யுவராஜ் அதிரடி; ஹைதராபாத் அபார வெற்றி: ஆட்டநாயகன் யுவராஜ் சிங்

10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
யுவராஜ் அதிரடி; ஹைதராபாத் அபார வெற்றி: ஆட்டநாயகன் யுவராஜ் சிங்

ஆட்டநாயகன் யுவராஜ் சிங்62 (27)
10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இடம்பெற்றார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் ஆப்கானிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் ஷேன் வாட்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஹைதராபாதின் இன்னிங்ஸை கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் தொடங்கினர். டைமல் மில்ஸ் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய வார்னர், அனிகெட் செளத்ரி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த மோசஸ் ஹென்ரிக்ஸ் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் ஷிகர் தவன் அதிரடியில் இறங்கினார். வாட்சன் வீசிய 6-ஆவது ஓவரில் தவன் 4 பவுண்டரிகளை விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தன. மறுமுனையில் ஹென்ரிக்ஸும் அதிரடியில் இறங்க, 10 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்தது ஹைதராபாத். ஸ்டூவர்ட் பின்னி வீசிய 11-ஆவது ஓவரில் தவன் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் அதிரடி: இதையடுத்து வந்த யுவராஜ் சிங், அனிகெட் செளத்ரி ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட, ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து 3-ஆவது விக்கெட்டாக வெளியேற, தீபக் ஹூடா களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 23 பந்துகளில் அரை சதமடித்தார். இது ஐபிஎல் போட்டியில் யுவராஜின் அதிவேக அரை சதமாகும். டைமல் மில்ஸ் வீசிய 19-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் பவுண்டரியையும், 3-ஆவது பந்தில் சிக்ஸரையும் விரட்டிய யுவராஜ் சிங், 4-ஆவது பந்தில் போல்டு ஆனார். அவர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து களம்புகுந்த வாட்சன், கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களை விளாச, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது ஹைதராபாத். தீபக் ஹூடா 12 பந்துகளில் 16, வாட்சன் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூர் தோல்வி: 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணியில் மன்தீப் சிங்-கிறிஸ் கெயில் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது. மன்தீப் சிங் 16 பந்துகளில் 24, கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேதார் ஜாதவ் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, அப்போதே பெங்களூரின் வெற்றி பறிபோனது. இதன்பிறகு டிராவிஸ் ஹெட் 30, ஷேன் வாட்சன் 22 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு சுருண்டது பெங்களூர்.
ஹைதராபாத் தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இன்றைய ஆட்டம்
புணே-மும்பை
இடம்: புணே, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com