2019-ம் ஆண்டில் சர்ச்சைகளில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்காக...
2019-ம் ஆண்டில் சர்ச்சைகளில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள்

இந்த வருடம் உலகக் கோப்பை, ஐபிஎல் என பல போட்டிகளில், பல ஆட்டங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அவற்றின் தொகுப்பு:

காபி வித் சர்ச்சை: பாண்டியா & ராகுல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிக்கல்களுக்கு ஆளானார்கள். 

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பெண்கள் தொடர்பாக தரக்குறைவான கருத்துக்களை கூறினர் என கடும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக இருவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவில் இருந்து 2 பேரையும் நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் தற்காலிகமாக சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர். இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரி கடிதம் அளித்தனர்.

பின்னர் இப்பிரச்னை குறித்து பிசிசிஐ சிஓஏ உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. மத்தியஸ்தரை நியமிக்கப்படும்படி மனு தாக்கல் செய்தது. பாண்டியா-ராகுல் பிரச்னை மீது விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் முடிவை நிறுத்தி வைத்தது. இதையடுத்து இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வந்தனர். இதற்கிடையே ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயினை பிசிசிஐ மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் நியமித்தது. அவர் பாண்டியா-ராகுல் பிரச்னை குறித்து விசாரணை மேற்கொண்டார். இருவரையும் அழைத்து நேரில் விசாரணை செய்தார். பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பணியின் போது உயிரிழந்த துணை ராணுவ படைகள் விதவையர் 10 பேருக்கு தலா ரூ.1 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்துக்கு வைப்பு நிதியாக இருவரும் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவை அனைத்தையும் 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?

கிரிக்கெட் உலகுக்கு சச்சின் டெண்டுல்கர் என்ற ஜாம்பவானை அறிமுகம் செய்த முன்னாள் பயிற்சியாளர் ரமாகந்த் அச்ரேகர் (87), மும்பையில் கடந்த ஜனவரி மாதம் காலமானார்.

கிரிக்கெட் வீரராக அச்ரேகர் ஒரேயொரு முதல்தர கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் என்ற நட்சத்திர வீரரை இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கண்டறிந்து தந்து பெருமை பெற்றார். தாம் சிறுவனாக இருந்தபோது தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக நேர்த்தியாக செதுக்கிய பெருமை அச்ரேகரையே சேரும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சின் தவிர்த்து, வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே, சமீர் திகே, பல்வீந்தர் சிங் சாந்து போன்ற வீரர்களையும் பயிற்றுவித்த அச்ரேகருக்கு, 2010-இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக 1990-இல் துரோணாச்சார்யா விருதும் அவர் வென்றுள்ளார்.

சிவாஜி பார்க் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அச்ரேகரின் உடல் வைக்கப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அச்ரேகரின் உடலை சச்சின் தோளில் சுமந்து சென்றார். காம்ப்ளி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். 

இந்நிலையில் அச்ரேகரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன் என்கிற கேள்வியை எதிர்கொண்டது மஹாராஷ்டிர அரசு. இந்திய முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் உடல்கள் அரசு மரியாதையுடன் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டன. எனில், பத்ம ஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளைப் பெற்றுள்ள அச்ரேகருக்கு அரசு மரியாதை அளிக்காதது ஏன் என்கிற சர்ச்சை எழுந்தது. 

இதுபற்றி மஹாராஷ்டிர அரசின் வீட்டு வாரியத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா கூறியதாவது: நடந்த சம்பவங்களுக்கு மஹாராஷ்டிர அரசின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன நடந்தது என்று விசாரிக்கிறேன். விளையாட்டுத்துறை அமைச்சர் வினோத் தாவ்தே மும்பையில் இல்லாததால் நெறிமுறைகளைச் சரியாக கவனிக்கமுடியவில்லை. இதுகுறித்து முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் விளையாட்டுத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அச்ரேகரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து பொது நிர்வாகத் துறையின் நெறிமுறைகள் பிரிவுதான் கவனிக்கவேண்டும். மஹாராஷ்டிராவில் முக்கியமான நபர் இறந்துபோனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டுமா கூடாதா என்பது குறித்து நெறிமுறைகள் பிரிவுதான் முடிவு செய்யும். இந்த விஷயத்தில் நாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மன்கட் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்!

ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ்பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் 184 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ஜோஸ்பட்லரின் அபார ஆட்டத்தால் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. 43 பந்துகளில் 69 ரன்களுடன் பட்லர் அபாரமாக ஆடிய நிலையில் 13-ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது 5-ஆவது பந்தில் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்த ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஸ்வின். 

ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஒரு போட்டியிலும் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அதன் வீரர் சேனநாயகே. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பவுலர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் அஸ்வினும் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 1947இல் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி வீரர் பிரவுனை இம்முறையில் ரன் அவுட் செய்தார் இந்தியாவின் வினோத் மன்கட். இதுகுறித்து அப்போதே பெரிய விவாதம் எழுந்தது. எனினும் கிரிக்கெட்டின் விதிமுறைகளில் இந்த அவுட் உள்ளது. இதனால் மன்கட் முறை அவுட் என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.

பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறினார். நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது என்றார்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் அணி ஆலோசகர் ஷேன் வார்னே கூறியதாவது-
அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தது கண்டனத்துக்குரியது. அனைத்து கேப்டன்களும் ஆட்டம் நல்லமுறையில் நடைபெற உறுதியேற்பதாக கூறி கையெழுத்திடுகின்றனர். ஆனால் அஸ்வினுக்கு பந்துவீசவே எண்ணமில்லை. டெட் பாலாக கூறியிருக்கலாம். இதுபோன்ற போக்கு ஐபிஎல் போட்டிக்கு நல்லதில்லை. பிசிசிஐ கவனத்தில் கொள்ள வேண்டும்.எந்த வகையிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டின் நேர்மையை பேண வேண்டும். இதுபோல் கோலிக்கு செய்திருந்தால் பேசாமல் இருப்பார்களா? என்றார்.

ஆட்டத்தின் மரியாதை கருதி முந்தைய சீசனில் போட்டி தொடங்கும் முன்பு அனைத்து ஐபிஎல் கேப்டன்கள் கோலி, தோனி உள்பட பங்கேற்ற கூட்டத்தில் மன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட் செய்யக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது என்றார் ஐபிஎல் தலைவர் சுக்லா.

மைதானத்தில் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த தோனி

மைதானத்தில் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த சென்னை கேப்டன் தோனிக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

ராஜஸ்தானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஸ்பட்லர் நோபால் வீசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து  கோபத்தில் மைதானத்தின் உள்ளே நுழைந்த தோனி நடுவர் உல்ஹாஸ் காந்தே, புருஸ் ஆக்ஸன்போர்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நோபால் தொடர்பாக 2 நடுவர்களிடம் வாக்குவாதம்  மேற்கொண்டார்.

இது ஐபிஎல் விதி 2.20 பிரிவின் கீழ் விதிமீறல்  என ஆட்ட நடுவர் அறிக்கை அளித்தார். தோனியும் தனது தவறை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தோனியின் செயல்பாடு குறித்து விசாரிக்கப்பட்டாலும், அவர் நடுவர்களிடம் தெளிவு பெறுவதற்காக தான் மைதானத்தில் நுழைந்தார். பந்துவீச்சின் போது நடுவர் நோபால் சைகை காண்பித்தார். ஆனால் அது இல்லை எனத் தெரிந்ததால், இந்த குழப்பம் ஏற்பட்டது. இதனால் தெளிவு பெறுவதற்காக தோனி சென்றார். இது தவறா சரியா என்பதை நான் கூற முடியாது என்று சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஃபிளெமிங். 

ராணுவ முத்திரை கொண்ட தோனி கையுறை

உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ முத்திரை போன்ற அடையாளத்துடன் கூடிய பச்சை நிற கையுறைகளை அணிந்திருந்தார். தோனி, பிராந்திய படையில் கெளரவ அந்தஸ்துள்ள லெப்.கலோனல் பதவியிலும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கையுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாகிஸ்தான் தரப்பும் இப்பிரச்னை தொடர்பாக தனது ஆட்சேபத்தை ஐசிசியிடம் வெளிப்படுத்தியது. இதையடுத்து தோனியின் கையுறையை அகற்றும்படி ஐசிசி கூறியது. 
 
ஆனால், தோனி அதே கையுறையை உலகக் கோப்பை போட்டியில் அணிவார். அது ராணுவ அடையாளம் இல்லை. இதற்காக ஐசிசி.யிடம் முறையான அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளது என அதன் சிஓஏ வினோத் ராய் கூறினார். ஐசிசி விதிமுறைகளின்படி வர்த்தக, மத, ராணுவ அடையாளங்களை வீரர்கள் அணியக்கூடாது. எனவே ஐசிசி இதற்கு அனுமதி மறுத்தது. 

உலகக் கோப்பை இறுதிப் போட்டி சர்ச்சை 1

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் ஏற்பட்ட சிக்கல் எதிரொலியாக, பவுண்டரி எண்ணிக்கை விதியை ரத்து செய்தது சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

2019 உலகக் கோப்பைப் போட்டி சமீபத்தில் நிறைவுபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடிமுடிந்த நிலையில் ஆட்டம் சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

எனினும் சூப்பர் ஓவர் வழியாக முடிவைக் கண்டடையாமல் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஐசிசியின் விதிமுறைக்குப் பலத்த கண்டனம் எழுந்தது. இதுபோன்ற தர்க்கம் இல்லாத விதிமுறைகளை மாற்றவேண்டும் என்றும் பல தரப்பிலிருந்தும் ஐசிசிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

உலகக் கோப்பைப் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாகப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடைந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்யும் பழைய நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உலகக் கோப்பைப் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 50 ஓவர், டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் எந்த ஆட்டம் டை-யில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நாக் அவுட் ஆட்டங்களில் மட்டுமே சூப்பர் ஓவர் நடைமுறை இருந்தது. லீக் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் புள்ளிகள் இரு அணிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி சர்ச்சை 2

இங்கிலாந்து-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஓவர் த்ரோவில் கூடுதலாக ஒரு ரன் வழங்கிய சர்ச்சை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி பதில் அளித்தது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதில் ரஷீத்-பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பீல்டிங் செய்த கப்டில் பந்தை வீசுவதற்கு முன்னரே ஓடிச் செல்லவில்லை. ஓவர் த்ரோவாக வீசப்பட்ட பந்து பென் ஸ்டோக்ஸ் கிரீஸை தொட முயன்ற ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து சென்றது.

கப்டில் வீசிய ஓவர் த்ரோவுக்காக 5 ரன்கள் மட்டுமே அளித்திருக்க வேண்டும். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் குமார் தர்மசேனா-மரைஸ் எராஸ்மஸ் ஆகியோர் கடைசி ஓவரின் 3-ஆவது பந்தில் இங்கிலாந்துக்கு 6 ரன்களை கூடுதலாக வழங்கினர். இதனால் மறுபடியும் பென் ஸ்டோக்ஸ் ஆட வாய்ப்பு பெற்றார். இறுதியில் இங்கிலாந்தும் 241 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஓவர் த்ரோவுக்கு கூடுதல் ரன் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

5 முறை ஐசிசி சிறந்த நடுவர் விருதைப் பெற்ற சைமன் டெளஃபெல் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 5 ரன்களுக்கு பதிலாக இங்கிலாந்துக்கு 6 ரன்களை வழங்கி நடுவர்கள் தெளிவாக தவறு புரிந்துள்ளனர் என சாடினார். ஐசிசி விதி 19.8-இன்படி பீல்டர் கையில் இருந்து பந்து வீசப்பட்டால் தான் அதுவும் பேட்ஸ்மேன்கள் கடந்து சென்றால் மட்டுமே கூடுதலாக 1 ரன் வழங்க வேண்டும். ஆனால் இது தவறு என்றார் சைமன்.

இதுதொடர்பாக பதிலளித்துள்ள ஐசிசி, மைதானத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றவாறும் விதிகளின்படியும் நடுவர்கள் முடிவெடுக்கின்றனர். நடுவர்கள் முடிவு குறித்து விமர்சிப்பது என்பது ஐசிசியின் கொள்கைக்கு எதிரானது எனத் தெரிவித்தது. 

தென் ஆப்பிரிக்க அணியும் டி வில்லியர்ஸும்!

2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் முயன்றார் என்கிற அதிரடித் தகவல் ஜூலை மாதம் வெளியானது. 

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, தான் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ். ஆனால் இது சாத்தியமில்லை என்று உடனடியாக டி வில்லியர்ஸுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்த செய்தி, உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் சமயத்தில் வெளியானதால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்தார்கள்.

தன்னைப் பற்றிய இந்த சர்ச்சைக்கு ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் அளித்தார். அறிக்கையில் அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்க அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதால், இதன்மூலம் அவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படாது என்பதால், என் மீதான நியாயமற்ற விமரிசனத்துக்குப் பதில் அளிக்கவுள்ளேன். 

உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எனக்கும் கேப்டன் டு பிளெஸ்ஸிக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட உரையாடலுக்கு விளக்கமளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்ன நடந்தது என்று கூறுகிறேன்.

என்னுடைய பணிச்சுமையைக் குறைத்துக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் 2018 மே மாதம் என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். பணத்தின் காரணமாக இந்த முடிவை நான் எடுத்ததாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் சொல்வது தவறு. உண்மையில் அதிக வருமானம் உடைய வாய்ப்புகள் வந்தபோதும் அதை நான் மறுத்துள்ளேன். ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் எட்டு மாதங்கள் விளையாடியதிலிருந்து மூன்று மாதங்களாகக் குறைத்தேன். பிறகு எனக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் அவர்களை அழைக்கவில்லை, அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துவிட்டேன். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியும் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் மற்றும் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் தலைமையில் வெற்றிகளைக் கண்டது. 

இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்ததிலிருந்து நானும் டுபிளெஸ்ஸியும் நண்பர்களாக உள்ளோம். உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு, அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். ஐபிஎல்-லில் ஓரளவு நன்றாக விளையாடிக்கொண்டிருந்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு என்னிடம் கேட்டபோது சொன்னதையே அப்போதும் மீண்டும் சொன்னேன், தேவைப்பட்டால் நான் அணிக்குள் வரத் தயார் என்றேன். தேவைப்பட்டால் மட்டும்தான் என்றேன். எவ்வித நிபந்தனையையும் நான் விதிக்கவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தென் ஆப்பிரிக்க அணிக்குள் என்னை பலவந்தமாக நுழைக்கவில்லை. என்னைத் தேர்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. என் பக்கமிருந்து எவ்வித புகாரும் இல்லை, அநியாயம் நடைபெற்றதாகவும் கருதவில்லை. 

ஆனால் திடீரென, இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி தோற்றபிறகு, மூன்றாவது தொடர் தோல்வியைச் சந்தித்த பிறகு, எங்களுக்குள் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடல் ஊடகங்களுக்குக் கசிந்தன. என்னை வில்லனாகச் சித்தரித்தன. அந்தத் தகவல் என்னாலோ என்னைச் சேர்ந்தவர்களாலோ, டுபிளெஸ்ஸிஸாலோ வெளியே தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை, உலகக் கோப்பை தோல்வி விமரிசனங்களை வேறு பக்கம் திருப்புவதற்காகச் சொல்லியிருக்கலாம். தெரியவில்லை.

இதனால் சுயநலக்காரனாக, ஆக்ரோஷமானவனாக நான் சித்தரிக்கப்பட்டுள்ளேன். ஆனால் நான் தெளிவாக உள்ளேன். நியாயமான காரணங்களுக்காக நான் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். உலகக் கோப்பைப் போட்டிக்கு நான் வருவேனா என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைக்க சம்மதித்தேன். உலகக் கோப்பைப் போட்டியில் அணி நல்லவிதமாக என்னுடைய ஓய்விலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருந்தது. இதனால் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. 

என் வாழ்க்கையின் இக்கட்டத்தில் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழித்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகளவில் நடைபெறும் குறிப்பிட்ட சில டி20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவெடுத்துள்ளேன். என் நாட்டுக்காக விளையாடியதைப் பெருமையாக எண்ணுகிறேன். தென் ஆப்பிரிக்க வீரர்களுடான என்னுடைய உறவு எப்போதும் வலுவாக உள்ளது. அடுத்தத் தலைமுறைக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளேன்.

தேவையற்ற இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தும் வேளையில், எனக்கு நட்புகளையும் வாய்ப்புகளையும் அளித்த அணிக்கும் கிரிக்கெட்டுமான என்னுடைய ஆதரவை எப்போதும் அளிப்பேன் என்று கூறினார்.

மற்றொரு ஸ்டோக்ஸ் சர்ச்சை: விளக்கம் அளித்த மனைவி!

விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார் ஸ்டோக்ஸின் மனைவி.

அக்டோபர் மாதம், லண்டனில் பிசிஏ விருதுகள் வழங்கும் விழாவில் மனைவியுடன் கலந்துகொண்டார் பென் ஸ்டோக்ஸ். சிறந்த வீரர் என்கிற விருது ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவி கிளாரேவுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தன் மனைவியை ஸ்டோக்ஸ் அடித்ததாகவும் கிளாரேவின் தொண்டையில் கையை வைத்து தள்ளியதாகவும் செய்தி ஒன்று வெளியானது. 

செய்தி வெளியான உடனே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் கிளாரே. இவ்வளவு மோசமான கதை ஒன்று உருவாக்குவார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஒருவருக்கொருவர் முகத்தில் கையை வைத்து விளையாடினோம். அப்படித்தான் நாங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம். இதிலிருந்து ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள். இதன்பிறகு மெக்டொனால்ட்ஸில் 20 நிமிடங்கள் செலவழித்தோம் என்று கூறியுள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய பிரித்வி ஷா

கடந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ஆடி ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிரித்வி ஷா. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.  

காயத்தில் இருந்து குணமடைந்த பிரித்வி, சையத் முஷ்டாக் அகமது டி20 போட்டியில் பங்கேற்று ஆடினார். அப்போது அவர் தடை செய்யப்பட்ட டெர்புடலைன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியதாகச்  சோதனையில் தெரியவந்தது. இந்த ஊக்க மருந்து இருமலுக்கான மருந்தில் கலந்திருக்கும். மருத்துவர்களின் அறிவுரையின்றித் தானாக இருமலுக்கான மருந்தை வாங்கி இந்தச் சிக்கலில் மாட்டியுள்ளார் பிரித்வி ஷா. இதையடுத்து, அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் 8 மாதங்கள் பங்கேற்கத் தடை விதித்துள்ளது பிசிசிஐ. இதனால் அவர் மார்ச் 16 முதல் நவம்பர் 15 வரை விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் பிருத்வி ஷாவால் இடம்பெற முடியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com