செயின்ட் லூசியாவில் புதன்கிழமை நடைபெறவிருந்த மேற்கிந்தியத் தீவுகள்-ஆப்கானிஸ்தான் இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது.
முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும், 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் வென்றிருந்த நிலையில் 3-ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்தத் தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கூறுகையில், "ஐபிஎல் தொடரை முடித்த கையோடு விளையாடிய இந்தத் தொடர் எனக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தந்துள்ளது. இதன்மூலம் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கிடைத்துள்ளது.
எங்களுக்கான அடுத்த சவால் அடுத்த மாதம் லார்ட்ஸில் காத்திருக்கிறது. இப்போது கிடைத்துள்ள அனுபவத்தின் மூலம் லார்ட்ஸில் சிறப்பாக ஆட முடியும் என நம்புகிறோம்' என்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்ததாக இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் வரும் 23-ஆம் தேதி டிரினிடாட் அன்ட் டொபாக்கோவில் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.