புரோ கபடி: வெற்றியுடன் தொடங்கியது குஜராத்
By DIN | Published on : 02nd August 2017 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ரைடு செல்லும் டெல்லி கேப்டன் மிராஜ் ஷேக்.
புரோ கபடி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7-ஆவது ஆட்டத்தில் தபாங் டெல்லியை எதிர்கொண்ட புதிய அணியான குஜராத் ஃபார்ச்சூன்ஸ் 26-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் குஜராத் வீரர் சச்சின் 3 ரைடு புள்ளிகள் பெற்றார். அந்த அணியின் தடுப்பாட்டக்காரர் ஃபாùஸல் அட்ராசலி 4 புள்ளிகள் எடுத்தார். டெல்லி தரப்பில் ரைடர் ஸ்ரீராம் 5 புள்ளிகளும், தடுப்பாட்டக்காரர் சுனில் 2 புள்ளிகளும் பெற்றனர். ஆல் அவுட் புள்ளிகள் குஜராத்துக்கு 4-ம், டெல்லிக்கு 2-ம் கிடைத்தன.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அசத்தத் தொடங்கிய குஜராத், ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் டேக்கிள் புள்ளி மூலம் தனது கணக்கை தொடங்கியது.
ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் டெல்லி தனது முதல் புள்ளியை பெற்றது. எனினும், 8 நிமிடங்களுக்குள்ளாக குஜராத் அணி 4-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 19-ஆவது நிமிடத்தில் 'டெக்னிகல்' புள்ளி குஜராத்துக்கு கிடைக்க, முதல் பாதி நிறைவில் 15-5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது அந்த அணி.
2-ஆவது பாதியில் குஜராத்தின் ராகேஷ் நர்வால் ஒரு ரைடு பாய்ண்ட் அடித்தார். 28 நிமிடங்களில் 20-8 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் முன்னிலையிலேயே இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் 6 புள்ளிகளும், டெல்லி 12 புள்ளிகளும் பெற்றன. இறுதியில் குஜராத் 26-20 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகனாக குஜராத் வீரர் ஃபாùஸல் அட்ராசலி தேர்வாகினார்.
உத்தரப் பிரதேச அணி வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 31-18 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இது, சொந்த மண்ணில் தெலுகு அணி சந்தித்த 3-ஆவது தொடர் தோல்வியாகும்.