தொடங்கியது டெஸ்ட் தொடர்: சாதித்துக் காட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

கரோனாவிலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக விடுபட்டுவிட்ட நியூஸிலாந்தில் கூட சர்வதேச கிரிக்கெட்டைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை...
தொடங்கியது டெஸ்ட் தொடர்: சாதித்துக் காட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

116 நாள்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டைத் தனது மண்ணில் மீண்டும் இடம்பெறச் செய்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

கரோனாவிலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக விடுபட்டுவிட்ட நியூஸிலாந்தில் கூட சர்வதேச கிரிக்கெட்டைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. மற்ற நாடுகளிலும் அதே நிலைமைதான். கரோனா ஓயட்டும், நிலைமை சரியாகட்டும் என அனைவரும் காத்துக் கிடக்கிறார்கள். இந்திய வீரர்கள் உள்பட அனைவரும் இன்ஸ்டகிராமில் பேட்டி கொடுத்துக்கொண்டும் கூடவே வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சிகள் எடுத்துக்கொண்டும் உள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு பருவத்துக்கான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்பட்டாலும் எதுவும் நிச்சயமாக நடக்கும் என்பது இந்த நிமிடம் வரை உறுதியில்லை. (ஏற்கெனவே திட்டமிட்ட ஒருநாள் தொடர் ஒன்றை ரத்துவிட்டார்கள்)

ஆனால்...

கரோனாவை மடியில் வைத்துக்கொண்டே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே மே.இ. வீரர்கள் இங்கிலாந்துக்கு வந்துவிட்டார்கள். டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா டெஸ்டுகளை அவ்வப்போது நடத்தி இந்த நாள் வரை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார்கள். அடுத்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் 3 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ள பாகிஸ்தானும் இங்கிலாந்துக்குத் தனது படையுடன் வந்துவிட்டது. அதற்கடுத்து ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு வந்து வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடவுள்ளது. கரோனாவுடன் விளையாடப் பழகவேண்டும் என்பதை இதர கிரிக்கெட் நாடுகளுக்குத் தனது நடவடிக்கைகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இதே நல்லெண்ணத்தில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தொடங்கிய அட்ரியா டூர் காட்சி டென்னிஸ் போட்டி கடைசியில் சிதறுண்டு போனது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தாலும் கடைசியில் எல்லாமே தவறாகப் போயின. இப்போட்டியில் பங்கேற்ற ஜோகோவிச் உள்ளிட்ட பல டென்னிஸ் வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் போட்டியை முழுவதுமாக முடிக்க முடியாமல் போனது. இப்போது போகிறவர்கள் வருகிறவர்கள் வாயில் எல்லாம் ஜோகோவிச் விழுந்துகொண்டிருக்கிறார். விளைவு - இதர டென்னிஸ் போட்டிகளையும் சிறிது காலத்துக்குத் தொடங்க முடியாது.

இதுபோன்ற ஆபத்துகளை அறிந்தே தான் கிரிக்கெட் தொடர்களை அடுத்தடுத்து நடத்தத் தயாராக இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அதன் வேகமும் பொறுப்புணர்வும் சரியான திட்டமிடல்களும் உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்துகின்றன. எங்குமே தவறு நேராதபடி கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசி வரை பிசிறு இல்லாமல் தொடரை நடத்திமுடித்துவிட்டால் நிச்சயம் அது சாதனைதான். இதனால் கிரிக்கெட் உலகம் தற்போது விழித்துக்கொண்டுள்ளது. கண் முன்னே தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் வருமானம் பார்க்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதனால் ஆகஸ்டுக்குப் பிறகு இதர நாடுகளும் முக்கியமாக இந்தியா சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களைத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.

நேரலையில் விளையாட்டுப் போட்டிகளைக் காணும் சுகத்துக்கு ஈடு இணை கிடையாது. அந்த அனுபவம் இனி கிடைக்காமல் போகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com