ஆடுகளத்தில் 21 வருடங்கள்: சர்வதேச அரங்கில் சாதித்து வரும் தமிழ்ப்பெண் மிதாலி ராஜ்!

தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை...
ஆடுகளத்தில் 21 வருடங்கள்: சர்வதேச அரங்கில் சாதித்து வரும் தமிழ்ப்பெண் மிதாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 21-வது வருடத்தை முடித்துள்ளார். இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும்.

1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 21 வருடங்கள் ஓடிவிட்டன. 

ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிவர்கள்:

22 வருடங்கள் 91 நாள்கள் - சச்சின் டெண்டுல்கர்
21 வருடங்கள் 184 நாள்கள் - ஜெயசூர்யா
21 வருடங்கள்* - மிதாலி ராஜ்

இன்னும் ஒரு வருடம் 91 நாள்கள் நிலைத்து நின்று ஆடினால் சச்சின் சாதனையைத் தாண்டிவிடுவார் 37 வயது மிதாலி ராஜ்.

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். 

ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 209 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

மிதாலி ராஜின் தலைமையில் இந்திய அணி 132 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 82-ல் வெற்றி பெற்றுள்ளது. இவர் தலைமையில் 6 டெஸ்டுகளில் விளையாடி 3- ல் வெற்றி பெற்றுள்ளது.

2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.

திரைப்படமாகும் மிதாலி வாழ்க்கை

மிதாலி ராஜ் கடந்த டிசம்பர் 3 அன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

மிதாலி ராஜ் வேடத்தில் தாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குகிறார். சபாஷ் மித்து என இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வியாகாம்19 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. 

200 ஒருநாள் ஆட்டங்கள்: மிதாலி ராஜின் உலக சாதனை 

பிப்ரவரி 1, 2019. 

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இந்த நாளில் படைத்தார். 

ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 

மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

2018 டி20 உலகக் கோப்பை சர்ச்சை

கடந்த சில வருடங்களாக மிதாலி ராஜ் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறார். அதிலும் 2018 டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜை முன்வைத்து ஒரு பெரிய சர்ச்சையே வெடித்தது. அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்

2018 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாருடன் மிதாலி ராஜுக்கு மோதல் ஏற்பட்டது. 

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. 

குரூப் பி பிரிவில் இந்திய மகளிர் அணி பலமான நியூஸியை 34 ரன்கள் வித்தியாசத்திலும், 3 முறை சாம்பியன் ஆஸி.யை 48 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றது. அதே நேரத்தில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 112 ரன்களே எடுத்தது. பிறகு அந்த இலக்கை 17.1 ஓவர்களில் அடைந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

யாரும் எதிர்பாராதவிதத்தில் அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்நிலையில் முக்கியமான இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜுக்குப் பதிலாக அனுஜா பாட்டீலை மீண்டும் தேர்வு செய்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். இந்த முடிவைப் பலரும் விமரிசனம் செய்தார்கள். 

அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தன்னுடைய இந்த முடிவு குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது: நாங்கள் எடுத்த எல்லா முடிவுகளும் அணிக்காக எடுத்த முடிவுகளே. சில நேரங்களில் அவை சாதகமாக அமையும். சில நேரங்களில் அமையாது. எனவே அதுகுறித்து வருத்தம் இல்லை. நாங்கள் கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மிதாலி ராஜைத் தேர்வு செய்வதை விடவும் வெற்றியில் பங்கேற்ற அணியைத் தக்கவைக்க முடிவு செய்தோம் என்று கூறினார். 

அரையிறுதியில் விளையாடிய இந்திய அணியில் மிதாலி ராஜ் உள்ளிட்ட மூத்த வீராங்கனைகள் சிலர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது மிதாலி குற்றம் சாட்டினார். போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும், மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாகப் பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது. பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ.வி. ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சர்ச்சைக்குப் பிறகு 4 டி20 ஆட்டங்களில் விளையாடினார் மிதாலி ராஜ். எனினும் அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பது பெரிய சிக்கலாக இருந்தது. புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிற கருத்துகள் ஏற்பட்டன. பிறகு திடீரென டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மிதாலி ராஜ்.

மெளனம் கலைத்தார் மிதாலி ராஜ்! 


நவம்பர் 27, 2018.

டி20 உலகக் கோப்பை சர்ச்சை குறித்து மிதாலி ராஜால் நீண்ட நாள் மெளனம் சாதிக்க முடியவில்லை. திடீரென தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்கு மிதாலி ராஜ் எழுதிய கடிதத்தில் அவர் கூறியதாவது:

என்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக நம்பிக்கையற்றவளாக, மனம் நிலைகுலைந்து போனவளாக ஆனேன். இத்தனை வருடக் காலம் நான் பங்காற்றிய விஷயங்கள் அதிகாரத்தில் உள்ள சிலருக்கு மட்டும் ஒன்றுமில்லாததாக உள்ளதா என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவர்கள் என்னை அழித்து, என் நம்பிக்கையைத் தூளாக்க நினைத்தார்கள். 

டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் மீது எனக்கு எவ்வித தவறான கருத்தும் இல்லை. என்னை அணியிலிருந்து நீக்கக் கோரிய பயிற்சியாளரின் முடிவுக்கு அவர் ஆதரவளித்ததுதான் ஆச்சர்யமாகவும் காயப்படுத்தும்விதமாகவும் இருந்தது. 

என் அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தர விரும்பினேன். ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டதை எண்ணி வருந்துகிறேன். 

நிர்வாகக் குழுவில் உள்ள முன்னாள் இந்திய கேப்டன் டயனா எடுல்ஜியை நான் மிகவும் மதித்தேன். ஆனால் அவருடைய அதிகாரத்தை எனக்கு எதிராகப் பயன்படுத்துவார் என நான் எண்ணவேயில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் எனக்கு நேர்ந்த அனைத்தையும் அவருக்குத் தெரியப்படுத்தினேன். 

என்னை அணியிலிருந்து நீக்கியதற்கு அவர் ஆதரவளித்தது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என்னிடம் பேசியதன் மூலம் என்ன நடந்ததென்று அவருக்குத் தெரியும். 

பயிற்சியாளர் ரமேஷ் பவார், என்னை அலட்சியப்படுத்தத் தொடங்கினார். அருகில் நான் அமர்ந்திருந்தால் அங்கிருந்து கிளம்புவது, மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அருகிலிருந்து கவனிப்பவர், நான் பயிற்சியில் இருக்கும்போது அங்கிருந்து வெளியேறிவிடுவார். நான் அவரிடம் சென்று பேசச் சென்றால் உடனே செல்போனைப் பார்க்கத் தொடங்குவார், அல்லது தொடர்ந்து நடக்க ஆரம்பிப்பார். 

இவையெல்லாம் என்னை மிகவும் சங்கடப்படுத்தின. என்னை அவமானப்படுத்துவது எல்லோருக்கும் நன்குத் தெரிந்தது. எனினும் நான் கோபப்படாமல் இருந்தேன் என்று கூறினார். 

என் நாட்டுப்பற்றைச் சந்தேகிப்பதா என மிதாலி ராஜ் வருத்தம்!


நவம்பர் 29, 2018

உலகக் கோப்பையில் தான் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சையில் மிகவும் மன வருத்தம் அடைந்ததாக மிதாலி ராஜ் மீண்டும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். 

பிசிசிஐ-யின் ராகுல் ஜோரி, சபா கரீம் ஆகியோருக்கு மிதாலி ராஜ் மின்னஞ்சலாக அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:

என்னையும், எனது நம்பிக்கையையும் அழிக்க, அதிகாரத்தில் உள்ள சிலர் நினைக்கின்றனர். நாட்டுக்காக நான் செய்த பங்களிப்புகளை துச்சமாக எண்ணுகின்றனர்.  உண்மை நிலவரத்தை அறிந்தும், பிளேயிங் லெவனில் நான் சேர்க்கப்படாத முடிவை டயானா எடுல்ஜி ஆதரித்தது என்னை மிகவும் பாதித்தது. அவர் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருந்ததுடன், சிஓஏ உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதை அளித்து வந்தேன்.
ஆனால், அவர் தனது அதிகாரத்தை எனக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை எழுதுவதன் மூலம் நான் இன்னும் நெருக்கடிகளுக்கு ஆளாவேன் என்பதை அறிவேன். ஏனெனில், டயானா சிஓஏ உறுப்பினர். நான் சாதாரண வீராங்கனை. பிளேயிங் லெவனில் என்னை சேர்க்காத முடிவுக்கான டயானாவின் ஆதரவு, அவர் ஒருதலைப்பட்சமாக நடப்பதையும், எனக்கு எதிராக ஏற்கெனவே முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதையும் நிரூபிக்கிறது. அதேபோல், அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரும் என்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்றது முதலே அவரது நடவடிக்கைகளில் அது தெளிவாகத் தெரிந்தது. மற்றவர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது அதை கவனித்த பவார், நான் வலைப் பயிற்சியில் ஈடுபடுகையில் கவனிக்காமல் வேறு பக்கம் நடந்து சென்றார்.

அவரிடம் பேச முயற்சிக்கும்போது செல்லிடப்பேசியை பார்த்துக் கொண்டோ, வேறு திசையில் நடந்துகொண்டோ என்னை புறக்கணித்தார். இந்த விவகாரங்களுக்கு தீர்வு காணாவிட்டால் அது அணியின் ஒழுங்கை பாதிக்கும் என்பதால் அணி நிர்வாகத்திடம் கூறினேன். அதன் பிறகே அவரது நடவடிக்கை இன்னும் மோசமானது. நான் அணியில் இருப்பதாகவே அவர் கருதவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக என்னை அழைத்த பவார், பிளேயிங் லெவனில் இல்லாததால் ஊடகங்கள் இருக்கும்போது மைதானத்துக்கு வரவேண்டாம் என்று என்னிடம் கூறினார். முக்கியமான ஆட்டத்தின்போது நான் அணியில் இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் மீது எனக்கு வருத்தங்கள் இல்லை என்று அந்த கடிதத்தில் மிதாலி ராஜ் கூறினார். 

டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ், 2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர். 

இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார். 2021 ஒருநாள் கோப்பைப் போட்டிக்காகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இக்காரணத்துக்காக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீராங்கனை என்கிற பெருமை அவருக்கு உண்டு. 

32 டி20 ஆட்டங்களிலும் மூன்று டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய மிதாலி, மொத்தம் 2349 ரன்களை விளாசியுள்ளார். மேலும் இந்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் வசம் உள்ளது.

தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை

கடந்த வருடம் அக்டோபர் மாதம், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.

இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது: ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமரிசிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார். 

லட்சியம் 2021 ஒருநாள் உலகக் கோப்பை

இந்திய ஒருநாள் கேப்டனாக தற்போது உள்ள மிதாலி ராஜ், நியூசிலாந்தில் அடுத்த வருடம் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளார். இதுவே தன்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சாதித்து வா தமிழ்ப்பெண்ணே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com