ஓர் ஆட்டத்திலும் விளையாடாத இந்திய வீரர் யார்?: ஆச்சர்யப்படுத்தும் 1983 உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள்!

இறுதிச்சுற்றில் இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் ஸ்ரீகாந்த். 57 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்தார்...
ஓர் ஆட்டத்திலும் விளையாடாத இந்திய வீரர் யார்?: ஆச்சர்யப்படுத்தும் 1983 உலகக் கோப்பை புள்ளிவிவரங்கள்!

ஜூன் 25, 1983. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த நாள் இது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிச்சுற்றை எப்போது பார்த்தாலும் இந்திய ரசிகர்களுக்குச் சிலிர்ப்பூட்டும். அப்படியொரு மகத்தான தருணம்.

1983 உலகக் கோப்பைப் போட்டியின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது பல ஆச்சர்யங்கள் தென்படுகின்றன. அவற்றின் விவரங்கள்:

* இந்த உலகக் கோப்பையில் சதமடித்த ஒரே இந்திய வீரர் கபில் தேவ் மட்டுமே. ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார்.

* இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியுள்ளார்கள். ஒட்டுமொத்த போட்டியிலும் இந்திய வீரர்கள் 5 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்கள். யாஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில் தலா 2 அரை சதங்களும் அமர்நாத் ஒரு அரை சதமும் எடுத்துள்ளார்கள். அவ்வளவுதான். 

* பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளங்கள் என்பதால் பல பேட்ஸ்மேன்கள் தடுமாறியுள்ளார்கள். உலகக் கோப்பையில் 6 ஆட்டங்களில் ஆடிய கவாஸ்கர் மொத்தமே 59 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 25 ரன்கள். சராசரி - 9.83. போட்டியில் 8 ஆட்டங்களில் ஆடிய ஸ்ரீகாந்த், 156 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்கள்.

* இந்தப் போட்டியில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் - கபில் தேவ் தான். 8 ஆட்டங்களில் 303 ரன்கள். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அணியின் ஸ்கோரில் (266/8) 65.78% ரன்களை கபில் தேவ் மட்டுமே எடுத்திருந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அணியின் ஸ்கோரில் அதிகப் பங்களிப்பு செய்ததில் இதற்கு 2-வது இடம். 

ஓர் ஆட்டத்தில் கூட கபில் தேவ் மோசமாக விளையாடவில்லை. பந்துவீச்சில் 12 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி ரேட் - 2.91. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடமும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 8-ம் இடமும் பிடித்தார்.

பிசிசிஐயின் ட்வீட்
பிசிசிஐயின் ட்வீட்

இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது என்கிற ஒன்று வழங்கப்படவில்லை. ஒருவேளை அது இருந்திருந்தால் நிச்சயம் கபில் தேவுக்குத்தான் கிடைத்திருக்கும்.

* கபில் தேவுக்கு அடுத்ததாக அதிக ஸ்டிரைக் ரேட் கொண்டவர் சந்தீப் பாட்டில். 90.00. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 32 பந்துகளில் 51 ரன்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த பாட்டில், இறுதிச்சுற்று ஆட்டத்தில் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.  

* இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், மதன் லால். காலிறுதி என வர்ணிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4/20 எனச் சிறப்பாகப் பந்துவீசினார். இறுதிச்சுற்றில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

* போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர், இந்திய வீரரான ரோஜர் பின்னி. 8 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள். அவருடைய 18 விக்கெட்டுகளில் 14 விக்கெட்டுகள் - மேல் மற்றும் நடு வரிசை வீரர்கள் (1-6). விளையாடிய 8 ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டாவது எடுத்தார்.   

* அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றவர், மொஹிந்தர் அமர்நாத். 

பேட்ஸ்மேனாக 8 ஆட்டங்களில் ஒரு அரை சதம் மட்டும் எடுத்த அமர்நாத், பந்துவீச்சில் அசத்தினார். முக்கியமாக இறுதிச்சுற்றில் 26 ரன்கள் எடுத்த அமர்நாத், பந்துவீச்சில் 3/12 என எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அரையிறுதியில் 2/27 என பந்துவீச்சிலும் 46 ரன்களும் எடுத்து இந்திய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற உதவினார். 

* 8 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் குரூப் ஏ அணியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் முதல் இரு இடங்களைப் பிடித்தன. குரூப் பி அணியில் மே.இ. தீவுகளும் இந்தியாவும் முதல் இரு இடங்களைப் பிடித்தன. 6 ஆட்டங்களில் விளையாடிய மே.இ. தீவுகள் அணி, இந்தியாவிடம் மட்டும் தோற்றது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் இரு முறை மோதின. 

* இந்தப் போட்டியில் இந்தியா, மே.இ. தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. இங்கிலாந்தும் பாகிஸ்தானும் அரையிறுதியில் தோல்வியடைந்தன. இதர அணிகள் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே. 

* லீக் ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களில் வென்ற இந்திய அணி, அதற்கடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள் அணிகளுக்கு எதிராகத் தோற்று தடுமாறியது. இதன்பிறகு ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா அணிகளைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

* 60 ஓவர்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் நான்கு முறை 300 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 338/5 ரன்களும் இலங்கை எதிராக இங்கிலாந்து 333/9 ரன்களும் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 322/6 ரன்களும் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 320/9 ரன்களும் எடுத்தன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் - ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 266/8. 

* இந்தியா, மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளும் மொத்தமாக 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டும் தோல்வியடைந்தன. எனினும் இறுதிச்சுற்றில் இந்தியா வென்றதால் சாம்பியன் ஆனது. 

* போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி மே.இ. தீவுகள் அணியை வென்று அதிர்ச்சியளித்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. 120 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அசத்தினார் யாஷ்பால் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 40 பந்துகளில் 40 ரன்களும் அரையிறுதியில் 115 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து முக்கியப் பங்களித்தார். 

* இப்போட்டியில் கலந்துகொண்ட 14 இந்திய வீரர்களில் ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாதவர், தில்லியைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்துவீச்சாளர் சுனில் வல்சன். இங்கு மட்டுமல்ல, கடைசி வரை இந்திய அணிக்காக இவரால் ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாமல் போனது. (எனினும் 1983 உலகக் கோப்பையில் இந்திய அணியின் இரு பயிற்சி ஆட்டங்களிலும் சுனில் வல்சன் விளையாடினார்.)

* இறுதிச்சுற்றில் இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் ஸ்ரீகாந்த். 57 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணியில் ரிச்சர்ட்ஸ் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்து கபில் தேவின் மறக்க முடியாத கேட்சுக்குத் தன் விக்கெட்டை இழந்தார். 

* இறுதிச்சுற்றில் டிக்கி பேர்டும் பேரி மெயெரும் நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com