இந்தியா 622; இலங்கை 50/2

இந்திய அணி 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்பிறகு விளையாடிய இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள்...
இந்தியா 622; இலங்கை 50/2

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்பிறகு விளையாடிய இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் 133 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் வெளியேறினார் புஜாரா. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா - ரஹானே ஜோடி 217 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அஸ்வின் களமிறங்கி வழக்கம்போல தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. 6-வது களமிறங்கியுள்ள அஸ்வின், அணியில் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து விளையாடி இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி அளித்தார். 

இதனிடையே இன்னும் நிறைய ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, புஷ்பகுமாரா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி 132 ரன்களில் வீழ்ந்தார். ரஹானே - அஸ்வின் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு வந்த சாஹா, வழக்கம்போல கவனமாக விளையாடித் தாக்குப்பிடித்தார்.

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 120 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 47, சாஹா 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அஸ்வின் அரை சதமெடுத்த பிறகு, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஆடவந்த பாண்டியா வேகமாக 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். 134.3 ஓவர்களில் இந்திய அணி 500 ரன்களை எட்டியது. இதன்பிறகு அஸ்வின் போல பொறுப்புடன் விளையாடிய சாஹா, 113 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் பின்ன இந்திய அணி 149 ஓவர்களில் 550 ரன்களைத் தொட்டது.

இன்று ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார். சாஹா - ஜடேஜா ஜோடி 97 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ஓவர்களில் 553 ரன்களை எடுத்தது. சாஹா 59, ஜடேஜா 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சதமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாஹா,  67 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முகமது சமி இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 19 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் வீழ்ந்தார். வேகமாக ரன்கள் குவித்த ஜடேஜா 70 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. ஜடேஜா 70, உமேஷ் யாதவ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இலங்கைத் தரப்பில் ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு விளையாடிய இலங்கை அணி, 2-வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. தரங்கா ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். 25 ரன்கள் எடுத்த கருணாரத்னே அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.

2-வது நாள் முடிவில் இலங்கை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. மெண்டிஸ் 16, சண்டிமல் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் மீதமுள்ள நிலையில் 572 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com