20 ஆண்டுகளின் சிறந்த விளையாட்டுத் தருணம்: லாரியஸ் விருது வென்ற சச்சின் (விடியோ)

20 ஆண்டுகளின் சிறந்த விளையாட்டுத் தருணத்துக்கான லாரியஸ் விருது வழங்கி சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டார்.
20 ஆண்டுகளின் சிறந்த விளையாட்டுத் தருணம்: லாரியஸ் விருது வென்ற சச்சின் (விடியோ)

20 ஆண்டுகளின் சிறந்த விளையாட்டுத் தருணத்துக்கான லாரியஸ் விருது வழங்கி சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டார்.

2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்த தருணம், விளையாட்டு உலகில் 20 ஆண்டுகளின் சிறந்த தருணமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிக வாக்குகள் பெற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற கோலாகல விழாவில், டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர் அறிவிக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், லாரியஸ் விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார். விருது பெற்ற பின்னர் சச்சின் பேசியதாவது,

உலகக் கோப்பையை வென்றது மறக்க முடியாத தருணமாகும். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற ஒரு தருணத்தை எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் கொண்டாடியது. விளையாட்டு நமது வாழ்வில் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

1983ஆம் ஆண்டில் 10 வயது சிறுவனாக இருந்த போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போது அந்த உணர்வு என்னவென்று எனக்குத் தெரியாது. அனைவரைப் போன்று நானும் கொண்டாடினேன். ஆனால், ஏதோ ஒரு சிறப்பான தருணமாக இது இருக்க வேண்டும் என்பதை மட்டும் உணர்ந்தேன். அதை நானும் ஒருநாள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுதான் எனது பயணத்தின் தொடக்கம்.

எனது லட்சியக் கனவின் 22 ஆண்டு தேடலுக்குப் பின்னர் அது நிறைவேறியது. நாட்டின் சார்பாக உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்தேன்.

தற்போது இந்த அரங்கில் பல விளையாட்டு வீரர்கள் மத்தியில் நானும் அமர்ந்துள்ளேன். இதில் பலருக்கு முழு வசதிகளும் கிடைத்திருக்காது. இருப்பினும் தங்களிடம் இருந்த திறமையை சரியாகப் பயன்படுத்தி வெற்றியடைந்துள்ளனர். இதன்மூலம் பல இளைஞர்கள் விளையாட்டின் மீது கொண்ட கனவை துரத்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

அனைவரையும் ஒன்றிணைக்க விளையாட்டால் மட்டுமே முடியும் என்பதை நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளார். இந்த விருது எனக்கானது மட்டுமல்லா, நமது அனைவருடையதும் தான் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com