Enable Javscript for better performance
உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற "தங்கமகன்' மாரியப்பன்- Dinamani

சுடச்சுட

    

    உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற "தங்கமகன்' மாரியப்பன்

    By DIN  |   Published on : 11th September 2016 01:20 AM  |   அ+அ அ-   |    |  

    gold-winner

    இலக்கை தாண்டும் மாரியப்பன்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    தங்கவேல்-சரோஜா தம்பதியின் மகன் மாரியப்பன், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் வலது கால் பாதத்தை முழுமையாக இழந்து மாற்றுத் திறனாளியானார். தற்போது, சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் (பி.பி.ஏ) இறுதியாண்டு பயின்று வருகிறார்.
    பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்ற தகவல் கிடைத்ததும், அவருடைய சொந்த ஊரான பெரிய வடகம்பட்டி கிராமத்தில் உற்சாகம் கரை புரண்டோடியது.
    அந்த ஊர் மக்கள் மற்றும் மாரியப்பனின் நண்பர்கள் ஒன்று திரண்டு, மாரியப்பனின் குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி, முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்ததற்கு, மாரியப்பனின் தாய் சரோஜா மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


     

     

     

     

     

    லண்டனில் தவறியது; ரியோவில் கிடைத்தது

    கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள மாரியப்பன் தேர்வாகியிருந்தார். ஆனால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைக்க தாமதம் ஆனதால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
    அந்த பாராலிம்பிக் போட்டியில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டியவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அப்போதைய தகுதிச் சுற்றில் மாரியப்பன் 1.75 மீட்டர் உயரம் தாண்டியிருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், மாரியப்பனுக்கு இது 2-வது தங்கமாக இருந்திருக்கும். தந்தை இல்லை, காலில் ஏற்பட்ட விபத்து, இளமைப் பருவத்துக்குரிய எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாத வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் உழைத்த மாரியப்பன் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்ததுடன், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.
    தற்கொலை முடிவிலிருந்து தங்கத்துக்கு...
    மாரியப்பன் தாயார் சரோஜா (50) கூறுகையில், "எங்களுக்கு சுதா (26) என்ற மகளும், மாரியப்பன் (21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும்போது, பேருந்து மோதியதில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. உடனடியாக, அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, விளையாடுவதற்கு யாரும் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை மாரியப்பன் வருந்தினார். பின்னர், அவரின் விளையாட்டு ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர்கள், உயரம் தாண்டுதலில் அவரை ஊக்குவித்தனர்.
    மாரியப்பன் சிறுவனாக இருக்கும்போதே, அவருடைய தந்தை பிரிந்து சென்று விட்டார். குடும்ப வறுமையைத் தாங்க முடியாமல், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினோம். ஆனால், மாரியப்பன் தான் அதைத் தடுத்து, கண்டிப்பாக வாழ்க்கை சூழ்நிலை வறுமையில் இருந்து மாறும் என்று கூறி எங்களைத் தேற்றினார். பள்ளி விடுமுறை நாள்களில், கட்டுமான வேலைகளுக்குச் சென்று, அதில் கிடைத்த கூலித் தொகையில் தனக்கான செலவையும், குடும்பத்துக்கும் வழங்கினார்' என கண்ணீர் மல்கக் கூறினார்.

     

    பிரபலங்கள் வாழ்த்து

    பிரணாப் முகர்ஜி (குடியரசுத் தலைவர்): பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கு வாழ்த்துக்கள். இருவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
    நரேந்திர மோடி (பிரதமர்): இந்தியா மகிழ்ச்சியில் மிதக்கிறது. பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்கிற்கும் வாழ்த்துக்கள்.

    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): தங்கம் வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    விஜய் கோயல் (விளையாட்டுத்துறை அமைச்சர்): ரியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய சாதனை. நமது வீரர்களுக்காக பெருமை கொள்கிறேன்.

    சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்): இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. பதக்கம் வென்ற இரு வீரர்களின் செயல்பாடு, இனி வரும் தலைமுறைக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.


    விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை வீரர்): ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கிய அதே பரிசுத் தொகை மற்றும் கெளரவத்தை பாராலிம்பிக் வெற்றியாளர்களுக்கும் இந்தியா வழங்கும் என்று நம்புகிறேன்.


    அபிநவ் பிந்த்ரா (துப்பாக்கி சுடுதல் வீரர்): "தங்கப் பதக்கம் வென்றவர்களின் கூட்டணிக்கு மாரியப்பனை வரவேற்கிறேன். வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்கிற்கு உதவிய கோ ஸ்போர்ட்ஸ் வாய்ஸஸ்'க்கு வாழ்த்துக்கள்'.


    சாக்ஷி மாலிக் (மல்யுத்த வீராங்கனை): பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் வாழ்த்துக்கள். இந்திய விளையாட்டு வீரர்களிடம் ஊக்கத்திற்கு பஞ்சம் இல்லை.

    அமிதாப் பச்சன் (பாலிவுட் நடிகர்): பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம். ஆடவர் உயரம் தாண்டுதலில் வென்ற மாரியப்பன், வருண் சிங்கிற்கு வாழ்த்துக்கள். முன்னேறி வா இந்தியா.


    விரேன் ரஸ்கின்ஹா (முன்னாள் ஹாக்கி கேப்டன்): இதுபோன்ற ஊக்கமளிக்கும் நிகழ்வு, இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. மாரியப்பன், வருண் சிங்கிற்கு வாழ்த்துக்கள்.

    இவர்களோடு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்கள் பதிவு செய்துள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp