36 ஆல் அவுட் - மெல்போர்னில் 8 விக்கெட் வெற்றி: 10 நாள்களுக்குள் விஸ்வரூபம் கொண்ட இந்திய அணி!

10 நாள்களுக்குள் இப்படியொரு மாற்றம் ஏற்படும் நாம் நினைக்கவில்லை. ஆனால்...
அஸ்வின்
அஸ்வின்


டிசம்பர் 19 அன்று 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து, அடிலெய்ட் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வி கண்டது இந்திய அணி.

டிசம்பர் 29 அன்று மெல்போர்ன் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து இன்னொரு புதிய வரலாறைப் படைத்துள்ளது.

இந்த விஸ்வரூபத்தை யாராவது எதிர்பார்த்திருக்க முடியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-ம் நாளான இன்று இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை 2-வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் சுருட்டியது. இதனால் 70 ரன்கள் இலக்கை எளிதாகக் கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் இந்திய அணி பெற்ற மகத்தான வெற்றியாக இது மதிப்பிடப்படுகிறது.

எதனால் இந்த வெற்றி பெரிய அளவில் பாராட்டப்படுகிறது? வரலாற்றில் இடம் பிடித்துள்ளது?

10 நாள்களுக்கு முன்பு தான் தனது குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரை எடுத்து அவமானப்பட்டது இந்திய அணி. அதுவும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற பிறகு மோசமான பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை இழந்தது. இனி மீண்டெழ முடியாது என நம்பிக்கை இழந்தார்கள் இந்திய ரசிகர்கள்.

முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்கா சர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் விராட் கோலி. இதனால் டெஸ்ட் தொடரின் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் ரஹானே கேப்டனாகச் செயல்பட வேண்டிய நிலைமை. கோலி செல்வதால் இரு பின்னடைவுகள். மகத்தான கேப்டனின் துணை இல்லாதது, கோலி போன்ற வலுவான பேட்ஸ்மேன் அணியை விட்டு விலகுவதால் உண்டாகும் இழப்புகள். இக்காரணத்தால் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலியா வெல்லும் என்று சொல்லாத முன்னாள் வீரர்களே கிடையாது. 

சதமடித்த ரஹானே
சதமடித்த ரஹானே

கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தவர்கள் ஷமியும் இஷாந்த் சர்மாவும். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகினார் இஷாந்த் சர்மா. ஷமிக்கு முதல் டெஸ்டில் காயம் ஏற்பட்டது. அந்தப் பக்கம் ஆஸ்திரேலிய அணி ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் என முழு பலத்துடன் இருக்கும்போது இந்தப் பக்கம் இந்திய அணியில் பிரதான இரு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. இதுபோதாதென்று உமேஷ் யாதவால் 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் முழுதாகப் பந்துவீச முடியவில்லை. காயத்தால் விலகினார். இதனால் நான்கு பந்துவீச்சாளர்களை வைத்து மட்டும் 2-வது இன்னிங்ஸில் விளையாடியது இந்திய அணி. ஆனாலும் ஆஸ்திரேலிய அணியால் டெஸ்ட் தொடரில் இதுவரை அதிகபட்சமாக 200 ரன்கள் தான் எடுக்க முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் பந்துவீச்சு இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்! 

முதல் டெஸ்டில் மோசமாகத் தோற்றபோதும் ஷுப்மன் கில், சிராஜ் என இரு புதியவர்களைக் களத்தில் இறக்கியது இந்திய அணி. இருவருமே அற்புதமாக விளையாடி வெற்றிக்கு உதவியுள்ளார்கள்.

மெல்போர்ன் டெஸ்டில் முதல் நாளன்று டாஸில் தோற்றது. இதனால் கடைசியாக பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை. ஆனால் ஓர் அணிக்கு என்னென்ன தடைகள் நேருமோ அத்தனையும் மெல்போர்ன் டெஸ்டில் எதிர்கொண்ட இந்திய அணி, எதையும் பொருட்படுத்தாமல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதைவிட இன்னொரு மகத்தான டெஸ்ட் வெற்றியை இந்திய கிரிக்கெட்டால் சந்திக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ரஹானேவும் இந்திய அணியும் தொடர்ந்து சாதிப்பார்கள். 10 நாள்களுக்குள் இப்படியொரு மாற்றம் ஏற்படும் நாம் நினைக்கவில்லை. ஆனால் இந்திய அணிக்கு இந்த நம்பிக்கையும் லட்சியமும் இருந்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com