Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: 2-ஆவது இன்னிங்ஸில் தமிழகம்-161/1- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 60 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
    பிலாஸ்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 42.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரங்கராஜன் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.
    ரயில்வே தரப்பில் பன்சால் 4 விக்கெட்டுகளையும், மஞ்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
    பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ரயில்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.
    2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி 64 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தார் 47 ரன்களும், அரிந்தாம் கோஷ் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்தனர்.
    தமிழகம் தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும், விக்னேஷ், ரங்கராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
    அபிநவ் முகுந்த் 98*: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    இதையடுத்து கேப்டன் அபிநவ் முகுந்துடன் இணைந்தார் கெளஷிக் காந்தி. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது.
    2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 60 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அபிநவ் முகுந்த் 98, காந்தி 41 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் தமிழக அணி 109 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai