சுடச்சுட

  

  மோ பாராவுடன் ஓடியது வாழ்வின் சிறந்த அனுபவம்: லட்சுமணன்

  By DIN  |   Published on : 11th August 2017 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lakshmanan

  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பிரிட்டனின் மோ பாராவுடன் இணைந்து ஓடியது வாழ்வின் சிறந்த அனுபவம் என தமிழக தடகள வீரர் லட்சுமணன் தெரிவித்தார்.
  லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரரான லட்சுமணன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும், 13 நிமிடம், 35.69 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் தனது 'பெர்சனல் பெஸ்ட்டை' பதிவு செய்தார்.
  அதன்பிறகு அவர் கூறியதாவது: ஏதாவது ஒரு போட்டியில் மோ பாராவுடன் பங்கேற்க வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. அது இப்போது நனவாகியிருக்கிறது. மோ பாராதான் எனக்கு உத்வேகம் தந்தவர். அவருடன் இணைந்து ஓடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் இணைந்து ஓடியது எனது வாழ்வின் சிறந்த அனுபவமாகும். போட்டியில் பங்கேற்றபோது நான் எனது ஓட்டத்தில்தான் தீவிர கவனம் செலுத்தினேன். மோ பாரா எப்படி ஓடினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவருடன் இணைந்து ஓடியது எனக்கு உற்சாகமாக இருந்தது.
  லண்டன் சூழல் நன்றாக இருந்தது. வெயில் குறைவாக இருந்தது. எனது சக போட்டியாளர்களில் ஒருவராக மோ பாராவும் இருந்தார். இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த போட்டியாளர்களுடன் பங்கேற்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்காது. இங்கு மழை காரணமாக ஓடுதளம் ஈரப்பதமாக இருந்தது மட்டும்தான் பிரச்னையாக இருந்தது.
  இந்தப் போட்டியில் தேசிய சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கினேன். அதற்காக கடந்த 10 நாள்களாக இங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டேன். தேசிய சாதனையை முறியடிக்க முயற்சித்தேன். ஆனால் 5 விநாடிகளில் அந்த வாய்ப்பை இழந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது. அடுத்த முறை நிச்சயம் தேசிய சாதனையை முறியடிப்பேன். கடைசிச் சுற்று கடினமாக இருந்ததால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. தேசிய சாதனையை முறியடித்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். அதில் 13 நிமிடம், 28 விநாடிகளில் இலக்கை எட்ட விரும்புகிறேன். என்னால் 13 நிமிடம், 22 விநாடிகளில் இலக்கை எட்ட முடியும் என என்னுடைய பயிற்சியாளர் தெரிவித்தார். எனது ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க விரும்புகிறேன். இது என்னுடைய முதல் உலக சாம்பியன்ஷிப். அடுத்த முறை சிறப்பாக செயல்படுவேன் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai