற்றி வலம் வந்தது நமது மங்கைகள்தான்.

ஜிம்னாஸ்டிக்ஸின் பல்வேறு பிரிவுகளில் ஐரோப்பிய விளையாட்டு வீரர்களும் சீனர்களும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தீபா கர்மாகர் தனித்துப் போராடி குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார். துரதிருஷ்டம் அவரைத் தீண்டியதில் 3-ஆம் இடத்தை தப்பவிட்டார்.

நம் நாட்டில் பெண் குடியரசுத் தலைவர், பெண் பிரதமர், ஆளுநர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என்று ஏராளமான வெற்றிப் பெண்மணிகள் இருக்கும்போது, ஒலிம்பிக்கில் பெண்கள் முன்னிலையில் வந்திருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தத் தேவையில்லைதான்.

ஆனால், சிந்து, சாக்ஷி, தீபாவின் வெற்றியைக் கூர்ந்து கவனித்தால் - இந்த மூவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வெளிப்படும். இவர்கள் மூவரும் சராசரி இந்திய குடும்பங்களில் பிறந்து, நம் நாட்டின் விளையாட்டுத் துறையில் பரவலாகக் காணும் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து வெற்றிப் படிகளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டத்தில் பிறந்தவர் சாக்ஷி. நாட்டில் ஆண்-பெண் மக்கள்தொகை விகிதாசாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மாவட்டங்களில் ஒன்றுதான் ரோத்தக். ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற விகிதத்துக்கும் குறைவாக உள்ள நிலையை "பாலின நெருக்கடி' என்று சமூகவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹரியாணா மாநிலத்தையே எடுத்துக் கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள்தான் உள்ளனர். நாட்டிலேயே மிகக் குறைவான ஆண்-பெண் விகிதாசாரம் உள்ள மாநிலம் ஹரியாணாதான். ரோத்தக் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 867 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.

பொதுவாகவே மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் ஆண்மை நிறைந்த சமாச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் ஹரியாணாவின் ரோத்தக் போன்ற இடத்தில் மல்யுத்த விளையாட்டில் சாக்ஷி மாலிக் ஆர்வம் காட்டியதே பெரிய புரட்சிதான்.

"பெண்களாவது, மல்யுத்த விளையாட்டில் கட்டிப் புரண்டு சண்டை போடுவதாவது' என்று அண்டை வீட்டாரும் உறவினர்களும் ஏளனம் செய்ததை, கடிந்து கொண்டதை தனது வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கேட்டே சாக்ஷி வளர்ந்திருக்க வேண்டும்.

"பெண்ணாக அடக்க ஒடுக்கமாக இரு', "இது பெண்களுக்கு உகந்தது அல்ல', "ஒழுக்கமான பெண் இது மாதிரியெல்லாம் செய்ய மாட்டாள்' - என்பதுபோன்ற சுடு சொற்களைக் அனுதினமும் அவர் காதில் காய்ச்சி ஊற்றிக் கொண்டே இருந்திருப்பார்கள், சந்தேகமேயில்லை.

ஆனால் தன் வெற்றியால் எல்லார் வாயையும் அடைத்துவிட்டார் சாக்ஷி. "உங்கள் பெண்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை காட்டுங்கள்' என்று ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்றதும் சாக்ஷி கூறினார். அவநம்பிக்கையை மட்டுமே ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் அழுகுரலாக அது ஒலிக்கவில்லை. உலக அரங்கில் வெற்றி பெற்று, அதன் வழியாக வந்த வேண்டுகோள் அது.

அடங்கிவிடாதே, பெண்ணே!

சிந்துவின் பெற்றோர் இருவருமே விளையாட்டு வீரர்கள். தேசிய அளவில் வாலிபால் விளையாடியவர்கள். எனவே விளையாட்டு அரங்கில் சிந்து பிரவேசித்தபோது வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, யாரும் ஆச்சரியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பொழுதுபோக்காக விளையாடிவிட்டு, பிறகு கையையும் காலையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்தால் யாருக்குப் பயன்? கடும் போட்டி நிலவும் தேசிய - சர்வதேச விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு இந்த மனப்பான்மை உதவாதே...

பாட்மிண்டனை சிறப்பாகப் பயில்வதற்காகப் பயிற்சியாளர் கோபிசந்த் முன்னால் சிறுமியாக நின்ற சிந்துவுக்கு முதலில் அவர் சொல்லிக் கொடுத்தது, நாலு பேர் முன்னால் நன்றாக அலற வேண்டும் என்பதுதான்!

ஒவ்வொரு புள்ளியையும் வென்றவுடன் அடங்கியிருக்காமல், ஆக்ரோஷமாக வெற்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டும் - ஆவேசத்தோடு அடுத்த புள்ளிக்காக விளையாட வேண்டும்.

ஒலிம்பிக் அரையிறுதி ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்திலும் பெண் சிங்கமாக சிந்து கர்ஜித்ததைப் பார்த்தவர்கள், அது அவருடைய இயல்பு என்றே நம்பிவிடுவார்கள். ஆனால் கடுûமான போட்டிகள் நிறைந்த சர்வதேச விளையாட்டு அரங்கில், சிந்துவை வெற்றி கர்ஜனை செய்ய வைத்தவர் கோபிசந்த். பயிற்சிக் காலத்திலேயே அந்த ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் விளையாட்டின் ஓர் அங்கமாக சிந்துவுக்கு கோபிசந்த் சிறிது சிறிதாகப் புகட்டிப் பயிற்சியளித்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இதற்காகவே சிந்துவுடன் போராடியிருக்கிறார் கோபிசந்த்!

ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளை ஐரோப்பியர்களுக்கும் கடந்த ஓரிரண்டு பதிற்றாண்டுகளாக சீனர்களுக்கும் சாசனம் எழுதிக் கொடுக்காத குறைதான்! நம் நாட்டின் வட கிழக்கு மூலையில் அமைந்த திரிபுரா மாநிலத்தில் பிறந்த சிறுமி தீபாவுக்கு அப்படிப்பட்ட விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது!

ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய தீபா கர்மாகரை, ஆரம்ப காலங்களில் யாரும் பொருட்படுத்தவில்லை. எட்டு வயதில் அவர் ஜிம்னாஸ்டிக் அரங்கில் நுழைந்தபோது, அந்த விளையாட்டுக்கு வேண்டிய வடிவில் அவருடைய பாதங்கள் இல்லை என்று அவரை நிராகரித்தார்கள். விடாப்பிடியாக இருந்த அவரை ஏளனம் செய்தவர்கள் ஏராளம். தீபாவின் கனவுகள் அப்போது மிகவும் சாதாரணமாக இருந்தன. அதிகபட்சமாக தேசிய அளவில் அங்கீகரிக்கப்படும் வீராங்கனையானால், எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும் என்பதுதான் தீபாவின் எண்ணமாக இருந்தது. அவருடைய பயிற்சியாளருக்கும் அந்த அளவுக்குதான் நம்பிக்கை இருந்தது.

நம் நாட்டில் விளையாட்டுத் துறையில் எதிர்காலம் என்பது, தேர்ந்தெடுத்த பிரிவில் குறிப்பிட்ட அளவு வெற்றி, அடுத்தது வேலைவாய்ப்பு.

உலகின் மறு பகுதியில் விளையாட்டு என்றால், வெற்றி, மேன்மை, உயர்வு, ஒலிம்பிக் பதக்கங்கள் என்று சிந்திக்கிற நிலையில், நம் நாட்டில் எதிர்காலம் என்பது வேலை, குடும்பம், வருமானம், இன்னல்கள் இல்லாத ஓய்வு காலம் - என்கிற வகையில் சிந்திப்பதாக இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் சிந்து, சாக்ஷி, தீபாவின் வெற்றியை நாம் காண வேண்டியிருக்கிறது.

தங்களுடைய அபார உழைப்பால் சிந்து, சாக்ஷி, தீபா நம் நெஞ்சங்களில் குடியேறிவிட்டார்கள். நம் நாட்டில் விளையாட்டு ஆர்வம் துளிர்விடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் - ஏன், அவர்களின் பெற்றோர்களுக்கும், இந்த மூவரின் வெற்றியும் வழிகாட்டி விளக்காக இருக்கும் என்று நம்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com