ஆட்ட நாயகன் பாண்டியா; தொடர் நாயகன் தவன்! 

தொடர் ஆரம்பிக்கும்முன்பு நான் ஹாங்காங்கில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தேன். நடந்தவை எல்லாம்...
ஆட்ட நாயகன் பாண்டியா; தொடர் நாயகன் தவன்! 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஷிகர் தவன் 119, பாண்டியா 108, ராகுல் 85 ரன்கள் குவிக்க, 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி  181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமெடுத்த ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில் இரு சதங்கள் அடித்த தவன், தொடர் நாயகனாகத் தேர்வானார். 

முழு உடற்தகுதி அடையாததால் முரளி விஜய் டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து அணியில் ஷிகர் தவன் சேர்க்கப்பட்டார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி தொடர் நாயகன் விருதைப் பெற்று அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இதன்மூலமாகக் கோரியுள்ளார் தவன். 

இதுகுறித்து ஷிகர் தவன் கூறியதாவது: தொடர் ஆரம்பிக்கும்முன்பு நான் ஹாங்காங்கில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தேன். நடந்தவை எல்லாம் எனக்குச் சாதகமாக அமைந்துள்ளன. அணி எனக்கு ஆதரவாக இருந்தது. அதிரடியாக விளையாடுவது என் இயல்பு. அதுபோல விளையாடுவது பிடித்துள்ளது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. அணியில் எல்லா இடங்களுக்கும் பலத்த போட்டி உள்ளது என்றார். 

ஆட்ட நாயகன் பாண்டியா கூறியதாவது: என்னுடைய முதல் சதத்தை இங்குப் பெற்றது மிக்க மகிழ்ச்சி. சூழல் எனக்குச் சாதகமாக இருந்தது. எப்ப்போதுமே எனக்கென்று ஓர் இலக்கு வைத்திருப்பேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் எடுப்பது சுலபமல்ல. அதற்குக் கடின உழைப்பு தேவைப்படும். எந்த நிலையில் ஆடச்சொன்னாலும் எனக்குச் சம்மதம்தான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com