சுடச்சுட

    

    கேல் ரத்னா விருது: ஜஜாரியா, சர்தார் சிங் பெயர் பரிந்துரை

    By DIN  |   Published on : 04th August 2017 03:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    award

    விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பாரா ஒலிம்பியன் தேவேந்திர ஜஜாரியா, இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
    கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முதல் பாரா ஒலிம்பியன் ஜஜாரியா ஆவார். பாரா ஒலிம்பிக்கில் இரு தங்கம் வென்ற ஜஜாரியாவின் பெயரை விருதுக்கான முதல் தேர்வாகவும், அதற்கடுத்தபடியாக சர்தார் சிங்கையும் பரிந்துரைத்துள்ளது விருதுக் கமிட்டி.
    ஈட்டி எறிதல் வீரரான ஜஜாரியா 2004-இல் நடைபெற்ற ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக்கிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக்கிலும் தங்கம் பதக்கம் வென்றவர். இதுதவிர 2013 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றுள்ளார்.
    இது தொடர்பாக 36 வயதான ஜஜாரியா கூறியதாவது: ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றபோதே இந்த விருதை நான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்போது ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. எனினும் இப்போது எனது கடின உழைப்பை அங்கீகரித்திருப்பதற்காக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேநேரத்தில் இப்போது எனக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன்.
    நான் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றபோதெல்லாம் அதை உடனடியாக எனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட முடியவில்லை. ஆனால் இப்போது கேல் ரத்னா விருது தொடர்பான செய்தி எனது குடும்பத்தினருடன் இருக்கிற நேரத்தில் வந்திருக்கிறது. இதுபோன்ற மகிழ்ச்சியான தருணத்தை எனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவது இதுவே முதல்முறையாகும் என்றார்.
    கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 31 வயதான சர்தார் சிங், இந்தியாவின் தலைசிறந்த மிட்பீல்டர்களில் ஒருவர் ஆவார். இவர், 2008 அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகித்தபோது, இளம் வயதில் கேப்டன் பதவியை பிடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.
    2010, 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் சர்தார் சிங்கும் இடம்பெற்றிருந்தார். 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் கனவு அணியில் இடம்பிடித்தார். 2015-இல் பத்மஸ்ரீ விருதை வென்ற சர்தார் சிங், இப்போது கேல் ரத்னா விருதைப் பெறவிருக்கிறார்.
    இது குறித்து அவர் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வருகிறேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. கேல் ரத்னா விருது, விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதாகும். இதற்கான அனைத்து பெருமைகளும் எனது சகவீரர்களையே சேரும். அவர்கள் இல்லாவிட்டால் இப்போது நான் சாதித்திருக்கும் எதுவுமே சாத்தியமாகியிருக்காது' என்றார்.
    அர்ஜுனா விருது: மாரியப்பன் உள்ளிட்ட 3 தமிழக வீரர்கள் பெயர் பரிந்துரை
    அர்ஜுனா விருதுக்கு 17 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன், தமிழக தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஹர்மன்பிரீத் கெளர், டென்னிஸ் வீரர் சாகேத் மைனேனி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


    அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் விவரம்


    வி.ஜே.சுரேகா (வில்வித்தை), குஷ்பிர் கெளர் (தடகளம்),
    ஆரோக்ய ராஜீவ் (தடகளம்), பிரசாந்தி சிங் (கூடைப்பந்து),
    தேவேந்திரோ சிங் (குத்துச்சண்டை), சேதேஷ்வர் புஜாரா (கிரிக்கெட்), ஹர்மன்பிரீத் கெளர் (மகளிர் கிரிக்கெட்), அய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து), எஸ்.எஸ்.பி.செளராஷியா (கோல்ஃப்),
    எஸ்.வி.சுநீல் (ஹாக்கி), ஜஸ்விர் சிங் (கபடி), பி.என்.பிரகாஷ்
    (துப்பாக்கிச் சுடுதல்), அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்),
    சாகேத் மைனேனி (டென்னிஸ்), சத்யவர்த் காடியன் (மல்யுத்தம்),
    மாரியப்பன் (பாரா தடகளம்), வருண் பட்டி (பாரா தடகளம்).


    மாரியப்பன் நெகிழ்ச்சி
    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன், கடந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த ஜனவரியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது அவருடைய பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரில் பயிற்சி முகாமில் இருக்கும் மாரியப்பன் இது தொடர்பாக கூறியதாவது: அர்ஜுனா விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 2.10 மீ. உயரம் தாண்ட வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai