சுடச்சுட

  
  JADEJA

   

  ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டர்களுக்கான பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா செவ்வாய்க்கிழமை முதலிடத்துக்கு முன்னேறினார்.
  ஏற்கெனவே டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  ஜடேஜா, 438 புள்ளிகளுடன் ஆல்ரவுண்டர்களில் முதலிடத்தில் உள்ளார். முன்னதாக அந்த இடத்தில் இருந்த வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் தற்போது 431 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
  சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ஜடேஜா 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், இரு இன்னிங்ஸ்களும் சேர்த்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதில் 2-ஆவது இன்னங்ஸில் மட்டும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
  இப்பங்களிப்பின் காரணமாக அவர் தற்போது ஏற்றம் கண்டுள்ளார். அத்துடன், பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் ஜடேஜா 9 இடங்கள் முன்னேறி 51-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
  அவர் தவிர பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா ஓரிடம் முன்னேறி 3-ஆவது இடத்துக்கு வந்துள்ள நிலையில், கேப்டன் கோலி 5-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
  அதேபோல், அஜிங்க்ய ரஹானே 5 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்துக்கு முன்னேற, கே.எல்.ராகுல் 737 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளார். விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா, 4 இடங்கள் முன்னேறி தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 44-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-ஆவது இடத்திலும் தொடர்கின்றனர்.
  பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் ஓரிடம் கீழிறங்கி 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் முறையே 20 மற்றும் 22-ஆவது இடங்களில் உள்ளனர்.
  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி, பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் முறையாக 21-ஆவது இடத்துக்கு வந்ததுடன், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 18-ஆவது இடத்திலும், ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 4ஆவது இடத்திலும் உள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai