பிராட் எனும் பீனிக்ஸ்!

ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களைக் கொடுத்த பிறகும், பீனிக்ஸ் பறவையாய் எழுந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பிராட்.
பிராட் எனும் பீனிக்ஸ்!


ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்து, அதிலிருந்து மீண்டு வருவது என்பது ஒரு பந்துவீச்சாளருக்கு உளவியல் ரீதியாக அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல. அதுவும் சாதாரண போட்டியாக இருந்தாலும் சரி. கொடுத்தது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில். அவரது அணி அந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதற்குத் திருப்புமுனையாக அமைந்தது அந்த ஒற்றை ஓவர்.

அன்றைய இரவு பலரும் நினைத்திருப்பார்கள், அந்த பந்துவீச்சாளரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று. ஏன் முன்னாள் கிரிக்கெட் வீரராக, போட்டி நடுவராக அந்த பந்துவீச்சாளரின் தந்தையே அப்படி நினைக்கும்போது, மற்றவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஆம் அந்த பந்துவீச்சாளரின் தந்தை அப்படி நினைத்தது உண்மைதான்.

இப்படி பலரும் அவரது எதிர்காலம் குறித்து கணித்து வந்த நிலையில், ஊர் வாய்க்குப் பூட்டு போடும் வகையில், தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானித்தார் அந்த பந்துவீச்சாளர்.

இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வந்த அவர், இன்றைக்கு சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற அரிதான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

அவர் பெயர் ஸ்டுவர்ட் பிராட். மகனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று எண்ணிய அந்த தந்தையின் பெயர் கிறிஸ் பிராட்.

ஸ்டுவர்ட் பிராட் பெயரை இங்கிலாந்து ரசிகர்கள் எப்படி மறக்கமாட்டார்களோ அப்படித்தான் இந்திய ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். காரணம், 2007 உலகக் கோப்பையில், யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்தது பிராட் ஓவரில்தான். 

இது பற்றியும் கிறிஸ் பிராட் பற்றியும் யுவராஜ் சிங் அண்மையில் தெரிவித்தது:

"6 சிக்ஸர் அடித்ததற்கு அடுத்த தினம் கிறிஸ் பிராட் என்னிடம் வந்து, 'எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய். தற்போது எனது மகனுக்கு கையெழுத்து போட்டுத் தர வேண்டும்' என்றார். 

அதனால், நான் என்னுடைய இந்தியக் கிரிக்கெட் ஜெர்சியை கொடுத்தேன். அதில், 'நான் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் கொடுத்திருக்கிறேன், அதனால், அந்த உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடியும். இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்' என்ற வாசகத்தையும் எழுதி கொடுத்தேன்." என்றார் யுவராஜ் சிங்.

இதைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர், "தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் பிராடும் ஒருவர். இந்தியாவில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களைக் கொடுத்துவிட்டு, இப்படி ஒரு அட்டகாசமான கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியுமா என்று எனக்குத் தோன்றவில்லை." என்றார் அவர்.

யுவராஜ் கூறியதுபோல் இதே பிராட்தான், இன்று 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பதைத் தாண்டியும், பிராட் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமும், ஒரு சமீபத்திய உதாரணமும்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள், 10 விக்கெட்டுகள் வீழ்த்துவதன் மூலம் அந்த பந்துவீச்சாளரின் திறனை அறியலாம். புள்ளி விவரங்களைப் பார்த்தாலே இது தெரிந்துவிடும். ஆனால், புள்ளி விவரங்களில் வெளிப்படாதது 'ஸ்பெல்'. டெஸ்ட் கிரிக்கெட்டில் சில முக்கியத் தருணங்களில் ஒரு பந்துவீச்சாளரின் ஸ்பெல் ஆட்டத்தின் முடிவையே மாற்றக்கூடும். ஒரே ஸ்பெல்லில் 2 அல்லது 3 முக்கிய விக்கெட்டுகள் விழும். ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், அவர் அந்த ஸ்பெல்லில் வீழ்த்தும் அந்த 2 அல்லது 3 விக்கெட்டுகள்தான் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கக் கூடியதாக அமையும். 

பெரும்பாலான ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் இதை செய்திருந்தாலும், பிராட் இதில் சிறந்தவர். தன்னுடைய பல ஸ்பெல்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2015-இல் டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட்.

ஆண்டர்சன் இல்லாததால், இங்கிலாந்து பந்துவீச்சுக்குத் தலைமை ஏற்று அந்த டெஸ்ட் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார் பிராட். முதல் ஓவரிலேயே ரோஜர்ஸ், ஸ்மித் என 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு பிரமாதமான தொடக்கத்தைத் தந்தார். தன்னுடைய 2-வது ஓவரில் மார்ஷ் விக்கெட், 3-வது ஓவரில் வோஜஸ் விக்கெட், 4-வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் விக்கெட், 7-வது ஓவரில் ஸ்டார்க், ஜான்சன் விக்கெட்டுகள், 9-வது ஓவரில் லயான் விக்கெட்டை வீழ்த்தினார். இவருடைய இந்த அட்டகாசமான பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம், 9.3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராட். விளைவு இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஸ்பெல்லில் பிராட்டின் இந்த ஸ்பெல்லுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு.

சமீபத்திய உதாரணம்:

தற்போது 500-வது விக்கெட்டை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இதைத்தான் கடைப்பிடித்தார். முதல் டெஸ்ட்டில் பிராட்டுக்கு விளையாடும் லெவனில் இடம் வழங்கப்படவில்லை. 2012-க்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் அவர் விளையாடாத முதல் டெஸ்ட் இதுதான். இங்கிலாந்தின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருந்தும், அவருக்கு இடம் அளிக்காதது அவரை கோபத்தில் ஆழ்த்தியது. தனது கோபத்தை அவர் வெளிப்படையாகவே ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்பிறகு, 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் அவர் சேர்க்கப்பட்டார். இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அவர் வீழ்த்திய முதல் விக்கெட் 68 ரன்கள் எடுத்து விளையாடி வந்த மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் புரூக்ஸ். அதே ஸ்பெல்லில் அடுத்தடுத்து பிளாக்வுட் மற்றும் டௌரிச்சையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார் பிராட். இதன் காரணமாக 242 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து விளையாடி வந்த மேற்கிந்தியத் தீவுகள் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்துக்கு இது நல்ல முன்னிலை பெற்றுத் தந்தது.

முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படாத கோபத்தை இதில் வெளிக்காட்டி, 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்தார் பிராட்.

3-வது ஆட்டத்திலோ, இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 6 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிர்காலத்திலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சேர்க்கப்படாததால், இங்கிலாந்து கிரிக்கெட்டில் தன்னுடைய எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தேர்வுக் குழுவிடம் அவர் பேசியது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இதுதான் பிராட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com