சுடச்சுட

    

    உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் ஜமைக்கா வீரர் ஒமர் மெக்லியாட்

    By DIN  |   Published on : 09th August 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    leod

    110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த மகிழ்ச்சியில் மெக்லியாட் (இடமிருந்து 2-ஆவது).

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர் ஒமர் மெக்லியாட் தங்கம் வென்றார்.
    இதன் மூலம் இந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமைக்காவுக்கான முதல் தங்கத்தை வென்று தந்த பெருமையை மெக்லியாட் தனதாக்கியுள்ளார்.
    16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவின் ஒமர் மெக்லியாட் 13.04 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.
    அவருக்கு அடுத்தபடியாக, நடப்பு சாம்பியனாக இருந்த ரஷியாவின் செர்கெய் ஷுபென்கோவ் 0.1 விநாடி பின்தங்கி 2-ஆவது இடம் பிடித்தார். ஊக்கமருந்து புகார் காரணமாக ரஷிய தடகள சம்மேளனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டைச் சேர்ந்த செர்கெய் பொதுவான வீரராக பங்கேற்றார். ஹங்கேரியின் பலாஜஸ் பாஜி வெண்கலம் வென்றார்.
    வெற்றிக்குப் பிறகு பேசிய மெக்லியாட் கூறுகையில், 'இந்த சீசனில் ஜமைக்காவுக்கான முதல் தங்கத்தை வென்றுவிட்டேன். கொண்டாட்டமான தருணத்தை மீட்டுள்ளேன். இதைச் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
    முந்தைய போட்டிகளில் இதே நாட்டைச் சேர்ந்த மின்னல் வேக மனிதரான உசைன் போல்ட், வீராங்கனை எலைன் தாம்சன் தங்கப் பதக்க வாய்ப்பை நழுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நடப்பு உலக சாதனை வீரரான அமெரிக்காவின் ஏரிஸ் மெரிட் 5-ஆவது இடம் பிடித்தார். இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இது அமெரிக்காவுக்கான முதல் தோல்வியாகும். அதேபோல், கடந்த 1983-ஆம் ஆண்டு முதலான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்கா பதக்க வாய்ப்பை நழுவிட்டது இது முதல் முறையாகும்.
    மும்முறை தாண்டுதல்: இதனிடையே ஆடவர் பிரிவு மும்முறை தாண்டுதல் போட்டியில் வெனிசூலாவின் யுலிமார் ரோஜாஸ் தங்கம் வென்றார். மகளிர் பிரிவு சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் போலாந்தின் அனிதா லோடார்ஸிக் முதலிடம் பிடித்தார்.
    மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் ஃபெய்த் கிபைகான் 4 நிமிடம் 2.59 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    நிர்மலா ஏமாற்றம்
    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை நிர்மலா ஷியோரான், அரையிறுதியில் 7-ஆவது இடம் பிடித்தார்.
    பந்தயத்தின் 2-ஆவது ஹீட்ஸில் பங்கேற்ற அவர், 53.07 விநாடிகளில் இலக்கை எட்டி கடைசி போட்டியாளருக்கு முந்தைய நபராக வந்தார். பந்தய இலக்கை 51.28 விநாடிகளில் எட்டியதை தனது தனிப்பட்ட 'பெஸ்ட்'-ஆக வைத்துள்ள போதிலும், இந்தப் போட்டியில் அவர் ஏமாற்றம் அளித்தார்.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai