புரோ கபடி: தெலுகு டைட்டன்ஸுக்கு 5-ஆவது தோல்வி
By DIN | Published on : 04th August 2017 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய தெலுகு டைட்டன்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 43-36 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது. தெலுகு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக 5-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது பாட்னா. அதேநேரத்தில் கேப்டன் ராகுல் செளத்ரியின் அபார ஆட்டத்தால் தெலுகு டைட்டன்ஸ் அணி இரு முறை சரிவிலிருந்து மீண்டது. எனினும் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பாட்னா அணி, பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அசத்தலாக ஆடியது. அதனால் தொடர்ச்சியாக 11 புள்ளிகளை சேர்த்தது அந்த அணி. எனினும் கடைசிக் கட்டத்தில் ஓரளவு புள்ளிகளை சேர்த்த தெலுகு டைட்டன்ஸ் அணி மோசமான தோல்வியை தவிர்த்தது. இறுதியில் பாட்னா பைரேட்ஸ் 43-36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
பாட்னா தரப்பில் ரைடர் பிரதீப் நர்வால் 12 புள்ளிகளையும், மானு கோயத் 10 புள்ளிகளையும் பெற்று தந்தனர். தெலுகு டைட்டன்ஸ் தரப்பில் ராகுல் செளத்ரி 12 புள்ளிகளை எடுத்தார்.
இன்றைய ஆட்டங்கள்
பெங்களூரு புல்ஸ்-தமிழ் தலைவாஸ்
நேரம்: இரவு 8
புணேரி பால்டான்- தபாங் டெல்லி
நேரம்: இரவு 9
இடம்: நாகபுரி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்