Enable Javscript for better performance
Jadeja and Jayant earn 134-run lead / ஜடேஜா, ஜெயந்த் யாதவ் அபாரம்!- Dinamani

சுடச்சுட

    

    ஜடேஜா, ஜெயந்த் யாதவ் அபாரம்! 417 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா!

    By DIN  |   Published on : 28th November 2016 02:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jadeja1

     

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஜடேஜா, ஜெயந்த் யாதவின் அபாரமான அரை சதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

    மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 89 ரன்கள் சேர்க்க, 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57, ஜடேஜா 59 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். 

    3-வது நாளான இன்று அஸ்வின் வழக்கம்போல சிறப்பாக ஆடினாலும் 72 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டுவருவதற்கு அஸ்வினின் ஆட்டம் மிகவும் கைகொடுத்தது. மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை இந்த டெஸ்டிலும் நிரூபித்து கிரிக்கெட் நிபுணர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் அஸ்வின். இதன்பிறகு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ஜெயந்த் யாதவ். இந்த ஜோடியும் நிலைத்து ஆடி இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்றியது. ஜடேஜா 104 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அஸ்வினுக்கு நிகரான ஜடேஜாவின் பங்களிப்பினால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

    3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்தது. 

    இதன்பிறகு வோக்ஸ் வீசிய 122-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து அசத்தினார் ஜடேஜா. இதனால் அவர் சதமெடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ரஷித் பந்துவீச்சில் 90 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார் இளம் வீரர் ஜெயந்த் யாதவ். 132 பந்துகளில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். 

    137-வது ஓவரில், இரண்டு கேட்சுகள் கொடுத்தும் கோட்டை விட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். ஆனால் அதே ஓவரின் கடைசிப் பந்தில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜெயந்த். பிறகு 12 ரன்களில் உமேஷின் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டோக்ஸ். இது அவருடைய 5-வது விக்கெட் ஆகும். 

    இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா, ஜெயந்த் யாதவின் அபாரமான அரை சதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai