தலைவன் தோனி: சீனியர்கள் இல்லாமலே உலகக்கோப்பையை வென்ற இளம் படை!

2007-இல் முதன்முதலாக டி20 உலகக்கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகப்படுத்தியது.
தலைவன் தோனி: சீனியர்கள் இல்லாமலே உலகக்கோப்பையை வென்ற இளம் படை!


2007-இல் முதன்முதலாக டி20 உலகக்கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுக உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 

இந்திய அணியின் மூத்த வீரர்களான ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கான ஆட்டம் என்று கருதி இந்தத் தொடரில் இருந்து விலகினர். இந்திய அணியின் தேர்வுக் குழுவும் அவர்களது கருத்துக்கு மதிப்பளித்து அவர்களை உத்தேச அணியில் சேர்க்கவில்லை. அதேசமயம், டி20 கிரிக்கெட்டுக்கு சிறந்த உடற்தகுதியையே பிசிசிஐ பிரதானமாகக் கருத்தில் கொண்டது.

இதனால், 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இளம் வீரர்கள் நிறைய பேர் இடம்பிடித்திருந்தனர். அதில், ஒரு சில பெயர்கள் யார் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மிகவும் புதிதாக இருந்தது. இதன்பிறகு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி மகேந்திர சிங் தோனி தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

சச்சின், டிராவிட், கங்குலி போன்ற மூத்த வீரர்கள் இல்லாததால் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார். யுவராஜ் சிங் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தத் தொடரின் அறிவிப்போடு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெறாத விரேந்திர சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. 

தோனி தலைமையிலான இளம் படை தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றது. 

மழையால் கைவிடப்பட்ட முதல் ஆட்டம்:

ஸ்காட்லாந்துடனான முதல் முதல் ஆட்டம், மழையால் டாஸ் கூட போடாத நிலையில் கைவிடப்பட்டது. 

பௌல் அவுட் முறையில் வெற்றி:

இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 141 ரன்கள் எடுத்தது. இதை டிஃபெண்ட் செய்த இந்திய அணி பாகிஸ்தானை 141 ரன்களுக்கு கட்டுப்படுத்தி ஆட்டத்தை 'டை' செய்தது. இதன்பிறகு, இந்திய அணி பௌல் அவுட் முறையில் பெற்ற கொண்டாட்டமான அந்த வெற்றியை எடுத்துக் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. 

முதல் தோல்வி:

முதலிரண்டு ஆட்டங்களில் சரியான ஒரு வெற்றியைப் பெற முடியாமல் இருந்த இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று சேஸிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 191 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. எனினும், கம்பீர் மற்றும் சேவாக் மட்டுமே அதிரடி காட்ட, இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தோனி, இந்திய அணியின் பலம் பந்துவீச்சுதான் என்பதை உணர்ந்துகொண்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: யுவராஜின் 6 சிக்ஸர் 

டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் மற்றும் விரேந்திர சேவாக் 100 ரன்களைக் கடந்து அதிரடியான தொடக்கம் அமைத்தனர். இந்த அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொண்ட யுவராஜ் வந்த வேகத்தில் அதிரடியைத் தொடங்கினார். இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பிளின்டாஃப் யுவராஜை வம்புக்கு இழுக்க, யுவராஜ் சிங் அதிரடியின் உச்சத்துக்கு சென்றார். பிராட் ஓவரில் 6 சிக்ஸர் அடித்ததும், ரவி சாஸ்திரியின் வர்ணணையும் இன்றும் அனைவரது நினைவில் இருக்கும். இதனால், இந்திய அணி இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவை மிரட்டிய ஆர்.பி. சிங்:

இதிலும், டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இந்த முறை தொடக்கம் திணறியது. எனினும், பின்வரிசையில் தோனியும், ரோஹித் சர்மாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு 150 ரன்களைக் கடக்கச் செய்தனர். பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் ஆர்டரை தகர்த்த ஆர்பி சிங் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால், இந்திய அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

அரையிறுதியும், ஆஸ்திரேலியாவும்:

இதிலும், டாஸ் வென்ற தோனி மீண்டும் பேட்டிங்கையே தேர்வு செய்தார். கம்பீர் மற்றும் சேவாக் அதிரடியாக ரன் குவிக்கத் திணறி 41 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் களமிறங்கிய யுவராஜ் சிங், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்த யுவராஜ் சிங் ஆட்டத்தின் போக்கையே முற்றுலும் மாற்றியமைத்தார். யுவராஜ் சிங்கின் மறக்க முடியாத இன்னிங்ஸில் நிச்சயமாக இதுவும் ஒன்றாக இருக்கும். உத்தப்பாவும், தோனியும் யுவராஜ் அதிரடிக்கு கைகொடுக்க இந்திய அணி 188 ரன்கள் குவித்தது.

கில்கிறிஸ்டையும், ஹேடனையும் கதறவிட்ட ஸ்ரீசாந்த்:

இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கில்கிறிஸ்டும், ஹேடனும் அதிரடி தொடக்கம் தந்தனர். எனினும், இந்த அதிரடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ஸ்ரீசாந்த் இன்-ஸிவ்ஙிகில் கில்கிறிஸ்ட் போல்டானார். அடுத்து களமிறங்கிய பிராட் ஹாட்ஜும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பிறகு, மேத்யூ ஹேடன் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இணை இந்திய அணிக்கு பதற்றத்தை அளிக்கும் வகையில் அட்டகாசமாக விளையாடியது. 

இந்த நிலையில் அரைசதம் அடித்து விளையாடி வந்த ஹேடனை ஸ்ரீசாந்த் போல்டாக்கினார். இந்த விக்கெட் வீழ்த்திய பிறகு ஸ்ரீசாந்த் வெளிப்படுத்திய கொண்டாட்டம் நிச்சயம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாற சைமண்ட்ஸ் மற்றும் கிளார்க்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி கடைசி 5 ஓவரில் வெற்றியை மீண்டும் தன் பக்கம் திருப்பியது. 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. 

முதல் அரையிறுதியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏற்கெனவே முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்தது. 

செப்டம்பர் 24: அந்த நாள்.. இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த மறக்க முடியாத நாள்.. 

உலகக்கோப்பை இறுதி ஆட்டம் என்ற பதற்றம் ஒரு பக்கம்.. அதுவும் பாகிஸ்தானுடன் என்பது மற்றொரு பதற்றம்.. இந்த பதற்றங்களுக்கு நடுவே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரேந்திர சேவாக்குக்கு காயம்.. கடைசி வரை காயம் குணமடையாததால், இறுதி ஆட்டத்தில் சேவாக் களமிறங்கவில்லை. இதனால், இர்பான் பதானின் சகோதரர் யூசுப் பதான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 

இந்த தொடரின் அனுபவங்கள் மூலமும், பந்துவீச்சாளர்கள் மீது கொண்ட நம்பிக்கையினாலும் டாஸ் வென்ற தோனி எந்தவித குழப்பமுமின்றி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய யூசுப் பதான் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய உத்தப்பாவும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, கம்பீருடன் யுவராஜ் இணைந்தார். யுவராஜ் துரிதமாக ரன் குவிக்கத் திணற, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை கம்பீர் எடுத்துக்கொண்டார். இதனால், இந்திய அணி அடுத்த 8 ஓவருக்கு விக்கெட்டை இழக்காமல் இருந்தது. இந்த நிலையில் அதிரடிக்கு மாற முயன்ற யுவராஜ் சிங் 19 பந்துகளில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தோனியும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி மீண்டும் தடுமாற்றத்தைக் கண்டது. எனினும், கம்பீர் மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்தார். அவரும் 75 ரன்கள் எடுத்த நிலையில் 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

இருந்தபோதிலும், ரோஹித் சர்மா கடைசி 2 ஓவரில் அதிரடி காட்டி 27 ரன்கள் எடுக்க உதவினார். இதனால், இந்திய அணி 150 ரன்களைக் கடந்து உளவியல் ரீதியாக நேர்மறையாக உணர்ந்தது. 

153 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆர்பி சிங் மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஹபீஸையும் (1), கம்ரான் அக்மலையும் (0) ஆட்டமிழக்கச் செய்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் 200 ஸ்டிரைக் ரேட்டுக்கு மேல் ரன் குவித்து இந்திய அணிக்கு நெருக்கடியளித்து வந்தார். அவர், 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது உத்தப்பாவின் சூப்பர் த்ரோவால் ரன் அவுட் ஆனார்.  

இதன்பிறகு, மீண்டும் விக்கெட்டுகள் வரிசையாக சரிய ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. அப்ரிதியும் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இந்திய அணிக்கு நம்பிக்கை அதிகரித்தது. 

அதேசமயம், மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானுக்கு நம்பிக்கையளித்து வந்தார். ஹர்பஜன் சிங் ஓவரில் அவர் அடித்த 3 சிக்ஸர்கள், அடுத்ததாக ஸ்ரீசாந்த் ஓவரில் தன்வீர் அடித்த 2 சிக்ஸர்கள் ஆட்டத்தை மீண்டும் விறுவிறுப்பாக்கியது. 

இந்நிலையில், பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. முன்னதாக, ஹர்பஜன் சிங் சொதப்பியதால் கடைசி ஓவர் பொறுப்பை ஜோகிந்தர் சர்மாவிடம் ஒப்படைத்தார் தோனி. பதற்றத்தில் முதல் பந்தையே வைடாக வீசினார் ஜோகிந்தர் சர்மா. அடுத்த பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆனால், மீண்டும் பதற்றத்தில் 3-வது பந்தை ஃபுல் டாஸாக வீச மிஸ்பா சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதனால், பாகிஸ்தானின் வெற்றி ஒரே ஒரு சிக்ஸர் தூரமாக குறைந்தது. அதுவும் 4 பந்துகள் மீதமுள்ளது.  

எனினும், தோனி பதற்றம் கொள்ளாமல் ஜோகிந்தர் சர்மாவிடம் பேசினார். அடுத்த பந்தை ஜோகிந்தர் சர்மா வீச, மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் ஆட, ஸ்ரீசாந்த் திடீரென்று கேமிரா ஃப்ரேமில் தோன்றி அந்த பந்தை கேட்ச் பிடித்தார்.

அவ்வளவுதான், ஒருவழியாக வரலாறு படைத்துவிட்டது இளம் இந்தியா. இந்த வெற்றிக்கு நிச்சயம் மிகப் பெரிய கொண்டாட்டம் தேவை என்று தோனி பேசினார்.

இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டில் ஒரு மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்தது. அதேசமயம், இந்திய அணியில் மிகப் பெரிய ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது. தோனியை ஒரு சிறந்த தலைவன் என்பதை இந்த வெற்றி உலகுக்கு மட்டுமின்றி பிசிசிஐ-க்கும் கோடிட்டு காட்டியது. 

நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு தோல்வியில் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்த தோனி, அதன்பிறகு விளையாடிய அனைத்துப் போட்டிகளிளும் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்து வெற்றி கண்டார். புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் அணியாக தென்படும். தொடக்கத்தில் கம்பீர், சேவாக் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக உத்தப்பாவும் நிறைய ஆட்டங்களில் நம்பிக்கையளித்துள்ளார். 

இந்த மூவர் சொதப்பியபோது யுவராஜ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரும் சொதப்பினால் பின்வரிசையில் தோனியும், ரோஹித்தும் இந்திய அணிக்கு மிக முக்கியப் பங்கை அளித்துள்ளனர். இப்படி பார்க்கும்போது இந்திய அணியின் பேட்டிங் வலுவானதாகத்தான் தென்படும். ஆனால், பந்துவீச்சே இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. இந்திய அணியின் கேப்டன் தோனியும், வெற்றிக்குப் பிறகு பந்துவீச்சே பக்கபலமாக இருந்தது என்றுதான் குறிப்பிட்டார்.

மூத்த வீரர்கள் ஒதுங்கிய நேரத்தில், இளம் பட்டாளம் மீது பிசிசிஐ வைத்த நம்பிக்கைக்கு தோனி தலைமையிலான இந்திய அணி தக்க பதிலைத் தந்தது. பிசிசிஐயும் இந்த வெற்றிக்குப் பரிசாக இந்திய அணிக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com