Enable Javscript for better performance
கோலி, அஸ்வின் அரை சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா (271/6)- Dinamani

சுடச்சுட

    

    கோலி, அஸ்வின் அரை சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா (271/6)

    By DIN  |   Published on : 28th November 2016 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt3

    இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.
    முன்னதாக ஒரு கட்டத்தில் 156 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. ஆனால் கோலி, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது. கோலி 62 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அஸ்வின் 57 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
    இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 12 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. முன்னதாக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 89 ரன்கள் சேர்க்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது.
    2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி மேலும் 3.5 ஓவர்கள் மட்டுமே ஆடிய நிலையில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    புஜாரா அரை சதம்: இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 12 ரன்களில் நடையைக் கட்ட, பார்த்திவ் படேலுடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. 8 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற பார்த்திவ் படேல் 85 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    இதையடுத்து கேப்டன் கோலி களம்புகுந்தார். கடந்த போட்டியில் 248 ரன்கள் குவித்து இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைப் பறித்த கோலியை வீழ்த்துவதற்கு அவர் களம் கண்டது முதலே இங்கிலாந்து பெüலர்கள் கடுமையாகப் போராடினர். ஆனால் மிகவும் பொறுமையாக ஆடிய கோலி, சரியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இங்கிலாந்து பெüலர்களை தண்டித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா, தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 100 பந்துகளில் அரை சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 11-ஆவது அரை சதமாகும்.
    தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணி 148 ரன்களை எட்டியபோது புஜாராவின் விக்கெட்டை இழந்தது. அவர் 104 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    கோலி 62: பின்னர் வந்தவர்களில் ரஹானே டக் அவுட்டாக, அறிமுக வீரரான கருண் நாயர் 4 ரன்களில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதனால் இந்தியா 45.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய அஸ்வின், வோக்ஸ் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விளாசி, ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். மறுமுனையில் மிக நிதானமாக ஆடிய கோலி 111 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இந்தியா 204 ரன்களை எட்டியபோது கோலி ஆட்டமிழந்தார். அவர் 127 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 48 ரன்கள் சேர்த்தது.
    அஸ்வின் அரை சதம்: இதையடுத்து அஸ்வினுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியாவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற இங்கிலாந்து அணியின் கனவு தகர்ந்தது. ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் ஆடிய ஜடேஜா, ரஷித் வீசிய 78-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி வேகமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார்.
    இதனிடையே ஆண்டர்சன் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 77 பந்துகளில் அரை சதம் கண்டார் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 9-ஆவது அரை சதம் இது. அதேநேரத்தில் இந்தத் தொடரில் 3-ஆவது முறையாக அரை சதம் விளாசியுள்ளார் அஸ்வின். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57, ஜடேஜா 59 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.


    சென்னை டெஸ்ட்: நாளை முதல் டிக்கெட் விற்பனை

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
    இந்தப் போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. ரூ.300, ரூ.500, ரூ.3000, ரூ.4000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. ஒருவருக்கு அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் அனுமதிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷர்ர்ந்ம்ஹ்ள்ட்ர்ஜ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    ஹார்திக் பாண்டியா விடுவிப்பு

    மொஹாலியில் பயிற்சியில் ஈடுபட்டபோது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியாவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் காயம் குறித்து மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசிக்கப்படும் என பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே தெரிவித்துள்ளார்.


    துளிகள்...


    2 இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இதுவரை 56 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு, 530 ரன்களையும் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 50 விக்கெட் மற்றும் 500 ரன்கள் குவித்த 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் இந்தியர் கபில்தேவ் ஆவார். அவர் இரு முறை (1979, 1983) மேற்கண்ட சாதனையை செய்துள்ளார். சர்வதேச அளவில் மேற்கண்ட சாதனை 10 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது.


    5 இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 5 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் அஸ்வின். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தவர்கள் வரிசையில் விராட் கோலியுடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார் அஸ்வின். முதலிடத்தில் புஜாரா உள்ளார். அவர் 7 முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.


    1990 கடந்த 26 ஆண்டுகளில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டான முதல் இந்தியர் கருண் நாயர் ஆவார். இதற்கு முன்னர் தற்போதைய பயிற்சியாளரான அனில் கும்ப்ளே 1990-இல் ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டபோது ரன் அவுட்டானார். ஒட்டுமொத்தத்தில் அறிமுக டெஸ்டில் ரன் அவுட்டான 12-ஆவது இந்தியர் கருண் நாயர் ஆவார்.


    4 இந்தத் தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இந்திய கேப்டன் கோலி, அவையனைத்திலும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். ஒரு தொடரின் முதல் 5 இன்னிங்ஸ்களிலும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விளாசிய 4-ஆவது இந்தியர் கோலி. இதற்கு முன்னர் ராகுல் திராவிட் (2005-06), நவ்ஜோத் சிங் சித்து ((1997-98), சுநீல் கவாஸ்கர் (1979) ஆகியோர் மேற்கண்ட சாதனையை செய்துள்ளனர்.


    ஸ்கோர் போர்டு

    இங்கிலாந்து-283 (பேர்ஸ்டோவ் 89, ஜோஸ் பட்லர் 43, முகமது சமி 3வி/63)

    இந்தியா

    முரளி விஜய் (சி) பேர்ஸ்டோவ் (பி) ஸ்டோக்ஸ் 12 (38)
    பார்த்திவ் படேல் எல்பிடபிள்யூ (பி) ரஷித் 42 (85)
    புஜாரா (சி) வோக்ஸ் (பி) ரஷித் 51 (104)
    விராட் கோலி (சி) பேர்ஸ்டோவ் (பி) ஸ்டோக்ஸ் 62 (127)
    ராஹனே எல்பிடபிள்யூ (பி) ரஷித் 0 (6)
    கருண் நாயர் ரன் அவுட் (பட்லர்) 4 (4)
    அஸ்வின் நாட் அவுட் 57 (82)
    ரவீந்திர ஜடேஜா நாட் அவுட் 31 (59)

    விக்கெட் வீழ்ச்சி: 1-39 (விஜய்), 2-73 (படேல்),
    3-148 (புஜாரா), 4-152 (ரஹானே), 5-156 (நாயர்), 6-204 (கோலி).

    பந்துவீச்சு: ஜேம்ஸ் ஆண்டர்சன் 16-3-36-0,
    கிறிஸ் வோக்ஸ் 15-5-47-0, மொயீன் அலி 9-1-19-0, ஆதில் ரஷித் 24-4-81-3, பென் ஸ்டோக்ஸ் 15-2-48-2, கேரத் பட்டி 5-0-29-0.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai