Enable Javscript for better performance
இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு புரோ கபடி- Dinamani

சுடச்சுட

  

  இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு புரோ கபடி

  By ந.காந்திமதிநாதன்  |   Published on : 02nd August 2017 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dharamaraj

   

  இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி இன்று உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

  உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர், தொலைக்காட்சியில் ஒருமுறை கபடி போட்டியை கண்டபோது அவரை அது கவர்ந்தது. பின்னாளில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை சந்தித்த ஃபெடரர், கபடியை பற்றியும், அதன் பாரம்பரியம் குறித்தும் அவரிடம் கேட்டறிந்துள்ளார்.

  ஒரு காலத்தில் கிராமப்புற விளையாட்டாக கருதப்பட்ட கபடி, இன்று உலகம் முழுதும் பிரபலமடைந்துள்ளது. புரோ கபடி போட்டியானது, இந்த விளையாட்டை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

  இந்தியாவில் 5-ஆவது சீசனாக நடைபெறும் புரோ கபடி போட்டியில், நம் மண்ணின் மைந்தர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை அனைவரும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  அதில் குறிப்பிடத்தக்கவர், தமிழக வீரர் தர்மராஜ் சேரலாதன். இவருக்கு 42 வயது எனக் கூறினால் நம்பும்படியாக இல்லை. கட்டுமஸ்தான உடலுடன் இளம் வீரர்போல் இருக்கிறார்.

  தஞ்சை மாவட்டம் திருச்சினம்பூண்டியைச் சேர்ந்த தர்மராஜ், இந்திய கபடி அணிக்காகவும் ஆடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டி, 2010-இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் கோப்பையை வென்ற இந்திய அணியில் தர்மராஜும் இடம் பெற்றிருந்தார்.

  தொழில்முறை போட்டியான புரோ கபடியில் முந்தைய சீசன்களில் பெங்களூர், பாட்னா அணிகளில் விளையாடிய தர்மராஜ், இந்த சீசனில் புணேரி பால்டான் அணிக்காக களமிறங்கியிருக்கிறார்.

  ஹைதராபாதில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் பலமான யு மும்பாவை வீழ்த்தியது புணேரி பால்டான். அந்த வெற்றிக் களிப்பில் இருந்த தர்மராஜுடனான சந்திப்பில் இருந்து...

  உங்கள் கபடி வாழ்க்கையை பற்றி...


  பள்ளிக் காலத்தில் இருந்தே கபடி மீது ஆர்வம் உண்டு. விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் விளையாடுவேன். அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் கபடி போட்டிகளை வேடிக்கை பார்க்கச் செல்வது வழக்கம். பின்பு நானும் கபடி போட்டிகளில் தீவிரமாக பங்கேற்க தொடங்கினேன்.


  அதில் நான் சிறப்பாக விளையாடவே, அனைவரும் என்னை ஊக்கப்படுத்தினர். பின்னர் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் தமிழக அணிக்கு தேர்வானேன். தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றபோது, ரயில்வே அணிக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

  அது எனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ரயில்வே அணியில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக, 6 மாதம் திருநெல்வேலி சன் பேப்பர் மில் அணியில் விளையாடிக் கொண்டிருந்தேன். ரயில்வே அணியில் இணைந்ததற்கு பிறகும், அவ்வப்போது சன் பேப்பர் மில் அணிக்காக விளையாடியிருக்கிறேன். அந்த அணி இருந்தபோது ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

  குடும்பத்தாரின் ஆதரவு எவ்வாறு இருந்தது?


  குடும்ப உறுப்பினர்கள், எங்கள் கிராம மக்கள், நட்பு வட்டம் என அனைவருமே எனக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்தனர். எங்கு போட்டி நடந்தாலும், அங்கு சென்று விளையாட எனது குடும்பத்தினர் தடையாக இருந்ததில்லை. நான் கபடி வீரராக மாறுவதற்கு எனது மாமா மிகப்பெரிய உந்துதலாக இருந்தார்.

  ஒரு மூத்த மற்றும் அனுபவமிக்க வீரர் என்ற முறையில், இளம் வீரர்களுக்கான உங்களது அறிவுரைகள் என்ன?


  கபடிப் போட்டிக்கு கட்டுமஸ்தான உடல் மிக மிக முக்கியம். எனவே, அதை தொடர்ந்து பராமரிப்பது அவசியம். மண்ணில் விளையாடும்போது காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், 'மேட்'டில் விளையாடுகையில் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, தொடர் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

  இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறீர்கள். இதில் உங்களின் இலக்கு?


  பலமான யு மும்பா அணியை 33-21 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து வரும் ஆட்டங்களிலும் வெற்றிகளை பெறுவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். நிச்சயம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

  ஒவ்வொரு சீசன்களுக்கும் வேறுபடும் அணிகள்; வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சக வீரர்கள்; அந்த அனுபவம் எவ்வாறு உள்ளது?
  அந்த அனுபவத்தில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. எப்போதும்போல இயல்புடனேயே விளையாடுகிறோம். வீரர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் செயல்படுகிறோம்.
  அணி பயிற்சியாளர் மற்றும் மேலாளர்களுடனான உறவும் நன்றாகவே இருக்கிறது.

  உங்கள் சகோதரர் தர்மராஜ் கோபு தபாங் டெல்லி அணியில் விளையாடியிருக்கிறார். அவர் சார்ந்த அணியுடனான போட்டிகளின்போது எப்படி உணர்ந்தீர்கள்?


  அண்ணன்-தம்பி என்ற உறவு முறையெல்லாம் வீட்டில் மட்டுமே (சிரிக்கிறார்). போட்டிக் களம் என்று வரும்போது அவரும் எனக்கு சக போட்டியாளர் தான். நான் ரயில்வே அணியில் ஆடும்போது, அவர் ஐசிஎஃப் அணிக்கு ஆடியிருக்கிறார். அப்போது முதல் புரோ கபடி வரையிலும் பல போட்டிகளில் அவ்வாறே மோதியிருக்கிறோம்.

  புரோ கபடி பற்றி...


  இதர கபடி போட்டிகளுடன் ஒப்பிடுகையில், புரோ கபடி விதிமுறைகள் சற்று வித்தியாசமானவை. புரோ கபடியில் விளையாடுவது கடினமான ஒன்று.
  மேலும், புரோ கபடியானது இளம் வீரர்களுக்கு நல்ல எதிர்காலத்தையும், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது. நான் 20 ஆண்டுகளாக கபடி போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எனக்கும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு புரோ கபடியின் மூலமாகவே கிடைத்தது.

  புரோ கபடியின் புதிய விதிமுறைகளை எப்படி பார்க்கிறீர்கள்?


  இந்த விதிமுறை மாற்றங்களால் எங்களுக்கு பாதிப்புகள் இல்லை. இது விளையாட்டின் போக்கை மாற்றியுள்ளது. ஆட்டத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது. இது வரவேற்கக் கூடிய ஒன்று. உண்மையில் புதிய விதிமுறைகளால் கபடி போட்டி மேம்படுத்தப்பட்டுள்ளது.

  இதர விளையாட்டுகளில் ஆர்வம்?


  ரேக்ளா பந்தயம் (மாட்டுவண்டிப் பந்தயம்) பிடித்தமான ஒன்று. கிராமத்துப் பகுதிகளில் நடைபெறும் அந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி, தோல்விகளை சந்தித்த அனுபவம் உண்டு. அது தவிர, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றதும் உண்டு.

  சர்வதேச போட்டி- புரோ கபடி போட்டி இரண்டிலும் விளையாடுவதில் உள்ள வித்தியாசம், சவால் என்ன?


  என்னைப் போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்கு இதில் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. சர்வதேச போட்டிகளில் விளையாடுவதைப் போலவே புரோ கபடியிலும் விளையாடுகிறோம். ஆனால், இளம் வீரர்களுக்கு இந்தக் களம் புதிது. ரசிகர்களின் ஆரவாரம், மின்னும் விளக்குகள், தொலைக்காட்சி நேரலை போன்ற காரணங்களால் இளம் வீரர்கள் ஆரம்பத்தில் சற்று தடுமாறுகிறார்கள், அவ்வளவு தான்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai