முதல் நாளில் இந்தியா 344 ரன்கள் குவிப்பு! புஜாரா, ரஹானே சதம்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் சதம் எடுத்துள்ளார்கள்... 
முதல் நாளில் இந்தியா 344 ரன்கள் குவிப்பு! புஜாரா, ரஹானே சதம்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் சதம் எடுத்துள்ளார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்துள்ளது. 

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட கோலி தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இலங்கை அணி.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். அபினவ் முகுந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராகுலும் தவனும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடினார்கள். இதனால் இந்திய அணி 52 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. முதல் டெஸ்ட் போல இங்கும் வேகமாக ரன்களை அடிக்க முயன்ற தவன், 35 ரன்களில் பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு புஜாராவும் ராகுலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். இந்திய அணி 26.5 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்தது.

இதன்பின் ராகுல் 72 பந்துகளில் அரை சதம் எடுத்தார். வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்தப் போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் களமிறங்கியவுடனே அரை சதமெடுத்து அணியினர் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார்.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 52, புஜாரா 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இதன்பின்னர் துரதிர்ஷ்டவசமாக 57 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் ராகுல். பின்னர் வந்த கோலி நம்பிக்கையுடன் தொடங்கினாலும் 13 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 112 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இருவருடைய கூட்டணி சற்று வேகமாகவும் ரன்களைக் குவித்ததால் 4-வது விக்கெட்டுக்கு 104 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்தார்கள். அதிலும் அரை சதம் எடுத்தபிறகு புஜாராவின் ஆட்டம் வேகமெடுத்தது. 

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. புஜாரா 89, ரஹானே 41 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு 164 பந்துகளில் 100 ரன்களைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 13-வது சதமாகும். இலங்கையில் அவர் அடிக்கும் 3-வது சதமாகும். தன்னுடைய 50-வது டெஸ்டை விளையாடும் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்தார். டிராவிட் போல புஜாராவும் 84-வது இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்தார். சுனில் கவாஸ்கர், சேவாக் ஆகிய இருவரும் 81 இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்து இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்கள். அடுத்த வரிசையில் உள்ள டிராவிடுடன் இணைந்துள்ளார் புஜாரா.

இதன்பிறகு புஜாரா - ரஹானே கூட்டணி 273 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தது. புஜாராவுக்கு நல்ல இணையாக அமைந்த ரஹானேவும் சதமடித்து அசத்தினார். அவர் 151 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்துள்ளது. புஜாரா 128, ரஹானே 103 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com