Enable Javscript for better performance
ஷாங்காய் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், முர்ரே- Dinamani

சுடச்சுட

    
    joco

    அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஜோகோவிச்.


    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா, பிரான்ஸின் ஜில்ஸ் சைமன் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
    சீனாவின் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 3-6, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 110-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வேரேவை தோற்கடித்தார்.
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்வேரேவ் எளிதாகக் கைப்பற்ற, ஜோகோவிச்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் ஸ்வேரேவ் அபாரமாக ஆட, அந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் அபாரமாக செயல்பட்ட ஜோகோவிச், 7-6 (4) என்ற கணக்கில் 2-ஆவது செட்டை வென்றார். பின்னர் நடைபெற்ற 3-ஆவது செட்டில் அசத்தலாக ஆடிய ஜோகோவிச், அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
    ஜோகோவிச் தனது அரையிறுதியில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டாவை சந்திக்கிறார். பெளதிஸ்டா தனது காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை தோற்கடித்தார்.
    மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினைத் தோற்கடித்தார். முர்ரே தனது அரையிறுதியில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை சந்திக்கிறார். சைமன் தனது காலிறுதியில் 4-6, 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai