ஐசிசி தரவரிசை: இரு பிரிவுகளில் ஜடேஜா முதலிடம்!

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என இரு பிரிவிலும்..
ஐசிசி தரவரிசை: இரு பிரிவுகளில் ஜடேஜா முதலிடம்!

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என இரு பிரிவிலும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடர்கிறார். அதேசமயம், ஆல்ரவுண்டர்கள் பிரிவில் கடந்தமுறை வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் இருந்தார். அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா. 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான புதிய பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்களில் முதன்மையாக சேதேஷ்வர் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். விராட் கோலி, ரஹானே ஆகியோர் முறையே 5-வது மற்றும் 6-வது இடங்களில் உள்ளார்கள்.

பந்துவீச்சாளர்கள் பிரிவில் ஜடேஜா முதலிடத்திலும் ஆண்டர்சன் மற்றும் அஸ்வின் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-ம் இடங்களிலும் உள்ளார்கள். 

ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஜடேஜா முதலிடத்திலும் ஷாகிப் அல் ஹசன், அஸ்வின் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-ம் இடங்களிலும் உள்ளார்கள். மொயீன் அலி 4-ம் இடம் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஜடேஜா.

எனினும், ஐசிசி விதிமுறையை மீறியதற்காக ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com