

வியத்நாம் ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி, லக்ஷயா சென் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
வியத்நாமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன தைபேவின் வான் இ டாங்கை எதிர்கொண்டார் ருத்விகா ஷிவானி. இருவருக்கும் இடையேயான விறு விறுப்பான ஆட்டத்தில் ருத்விகா, 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ருத்விகா, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் தினார் தியா அயுஸ்டினை எதிர்கொள்கிறார்.
முன்னதாக, இந்திய வீராங்கனை பர்தேசி ஷ்ரேயான்ஷி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-21, 21-16, 21-23 என்ற செட் கணக்கில் தினார் தியா அயுஸ்டினிடம் வீழ்ந்தார். மற்றொரு இந்தியரான விருஷாலி கும்மாடி 8-21, 21-12, 10-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சென் சு யுவிடம் வீழ்ந்தார்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வியத்நாமின் ட்ரோங் தான் லாங்கை வீழ்த்தினார். லக்ஷயா தனது காலிறுதியில் ஜப்பானின் கோடாய் நராவ்காவை சந்திக்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன்-ராமசந்திரன் ஜோடி, 14-21, 21-12, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லோ ஹாங் யீ-மஸ்தான் ஜின் வா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.