இவ்வளவு பாராட்டுகளுக்கு உரியதா ஹிமா தாஸின் 5 தங்கங்கள்?: உண்மை நிலவரம் என்ன?

அவருடைய சிறிய வெற்றிகளுக்கு நாடே ஆர்ப்பரிக்கவேண்டுமா?
இவ்வளவு பாராட்டுகளுக்கு உரியதா ஹிமா தாஸின் 5 தங்கங்கள்?: உண்மை நிலவரம் என்ன?

இந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியத் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், 20 நாள்கள் இடைவெளியில் 5 தங்கங்களை வென்றுள்ளார். 

ஜூலை 2, முதல் தங்கம் - 200 மீ., 23.65 விநாடிகள் (போலந்து)
ஜூலை 7, 2-வது தங்கம் - 200 மீ., 23.97 விநாடிகள் (போலந்து)
ஜூலை 13, 3-வது தங்கம் - 200 மீ., 23.43 விநாடிகள் (செக் குடியரசு)
ஜூலை 17, 4-வது தங்கம் - 200 மீ., 23.25 விநாடிகள் (செக் குடியரசு)
ஜூலை 20, 5-வது தங்கம் - 400 மீ., 52.09 விநாடிகள் ( செக் குடியரசு)

அவருடைய சாதனைகளை அலசுவதற்கு முன்பு இதைப் பார்த்துவிடலாம். அஸ்ஸாமில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமா தாஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஹெச்.ஆர் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது மாநிலத்துக்கு உதவும் விதமாக தன்னுடைய சம்பளத்தில் பாதியை அரசின் வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதாக அறிவித்தார். 

நன்று. 

5 தங்கங்களை வென்ற ஹிமா தாஸுக்கு முதலில் பாராட்டுகள். ஆனால் இந்த 5 தங்கங்கள் சாதனை குறித்து மகிழும் இவ்வேளையில் உண்மை நிலவரத்தையும் அறிவது அவசியம். அவருடைய தங்க வேட்டை உண்மையிலேயே கொண்டாடக் கூடியதா? பிரதமர், ஜனாதிபதி முதல் இந்தியப் பிரபலங்கள் அனைவரும் சரசரவென வாழ்த்துகள் தெரிவிக்கும் அளவுக்கு அந்தஸ்து கொண்டதா அவர் பங்கேற்ற போட்டிகள்?

மேலும், ஹிமா தாஸ் 5-வது தங்கம் வென்றதன் விடியோ என்கிற தலைப்பில் ஒரு விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவியது. ஆனால் அந்த விடியோ ஒரு வருடம் பழையது. கடந்த வருடம் u-20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமா தாஸ் தங்கம் வென்றதன் விடியோதான் அது. தவறான ஒரு விடியோவைப் பரவவிட்டுதான் ஹிமா தாஸின் வெற்றியைக் கொண்டாட வேண்டுமா? 

கடந்த சனிக்கிழமை தனது சமீபத்திய 5-வது தங்கப் பதக்கத்தை வென்று திடீரென அனைத்து இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஹிமா தாஸ். ஏதோ அவர் உலக சாம்பியன் ஆனது போல, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது போல சமூகவலைத்தளங்கள் முழுக்க இவருக்கான பாராட்டுப் பதிவுகள்தான். அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள், முன்னணி மற்றும் மூத்தப் பத்திரிகையாளர்கள் என ஹிமா தாஸைப் பாராட்டாத இந்தியப் பிரபலமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். 

இந்த வெற்றிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமும் கவனமும் தான் பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. இவ்வளவு பாராட்டுகளுக்கும் உரியதா ஹிமா தாஸ் பங்கேற்ற போட்டிகள்? இந்த வெற்றிகளால் ஒலிம்பிக்ஸ் தங்கத்தின் அருகில் நெருங்கிவிட்டாரா ஹிமா தாஸ் ?

உங்களுக்கு ஒன்று தெரியுமா, செக் குடியரசில் அவர் கலந்துகொண்ட 400 மீ ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் போட்டியிட்ட அனைத்து வீராங்கனைகளும் இந்தியர்களே. 52.09 விநாடிகளில் அவர் தூரத்தைக் கடந்தார். இதர இந்திய வீராங்கனைகளால் அத்தூரத்தைக் கடக்கக் குறைந்தபட்சம் 54 விநாடிகள் தேவைப்பட்டன. இப்போது அந்தப் போட்டியின் தரம் குறித்து உங்களுக்குப் புரிந்திருக்குமே!

அதேபோல போலந்திலும் செக் குடியரசிலும் தலா இரு 200 மீ. ஓட்டப் பந்தயங்களில் அவர் கலந்துகொண்டார். 19 வயது ஹிமா தாஸ் அந்த நான்குப் போட்டிகளிலும் 200 மீ. தூரத்தைக் கடக்க 23.65, 23.97, 23.43, 23.25 விநாடிகளை எடுத்துக்கொண்டார். இதில் சிறந்த நேரமான 23.25 நொடிகள், இந்த வருடத்தில் நடைபெற்ற உலகளவிலான 200 மீ. ஓட்டப்பந்தயங்களில் 128-வது இடத்தையே பிடித்துள்ளது! ஆமா டாப் 100 பட்டியலில் கூட ஹிமா தாஸ் இடம்பெறவில்லை! ஹிமா தாஸின் நேரத்தை விடவும் 127 தடவை குறைந்த நேரங்களில் அத்தூரத்தை வீராங்கனைகள் பலர் கடந்துள்ளார்கள். எனில், உலகளவில் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடிக்க ஹிமா தாஸ் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

பிறகு எப்படி ஹிமா தாஸ் 5 தங்கங்களை வென்றார் என்றால் அவர் கலந்துகொண்ட போட்டிகளில் அவருக்குப் போட்டி கொடுக்க சரியான வீராங்கனைகள் இல்லை என்றுதான் அர்த்தம். அந்தளவுக்குச் சாதாரண போட்டிகள் அவை. மேலும் எந்தவொரு சிறந்த வீராங்கனையும் இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் 5 போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹிமா தாஸ், பயிற்சிக்காக அப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். அவர் மீது தவறில்லை. நாம் தான் அவருடைய வெற்றிகளை அளவுக்கதிகமாக எடை போட்டுவிட்டோம். 

முதல் இரு தங்கங்களையும் வென்ற போட்டிகளில் போலந்து மற்றும் தாய்லாந்திலிருந்து கிளப் அளவிலான வீராங்கனைகளே கலந்துகொண்டார்கள். அனைவருமே ஹிமா தாஸின் சிறந்த நேரத்தை விடவும் அதிக நேரம் எடுத்து ஓடுபவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் போட்டியிட்டு ஹிமா தாஸ் வெல்லவில்லை என்றால் தானே ஆச்சர்யப்பட வேண்டும்! 

சர்வதேசத் தடகள சம்மேளனம், சர்வதேச வீராங்கனைகளின் தரம், நேரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற போட்டிகளுக்கு ரேட்டிங் அளிப்பது வழக்கம். ஹிமா தாஸ் கலந்துகொண்ட 5 போட்டிகளில் இரு போட்டிகள் எஃப் என்கிற கடைசி ரேட்டிங்கைப் பிடித்தவை. மற்ற மூன்றும் ஈ ரேட்டிங்குகளைக் கொண்டவை. அதாவது மோசமான ரேட்டிங்கை விடவும் ஒரு படி மேல். எனவே, உலகத் தரமான போட்டிகள் என்கிற அந்தஸ்து இப்போட்டிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த வீரர்கள் கலந்துகொண்ட போட்டிகளில் ஹிமா தாஸ் கலந்துகொள்ளவில்லை என்பது இதன்மூலமாகவே நன்கு நிரூபணமாகிறது. 

ஹிமா தாஸின் தற்போதைய குறிக்கோள் - செப்டம்பரில் தோஹாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெறுவதுதான். இன்னமும் அவர் அப்போட்டிக்கான 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயங்களுக்கான தகுதி அளவை அடையவில்லை. அந்தப் போட்டியில் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் 51.80 விநாடிகளில் அத்தூரத்தைக் கடந்திருக்கவேண்டும். 200 மீ-க்கு 23.02. செக் குடியரசில் ஹிமா தாஸ் 52.09 விநாடிகளில் 400 மீட்டரையும் 23.25 விநாடிகளில் 200 மீட்டரையும் கடந்தார். அடுத்ததாக லக்னோவில் ஆகஸ்ட் மாதத்தில் சீனியர் தடகள மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். அதில் 51.80 விநாடிக்குள் 400 மீ. தூரத்தையும் 23.02 விநாடிகளில் 200 மீ. தூரத்தையும் அவர் கடந்துவிட்டால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுவிடுவார்.

இதுதவிர அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளவேண்டுமென்றால் 200 மீ. தூரத்தை 22.80 விநாடிகளில் தாஸ் கடந்தாகவேண்டும். அப்போதுதான் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் அவரால் பங்கேற்கவே முடியும். ஆனால் 200 மீ. போட்டியில் ஹிமா தாஸின் சிறந்த நேரம் - 23.10 விநாடிகள். தேசிய சாதனை நேரம் - 22.82 விநாடிகள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தன்னுடைய சிறந்த நேரத்தைத் தாண்டி, தேசிய சாதனையையும் புரிந்தால் மட்டுமே ஹிமா தாஸால் டோக்கியோ பக்கம் கால் எடுத்து வைக்கமுடியும். அமெரிக்கா, ஜமைக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வீராங்கனைகள் கொடுக்கும் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இதுதான் ஹிமா தாஸின் இன்றைய நிலைமை. உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கே அவர் இன்னும் தகுதியடையவில்லை. அதற்கான குறைந்தபட்ச நேரத்தை இன்னும் கடக்கவில்லை. இந்நிலையில் அவருடைய சிறிய வெற்றிகளுக்கு நாடே ஆர்ப்பரிக்கவேண்டுமா?

ஹிமா தாஸின் இந்த வெற்றிகளை நாம் பாராட்ட வேண்டும் தான். ஆனால் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றால் கிடைக்கவேண்டிய பாராட்டுகளும் ஊக்கமும் சிறிய அளவிலான போட்டிகளை வெல்வதற்கே கிடைத்துவிட்டால் அது அவருக்குக் கூடுதல் அழுத்தத்தையே கொடுக்கும். இந்த அளவுக்கதிகமான பாராட்டுகளால், அவர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுவிடுவார் என சராசரி ரசிகர் கனவு காண ஆரம்பித்துவிடுவார். அது எந்தளவுக்குச் சிரமானது என்பது இக்கட்டுரையைப் படித்த உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். அதற்காக அவர் இன்னும் பல படிகள் மேலேற வேண்டியுள்ளது. ரசிகர்களின் அந்த விருப்பம் நிறைவேறாமல், அவர் தோல்வியடைய நேரிட்டால் ஹிமா தாஸ் மீதான விமரிசனங்கள் அதிகமாகும் தானே! இதனால் அவருடைய திறமையும் முழுமையாக வெளிப்படாமல் போகும் தானே! இப்படியொரு நிலைமையை அவருக்கு நாம் ஏன் உருவாக்கவேண்டும்? 

ஹிமா தாஸ் எந்த அழுத்தமும் இல்லாமல் எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் கலந்துகொண்டு வெல்லட்டும். ஆனால் நம்முடைய ஆச்சர்யத்தையும் பாராட்டுகளையும் அவருடைய பெரிய வெற்றிகளுக்குச் சமர்ப்பிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com