சுடச்சுட

  

  சிறுவர்களுக்கு உத்வேகம் தரும் ஜூனியர் கபடி!

  By ந.காந்திமதிநாதன்  |   Published on : 05th August 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  junior-kabadi

  ஹைதராபாதில் நடைபெற்ற ஜூனியர் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.ஓபுல் ரெட்டி பப்ளிக் பள்ளி அணியினர்.

  புரோ கபடியின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கபடிப் போட்டி பிரபலமாகி வருகிறது. இந்தக் கபடி, சிறுவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதாகவும், குறிப்பாக 14 வயதுக்குள்பட்ட ரசிகர்கள் அதிகளவில் இருப்பதாகவும் புரோ கபடியை நடத்தி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் தெரிவிக்கிறது.
  ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளுடன் ஒப்பிடுகையில், புரோ கபடி போட்டிக்குத்தான் அதிக அளவில் இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டியைக் காணும் சிறுவர்கள் 80 சதவீதம் என்றால், புரோ கபடியைக் காணும் சிறுவர்கள் சுமார் 104 சதவீத அளவுக்கு இருக்கிறார்கள் என்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம்.
  புரோ கபடியின் தலைசிறந்த பார்வையாளர்களாக இருக்கும் இந்த சிறுவர்களை கபடி வீரர்களாக மாற்றும் முயற்சியாக பள்ளிகள் இடையே ஜூனியர் கபடி போட்டியை நடத்தி வருகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இந்தப் போட்டி, புரோ கபடி போட்டி நடைபெறும் 12 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. இதற்காக, அந்தந்த நகரங்களில் 8 பள்ளி அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த அணியின் மாணவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
  ஜூனியர் கபடி போட்டியில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுகின்றன. அதில் வெல்லும் இரு அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றன. இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி ஜூனியர் கபடி போட்டியின் சாம்பியன் என்ற பெருமையைப் பெறுகிறது. ஹைதராபாதில் நடைபெற்ற ஜூனியர் கபடி போட்டியில் 8 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில் பி.ஓபுல் ரெட்டி பப்ளிக் பள்ளி அணி 23-13 என்ற புள்ளிகள் கணக்கில் ஹைதராபாத் பப்ளிக் பள்ளி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
  ஜூனியர் கபடி இரு காரணங்களுக்காக தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று, சிறுவர்கள் கபடி விளையாட்டை விரைவாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். மற்றொன்று, பார்வையாளர்களாக இருக்கும் சிறுவர்களை, கபடி வீரர்களாக உருவாக்குவது.
  மிகப்பெரிய போட்டியில் கலந்து கொள்கிறோம் என்ற உணர்வை சிறுவர்களுக்கு கொடுக்கும் வகையில், புரோ கபடி போட்டிகள் நடக்கும் களத்திலேயே ஜூனியர் கபடி போட்டியும் நடத்தப்படுகிறது. அந்தப் போட்டியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது. இது கபடி விளையாடுவதற்கான ஒரு உந்துதலை அவர்களுக்கு அளிக்கிறது.
  இந்தப் போட்டியில் பங்கேற்க 12 முதல் 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சமனற்ற முறையில் இருப்பதை தவிர்ப்பதற்காக எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
  இப்போது ஜூனியர் கபடியில் விளையாடும் சிறுவர்களுக்கு, நாளை புரோ கபடியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். தற்போது இதில் விளையாடும் சிறுவர்கள், நாளை பள்ளி கல்லூரிகளின் கிளப்புகளுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் கபடியை தனக்கான வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் சிறுவர்களுக்கு, இது ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கும். இதனால் வரும் காலங்களில் புரோ கபடி அணிகளுக்கு ஏராளமான திறமையான வீரர்கள் கிடைப்பார்கள். அதனால் புரோ கபடியின் தரம் மிகப்பெரிய உச்சத்தை எட்டும்.
  புரோ கபடி போட்டியின் தரத்திலேயே ஜூனியர் கபடி போட்டியும் நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் களத்தின் அளவும், ஆட்ட நேரமும் சிறுவர்களுக்கு ஏற்றாற்போல குறைக்கப்பட்டுள்ளது. புரோ கபடி மொத்தம் 40 நிமிடங்கள் (20+20) நடைபெறுகிறது. ஜூனியர் கபடி போட்டி 10 நிமிடங்கள் (5+5) மட்டுமே நடத்தப்படுகிறது.
  இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஜூனியர் கபடி போட்டிக்காக சிறுவர்களை தேர்வு செய்தபோது அவர்களுடைய திறமையை பார்த்து நாங்கள் வியந்தோம். இது குறித்த அறிமுகத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவையே எழவில்லை. அவர்கள் நன்றாக விளையாடுவதுடன், மூத்த வீரர்களைப் போன்றே 'ஆங்கிள் ஹோல்ட்', 'டேக்கிளிங்', 'டுப்கி', 'ஃபிராக் ஜம்ப்' போன்ற உத்திகளை மிகச்சிறப்பாக கையாள்கிறார்கள்.
  அடுத்த ஆண்டில் ஜூனியர் கபடியை இதைவிட பெரிதாக நடத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எதிர்காலத்தில் இதிலிருந்து இந்திய கபடி அணியின் கேப்டன் கூட உருவாகலாம். கபடியை உலக அளவில் பிரபலப்படுத்துவதே எங்களின் நோக்கம். மகளிர் கபடியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai