கோவையில் தேசிய கூடைப்பந்துப் போட்டி இன்று தொடக்கம்

கோவையில் ஆண்களுக்கான 52-ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, பெண்களுக்கான 16-ஆவது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய
Updated on
1 min read

கோவையில் ஆண்களுக்கான 52-ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, பெண்களுக்கான 16-ஆவது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மே 26) தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் சி.என்.அசோக், செயலர் சிரில் இருதயராஜ் ஆகியோர் கூறியதாவது:
இந்த ஆண்டு தேசிய அளவில் முன்னணியில் உள்ள சென்னை வருமான வரித் துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தில்லி இந்தியன் ஏர்ஃபோர்ஸ், இந்திய ரயில்வே, சி.ஆர்.பி.எஃப்., குஜராத் விளையாட்டு ஆணையம், இந்திய கடற்படை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணி ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில், செகந்திராபாத் - தெற்கு மத்திய ரயில்வே, சென்னை - தென்னக ரயில்வே, கொல்கத்தா - கிழக்கு ரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், கேரள மின் வாரியம், சத்தீஸ்கர் மாநில அணி, குவாஹாட்டி - வடக்கு எல்லை (ஃபிராண்டியர்) ரயில்வே அணி, கோவை மாவட்ட அணி ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்கின்றன.
ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்துடன் நாச்சிமுத்து கவுண்டர் சுழற் கோப்பையும், 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரத்துடன் என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்படும். அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடும் இரு அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
மகளிர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்துடன் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரத்துடன் சுழற்கோப்பையும், அரை இறுதியில் வாய்ப்பை இழக்கும் இரு அணிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகள் மே 29-ஆம் தேதி வரை சுழல் முறையில் நடைபெறும். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வு பெறும். போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் தினசரி மாலை 5 மணிக்கு நடைபெறும்.
இறுதி ஆட்டம், பரிசளிப்பு விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். மேலும், விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத் தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், கோவை சக்தி குழுமத் தலைவர் எம்.மாணிக்கம், மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவர் ஜி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்று அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com