Enable Javscript for better performance
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கை 'ஒயிட் வாஷ்'- Dinamani

சுடச்சுட

    
    champion

    கோப்பையுடன் இந்திய அணியினர்.

    இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
    முதல் டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்திலும், 2-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இப்போது 3-ஆவது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்துள்ளது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தத் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கியது.
    இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108, கே.எல்.ராகுல் 85 ரன்கள் குவித்தனர். இலங்கைத் தரப்பில் சன்டாகன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
    பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சன்டிமல் 48 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, இலங்கை அணிக்கு 'பாலோ-ஆன்' கொடுத்தது. அதைத் தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்திருந்தது.
    181-க்கு ஆல்அவுட்: 3-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே 16 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து புஷ்பகுமாரா 1 ரன்னிலும், குஷல் மென்டிஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரையும் முகமது சமி வீழ்த்தினார். இதனால் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.
    இதையடுத்து தினேஷ் சன்டிமலுடன் இணைந்தார் மேத்யூஸ். இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடிய இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. சன்டிமல் 36 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இலங்கையின் சரிவு தவிர்க்க முடியாததானது.
    மேத்யூஸ் 35, தில்ருவான் பெரேரா 8, சன்டாகன் 8 என அடுத்தடுத்து வெளியேற, மறுமுனையில் வேகமாக ரன் சேர்த்த டிக்வெல்லா 52 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக லஹிரு குமாரா 10 ரன்களில் வெளியேற, இலங்கையின் 2-ஆவது இன்னிங்ஸ் 74.3 ஓவர்களில் 181 ரன்களோடு முடிவுக்கு வந்தது.
    இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் தட்டிச் சென்றார்.
    ஸ்கோர் போர்டு
    இந்தியா-487 (ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108,
    கே.எல்.ராகுல் 85, சன்டாகன் 5வி/132, புஷ்பகுமாரா 3வி/82).
    இலங்கை-135 (தினேஷ் சன்டிமல் 48, குல்தீப் யாதவ் 4வி/40,
    முகமது சமி 2வி/17, அஸ்வின் 2வி/22).


     துளிகள்...
    1 வெளிநாட்டு மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஓர் அணியை 'ஒயிட் வாஷ்' ஆக்குவது இதுவே முதல்முறையாகும். அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக (3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில்) இந்தியா ஓர் அணியை 'ஒயிட் வாஷ்' ஆக்குவது 5-ஆவது முறையாகும்.
    2 இலங்கை தனது சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 'ஒயிட் வாஷ்' ஆவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்னர் 2004-இல் ஆஸ்திரேலியாவிடம் 'ஒயிட் வாஷ்' ஆகியிருக்கிறது. அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக டெஸ்டில் இலங்கை அணி சந்தித்த 6-ஆவது 'ஒயிட் வாஷ்' தோல்வி (3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில்) இதுவாகும்.
    3 இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் 4-ஆவது பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா. அதேநேரத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்தியா பெற்ற 2-ஆவது பெரிய இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும்.
    5 இலங்கை அணி சந்தித்த 5-ஆவது மோசமான இன்னிங்ஸ் தோல்வி இதுவாகும். அதேநேரத்தில் சொந்த மண்ணில் அந்த அணி சந்தித்த 2-ஆவது மோசமான இன்னிங்ஸ் தோல்வி இது.
    3 இந்தத் தொடரில் 3 போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது இந்தியா. இதன்மூலம் ஒரு தொடரில் அதிகமுறை முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற பெருமையைப் பெற்றுள்ளது. இலங்கைத் தொடரில் முதல் போட்டியில் 309, 2-ஆவது போட்டியில் 439, 3-ஆவது போட்டியில் 352 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai