சுடச்சுட

    

    புரோ கபடி எங்களுக்கு அடையாளம் தந்திருக்கிறது

    By ந.காந்திமதிநாதன்  |   Published on : 03rd August 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    suresh

    'கேப்டன் கூல்' என்றாலே நம் அனைவருடைய நினைவுக்கும் வருவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனிதான்.
    ஆனால் கபடியிலும் ஒரு கூல் கேப்டன் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்திய கபடி அணியின் கேப்டன் அனுப் குமார்தான்.தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் அனுப் குமார்
    தலைமையில் விளையாடி வரும் யு-மும்பா அணியில் தமிழர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுரேஷ் குமார் (37). எதிணி வீரரை மடக்கிப் பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் குமார், ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடி யு-மும்பா அணி சரிவிலிருந்து மீள உதவினார்.அந்த ஆட்டத்தின் 2-ஆவது பாதியில் யு-மும்பா அணி 12-19 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. அப்போது சுரேஷ் குமார் தனது அற்புதமான 'சூப்பர் டேக்கிள்' மூலமாக 2 புள்ளிகளைப் பெற, அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு சரிவிலிருந்து
    மீண்ட யு-மும்பா அணி, இறுதியில் 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் 'த்ரில்' வெற்றி கண்டது. அடுத்ததாக, நாகபுரியில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தபாங் டெல்லிக்கு எதிரான ஆட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருந்த சுரேஷ் குமாரிடம் பேசியதிலிருந்து...

    கபடியில் கால் பதித்ததன் பின்னணி...
    தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தான் எனது சொந்த ஊர். எனக்கு 3 சகோதரர்கள், 2 சகோதரிகள். அவர்களில் நான் மட்டுமே கபடி வீரர். 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் கபடி விளையாட
    ஆரம்பித்தேன். பின்னர் வெளியூர்களில் நடைபெற்ற கபடிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பள்ளி மற்றும் கல்லூரி அணிகளில் இடம்பிடித்தேன். இப்போது புரோ கபடி வரை வந்திருக்கிறேன்.

    உங்களது கல்வி மற்றும் வேலை பற்றி...
    நான் பி.ஏ. பொருளாதாரம் படித்திருக்கிறேன். தற்போது சென்னை ஐசிஎஃப்-இல் கிரேடு -1 டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறேன். கல்லூரியில் படித்தபோதே, 1999-இல் ஐசிஎஃப் அணியில் இணைந்துவிட்டேன். அப்போது முதல் அந்த அணிக்காக கபடி விளையாடி வருகிறேன். இதுதவிர ரயில்வே அணிக்காகவும் விளையாடியிருக்கிறேன்.

    புரோ கபடி பற்றி?
    புரோ கபடி மிகக் கடினமான ஒன்று. அதிக நுட்பங்கள் நிறைந்தது. கடின உழைப்பு இருந்தால் மட்டுமே இங்கே ஜொலிக்க முடியும். தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும். புரோ கபடிக்கு அடுத்தபடியாக இன்று உலக அளவில் பிரபலமான கபடிப் போட்டிஎதுவும் இல்லை என்று நினைக்கிறேன். தேசிய போட்டிகளில் விளையாடும் போது அதில் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள், பரிசுத் தொகை மட்டுமே கிடைக்கும். அது தொடர்பான சாதனைகள் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்த எந்த பதிவும் இருக்காது. ஆனால், புரோ கபடி போட்டியில் எங்களுடைய ஆட்டம், நாங்கள் பெற்ற புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதை எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், மற்ற விளையாட்டு வீரர்களைப் போன்று நாங்களும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறோம். அனைத்துக்கும் மேலாக புரோ கபடிக்கு சர்வதேச அளவில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    புரோ கபடி அனுபவம் பற்றி கூற முடியுமா?
    புரோ கபடியின் முதல் சீசனில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். முதல் 3 சீசன்களில் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடினேன். 4-ஆவது சீசனில் தபாங் டெல்லி அணிக்காக ஆடினேன். இந்த சீசனில் யு-மும்பா அணிக்காக களமிறங்கியிருக்கிறேன்.

    இந்த சீசனில் அணிகளின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
    அதைப் பற்றிய உங்களது பார்வை?

    அணிகள் அதிகரிப்பால் ஜூனியர் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளம் வீரர்கள் அனைவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நான் அனுபவமிக்க வீரர்தான். இருப்பினும், தற்போது களத்துக்கு வந்துள்ள இளம் வீரர்கள் என் போன்றவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடுகிறார்கள்.

    நடப்பு சீசனில் உங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?
    இந்த சீசன் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இந்திய கபடி அணியின் கேப்டன் அனூப் குமார் தலைமையிலான எங்கள் அணி பலம் வாய்ந்ததே. ஆகவே, அடுத்து வரும் ஆட்டங்களில் சிறப்பாக வெற்றிகளை குவிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai